விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தலைப்பு விவகாரம்: நாளை மறுநாள் தீர்ப்பு!
அதுவரை 'மெர்சல்' திரைப்படத்தை வெளியிடவும், மெர்சல் என்கிற தலைப்பை விளம்பரப்படுத்தவும்...


நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள 'மெர்சல்' திரைப்படத்தை வெளியிடவும், மெர்சல் என்கிற தலைப்பை விளம்பரப்படுத்தவும் விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை தொடர்கிறது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஏ.ஆர். பிலிம் பேக்டரி உரிமையாளரான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மெர்சல் படத்துக்கு எதிராக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நான் உறுப்பினராக உள்ளேன். புதிதாக திரையிடப்படும் திரைப்படங்களின் பெயர்களை இந்தச் சங்கத்தில் பதிவு செய்வதன் மூலம் படத்துக்கான பெயர் வைப்பது தொடர்பான குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் தலைப்புகளை பதிவு செய்துவிட்டால் மற்றவர்கள் அதே தலைப்பில் படம் எடுக்க இந்த சங்கம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், எனது மகன் ஆரூத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி, 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பில் படத்தை தயாரித்து வெளியிட கடந்த 2014 ஆம் ஆண்டே தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். ஆனால், 'மெர்சல்' என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடிக்கும் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த 'மெர்சல்' என்ற தலைப்பு நான் பதிவு செய்துள்ள 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பை ஒத்து இருக்கிறது. 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பை பயன்படுத்தி அதிக பொருட்செலவில் படம் எடுக்க உள்ள நிலையில், 'மெர்சல்' என்ற தலைப்பில் விஜய் படம் வெளியானால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். இதுதொடர்பாக நான் ஏற்கெனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்மனுதாரர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி விரைவில் 'மெர்சல்' என்ற பெயரிலேயே விஜய் நடிக்கும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே, தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் நிறுவனமோ அல்லது அதன் உரிமையாளரான என்.ராமசாமியோ, 'மெர்சல்' என்ற பெயரைப் பயன்படுத்தவோ அல்லது இந்தப் பெயரைப் பயன்படுத்தி படத்தை வெளியிடவோ தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு, கடந்த மாத இறுதியில் நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை 'மெர்சல்' என்ற பெயரில் திரைப்படத்தின் விளம்பரத்தையோ, படத்தையோ வெளியிட இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் மெர்சல் படத் தலைப்பு குறித்த விசாரணை இன்றும் தொடர்ந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை நாளை மறுநாளுக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதுவரை 'மெர்சல்' திரைப்படத்தை வெளியிடவும், மெர்சல் என்கிற தலைப்பை விளம்பரப்படுத்தவும் விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...