/

'கோச்சடையான்' படத்துக்கு வாங்கிய கடன்: நிலுவைத் தொகையைச் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜூலை 3-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்தோ, அவரைச் சார்ந்த நிறுவனமோ நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்கிற...

News image
Updated On :16 ஏப்ரல் 2018, 8:01 am

எழில்

'கோச்சடையான்' படத்திற்காக வாங்கியிருந்த ரூ.6.20 கோடி கடன் நிலுவைத் தொகையை பெங்களூரைச் சேர்ந்த 'ஆட் -பீரோ' தனியார் நிறுவனத்துக்கு 12 வாரங்களுக்குள் வழங்குமாறு லதா ரஜினிகாந்தின் 'மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் ' நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

ரஜினி நடிப்பில் அவரது இளைய மகள் சௌந்தர்யா, 'கோச்சடையான்' எனும் பெயரில் '3டி' அனிமேஷன் படத்தை இயக்கினார். இப்படம் 2014, மே 23-இல் வெளியானது. படம் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்புப் பணிக்காக 'ஆட்-பீரோ' விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள 'மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்' நிறுவனத்துக்கு கடன் அளித்திருந்தது. அப்போது, கடன் உத்தரவாதத்தை லதா ரஜினிகாந்த் அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதற்கான ஒப்பந்தத்தின்போது ஆட்-பீரோ நிறுவனத்துக்கு கோச்சடையான் திரைப்பட உரிமையை வழங்குவதாக 'மீடியா ஒன் குளோபல்' நிறுவனம் ஒப்புக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 'பட உரிமையையும் வழங்கவில்லை. தங்களிடம் வாங்கிய பணத்தையும் கொடுக்கவில்லை . ஒப்பந்தத்தின்படி திரைப்பட உரிமையை கொடுக்காமல் வேறு நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் படம் வெளியிடும் உரிமையை அளித்துவிட்டனர்' என ஆட்-பீரோ நிறுவனம் புகார் தெரிவித்தது. மேலும், வாங்கிய கடன் தொகையில் ரூ.8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், மீதமுள்ள தொகையைத் தரவில்லை என்றும் ஆட்-பீரோ நிறுவனம் தெரிவித்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம், பெங்களூர் காவல் நிலையத்தில் லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு எதிராக புகார் அளித்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், போதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி ஆட்-பீரோவின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஆட்-பீரோ நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதில் அளிக்க லதா ரஜினிகாந்துக்கு 2016, ஜூலை 8-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு தில்லி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகோய், ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, லதா ரஜினிகாந்த் தரப்பில் மூத்த வழக்குரைஞர் நளினி சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார். அப்போது, நிலுவைத் தொகை எப்போது திருப்பி அளிக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், லதா ரஜினிகாந்த் தலைமையிலான குளோபல் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 12 வாரங்களுக்குள் கடன் நிலுவைத் தொகை ரூ.6.20 கோடியை 'ஆட் -பீரோ' நிறுவனத்துக்கு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கோச்சடையான் பட விவகாரத்தில் ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 10 கோடி பாக்கியில், ரூ 9.20 கோடி வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள ரூ. 80 லட்சத்தை விரைவில் கொடுத்துவிடுவோம், இந்தப் பாக்கிக்கும், லதா ரஜினிகாந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மீடியா ஒன் நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மீடியா ஒன் நிறுவனத்தின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். ஜூலை 3-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்தோ, அவரைச் சார்ந்த நிறுவனமோ நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்கிற தங்களுடைய முந்தைய உத்தரவு தொடரும் என்று உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.