அட! சத்யம் திரையரங்கின் புதுமையான முயற்சி - டு நாட் டிஸ்டர்ப்!

நிம்மதியாகப் படம் பார்ப்பதற்கான உத்தரவாதத்தைத் தருகிறது சத்யம் திரையரங்கம்...
அட! சத்யம் திரையரங்கின் புதுமையான முயற்சி - டு நாட் டிஸ்டர்ப்!

ஒரு நல்ல படத்தைப் பார்க்க திரையரங்குக்குச் செல்கிறீர்கள்.

முதல் காட்சியிலிருந்தே படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அந்த நேரம் பார்த்து - சார் இது என்ன ரோ, உங்க சீட் என்ன எனத் தாமதாக வந்த ஒருவர் உங்களை நச்சரிக்கிறார். 

உங்கள் முன்வரிசையில் உள்ளவருக்குத் திரையரங்கு ஊழியர் படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, ஸ்நாக்ஸ் கொண்டுவருகிறார். திரை சுத்தமாக மறைக்கிறது.

அழுவாச்சி படம். நீங்களும் சேர்த்து அழுதுகொண்டிருக்கும்போது பக்கத்து இருக்கையில் உள்ள குழந்தை உங்கள் தோளில் கை போடுகிறது. முன்வரிசையில் உள்ள குழந்தை இருக்கையிலிருந்து எழுந்து நின்று நடனமாடுகிறது.

படத்தின் பரபரப்பான காட்சி. பக்கத்து இருக்கையில் உள்ளவருக்கு போன் வருகிறது. ஆமா, நான் வர லேட் ஆகும். நாலு சப்பாத்தி சுட்டு வைச்சுடு என்று நாலு வரிசைகளுக்குக் கேட்பது போல லஜ்ஜையின்றி உரையாடும் நபர்.

இத்தனை இடைஞ்சல்களுக்கு மத்தியில் எப்படி நிம்மதியாகப் படம் காணமுடியும்?

முடியும் என்கிறது சத்யம் திரையரங்கம். திரையரங்கில் படத்தை ரசித்துப் பார்ப்பதற்காகப் பல்வேறு புதுமைகளைக் கொண்டுவந்துள்ள சத்யம் திரையரங்கம், டு நாட் டிஸ்டர்ப் என்கிற மற்றொரு புதுமையான நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி அதன் திரையரங்கில் ஒவ்வொரு புதன் அன்றும் டு நாட் டிஸ்டர்ப் என்றொரு பிரத்யேகக் காட்சி திரையிடப்படவுள்ளது. அதாவது இதற்கு நீங்கள் டிக்கெட் வாங்கினால் மேலே உள்ள எந்தவொரு தொந்தரவையும் நீங்கள் எதிர்கொள்ளமாட்டீர்கள். இதன்மூலம் நிம்மதியாகப் படம் பார்ப்பதற்கான உத்தரவாதத்தைத் தருகிறது சத்யம் திரையரங்கம். 

இந்தக் காட்சிக்கு வருபவர்கள், தாமதமாக வருகை தரக்கூடாது. காட்சி நேரத்துக்குப் பிறகு ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் அனுமதி கிடையாது. இதனால் காட்சி ஆரம்பித்த பிறகு திரையரங்கின் கதவுகள் திறக்கப்படாது. அடுத்தவருக்கு எந்தவொரு தொந்தரவையும் தரக்கூடாது. திரையரங்கில் குப்பைகள் போடக்கூடாது. முன்வரிசை இருக்கை மீது கால் வைக்கக்கூடாது. தள்ளக்கூடாது. குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும் போன்ற விதிமுறைகள் டு நாட் டிஸ்டர்ப் காட்சிகளில் அமல்படுத்தப்படவுள்ளன. 

செப்டம்பர் 20 அன்று இக்காட்சிகள் சத்யம் திரையரங்கில் தொடங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com