ஃபோட்டோ ஷூட் என்றால் அவருக்கு லட்டு மாதிரி; ஆனால் இவருக்கு ரொம்பத் தயக்கம்! யார் அந்த அவர், இவர்?!

கமலைப் புகைப்படத்தில் பதிவு செய்வது ஒரு புகைப்படக் கலைஞனாக எனக்கு மிக எளிதாக இருக்கும். ஆனால் கார்த்திக் அப்படி அல்ல, அவருக்கு ஃபோட்டோஷூட் என்றால் அலர்ஜி. மிகுந்த தயக்கம் காட்டுவார்.
ஃபோட்டோ ஷூட் என்றால் அவருக்கு லட்டு மாதிரி; ஆனால் இவருக்கு ரொம்பத் தயக்கம்! யார் அந்த அவர், இவர்?!
Published on
Updated on
3 min read

90 களில் கார்த்திக் மிகத் துடிப்பாக நடித்துக் கொண்டிருந்தார். இயக்குனர்கள் தங்களது படங்களில் துள்ளலான ஹீரோ வேடங்களை எல்லாம் கார்த்திக்கை நினைத்தே முதலில் திட்டமிட்டார்கள். அவர் ஒத்து வரவில்லை என்றால் மட்டுமே பிறர் எனும் அளவுக்கு அத்தனை துள்ளலாக இருந்தது கார்த்திக்கின் நடிப்பு. நடிப்பு மட்டுமல்ல, கார்த்திக் தன்னுடைய ஆன் ஸ்கிரீன் பிரசன்டேஷனிலும் அசத்தக் கூடியவரே! அதனால் தான் ஸ்டில்ஸ் ரவி, சென்னை எக்ஸ்பிரஸில் பகிர்ந்து கொண்ட இந்த நாஸ்டால்ஜியா விளக்கத்தை வாசிக்கும் போது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது எனக்கு. 

கேமராவுக்கு முன் போஸ் கொடுப்பதில் கார்த்திக் மிகவும் கூச்ச சுபாவி என்கிறார் ரவி. தமிழ் நடிகர்களில் கேமரா என்றாலே மிகவும் கூச்சப்பட்டு ஒதுங்கும் நடிகர்கள் சிலருண்டு, அவர்களில் கார்த்திக்கும் ஒருவர். சில நடிகர்கள் கேமராவுக்குப் போஸ் கொடுப்பதில் சமர்த்தாக இருப்பார்கள்... அவர்களில் சிறந்தவர் யார் என்றால் அது கமல்ஹாசன். கமலுக்குத் தெரியும், எந்த விதமாகப் போஸ் கொடுத்தால் படம் அழகாகவும், நேர்த்தியாகவும் வரும் என்று. கமலைப் புகைப்படத்தில் பதிவு செய்வது ஒரு புகைப்படக் கலைஞனாக எனக்கு மிக எளிதாக இருக்கும். ஆனால் கார்த்திக் அப்படி அல்ல, அவருக்கு ஃபோட்டோஷூட் என்றால் அலர்ஜி. மிகுந்த தயக்கம் காட்டுவார். 

ஆனால் மேலே உள்ள இந்தப் புகைப்படம் 80 களின் துவக்கத்தில் எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்தில் அன்றைய இளம் கார்த்திக்கின் துறு, துறுப்பும், எனர்ஜியும் ஒருங்கே பதிவாகியிருக்கிறது. நான் கார்த்திக்கை எடுத்த புகைப்படங்களில் இது மிகச்சிறந்த ஷாட். 

கிழக்கு வாசல் படத்துக்காக கார்த்திக்கின் தீவிர ரசிகர்களானவர்களில் நானும் ஒருவன். அந்தப்படத்தில், கார்த்திக் மற்றும் ரேவதியின் நடிப்பு விவரணைக்கு அப்பாற்பட்டது. கார்த்திக்குடன் நான் சில திரைப்படங்களில் மட்டுமே இணைந்து பணியாற்றியிருந்தாலும் அதற்கு முன்பாக ஒரு பத்திரிகை புகைப்படக்காரனாகப் பலமுறை அவரைப் புகைப்படத்தில் பதிவு செய்திருக்கிறேன் நான். நிஜமாகவே அவர் மிக அருமையான மனிதர். இன்றும் கூட சோஷியல் மீடியாக்களில் நானே பதிவு செய்த அவரது புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, ’புகைப்படம் என்றூ வருகையில், நீ ஒரு மந்திரவாதி’ என்று தனது கமெண்ட்டுகள் மூலம் என்னைப் பாராட்டத் தயங்கியதில்லை அவர். 

புகைப்படங்களுக்குப் போஸ் தருவதில் கார்த்திக்குக்கு எவ்வளவு தயக்கமிருந்தாலும் கூட அவரது துடிப்பான அசைவுகளை என் கேமராவில் பதிவு செய்ய இப்போதும் நான் மிக மிக விரும்புகிறேன். எனத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் ரவி.

ஸ்டில்ஸ் ரவியின் கேமராவில் கார்த்திக்கைப் பார்க்க நமக்கு மட்டும் கசக்குமா என்ன?

ஸ்டில்ஸ் ரவியின் முகநூல் பக்கத்தில் காணக்கிடைத்த வேறு சில பழைய புகைப்படங்களும் கூட நம்மை அந்தந்த காலகட்டத்துக்கே அழைத்துச் செல்வதாய் இருக்கின்றன. அவற்றுள் சில உங்களுக்காக...

80 களில் கண்ணன் வந்து பாடுகிறான் காதில் மெல்ல... என ஜானகியின் ஹஸ்கி வாய்ஸில் வாயசைத்து ஸ்டைலாக நடனமாடும் ராதிகாவை அந்நாளில் அல்ல இந்நாளிலும் கூடதொலைக்காட்சி மியூசிக் சேனல்களில் இரவுகளின் அமைதியில்  ரசிக்காதோர் யார்... இந்த ஃபோட்டோவைக் கிளிக்கியது ஸ்டில்ஸ் ரவி.

நமக்கெல்லாம் ஞாபகத்தில் இருப்பது கடலோரக் கவிதைகள் ரேகாவும், புன்னகை மன்னன் ரேகாவும் தான்... இது அவர் நடித்த இனியொரு சுதந்திரம் எனும் மிகச் சிறந்த திரைப்படத்துக்கான ஸ்டில்...

இது நடிகை ரோஜா அவரது ஹேர் டிரஸ்ஸரை எஜமானியாக்கிப் பார்த்த போது எடுத்த ஸ்டில்லாம்.

Image courtesy: stills ravi's facebook page & google.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com