‘பர்மணு’ ஜான் ஆப்ரஹாமின் புதிய திரைப்படம் தேச பக்தியை வளர்க்குமா?

நடந்து முடிந்த சரித்திர உண்மைகளின் அடிப்படையில் தற்போது அந்நிகழ்வு திரைப்படமாக இயக்கப்படவிருக்கிறது.
‘பர்மணு’ ஜான் ஆப்ரஹாமின் புதிய திரைப்படம் தேச பக்தியை வளர்க்குமா?

1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி இந்திய ராணுவம், பொக்ரானில் வெற்றிகரமாக அணுகுண்டுச் சோதனை நிகழ்த்தியது. இதை இப்படி ஒரு வரிச் செய்தியாக சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால், இந்த ஒரு வரிச் செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்வதற்காக இந்திய ராணுவமும், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. 

அணுமின் திட்டத்துக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் தொழில்நுட்ப அளவில் ஆதரவு தந்திருந்தன. எனினும், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடக் கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தன. இந்நிலையில்தான் 1974 மே 18-ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு நடத்தியது மேற்கத்திய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ‘அமைதியான அணுக்கரு வெடிப்பு’ என்று பெயரிட்டதன் மூலம் இந்த நிபந்தனையை மீறவில்லை என்று இந்திய அரசு அறிவித்தது. புத்தர் பிறந்த தினமான புத்த பூர்ணிமா அன்று நடத்தப்பட்டதால் இந்நிகழ்வு ‘சிரிக்கும் புத்தர்’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.

1998-ல் மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனை நடத்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு தயாரானது. இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே அணுகுண்டு சோதனைக்கு நரசிம்மராவ் தலைமையிலான அரசு தயாரானது. ஆனால், பொக்ரானில் அணுகுண்டு சோதனைக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்தது, உலகத்தைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க செயற்கைக் கோள்களின் கழுகுக் கண்களில் பட்டுவிட்டது. இதனால், இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வாஜ்பாய் அரசு அதை நிறைவேற்றிக்காட்டியது.

அதாவது, அமெரிக்க செயற்கைக் கோள்களின் பார்வையில் படாத வகையில் ஏற்பாடுகளை இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மேற்கொண்டது. சுழன்றுகொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் பூமியில் பொக்ரான் பகுதியிலிருந்து வேறு திசைக்குத் திரும்பியிருந்த கால இடைவெளியில் அணுகுண்டு சோதனையைச் சத்தமின்றி முடித்துவிட்டது இந்தியா. மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் டைரக்டர்-ஜெனரலாக அப்துல் கலாம் இருந்தபோது இந்த சோதனை நடைபெற்றது.

சோதனை முழு வெற்றியடைந்ததாக அப்துல் கலாம் குறிப்பிட்டார். மே 11-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை வெடித்து இந்தியா சோதனை செய்தது. அதே ஆண்டு மே 13-ம் தேதி இரு சிறிய குண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனைக்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பில் கிளிண்டனால் இதை நம்ப முடியவில்லை. அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., தேசியப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இவ்விஷயத்தில் இந்தியாவிடம் ஏமாந்துவிட்டதாக அமெரிக்க அரசு கருதியது. இதற்கிடையே, இந்தியாவுக்குப் போட்டியாக 1998 மே 28-ல் சாகாய் எனும் இடத்தில் பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதையடுத்து, இரண்டு நாடுகளையும் அமெரிக்கா கடுமையாகக் கண்டித்தது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாமீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதெல்லாம் வரலாறு.

இந்த நிகழ்வுகளை எல்லாம் மக்கள் மறந்து விடக்கூடாதே... 

நடந்து முடிந்த சரித்திர உண்மைகளின் அடிப்படையில் தற்போது அந்நிகழ்வு திரைப்படமாக இயக்கப்படவிருக்கிறது.

திரைக்கதையின் அடிநாதம் 1998 பொக்ரான் அணுகுண்டுச் சோதனை. இந்தியில் தயாராகிக் கொண்டிருக்கும் இத்திரைப்படத்துக்கு இந்தியில் ‘பர்மணு’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இயக்கம், அபிஷேக் சர்மா. நாயகன் ஜான் ஆப்ரஹாம். 

இந்த திரைப்படத்தில் ஜூனியர் பீயூரோகிரேட் அதிகாரி அஸ்வத் ரெய்னா கதாபாத்திரத்தில் தான் நடிக்கவிருப்பதால் இயல்பான மனிதன் போன்ற தோற்றமும், ஸ்பெஷல் பாடிலாங்வேஜும் இருந்தால் போதும் ஜிம்முக்குப் போய் பலியாகக் கிடந்து உடலில் 6 பேக் மெயின்டெயின் செய்ய வேண்டிய அவசியமில்லை என இயக்குனர் கண்டிப்பாகக் கூறி விட்டார். எனவே இத்திரைப்படத்துக்காக நான் எனது வழக்கமான ரொட்டீன்களில் இருந்து மாறி என் தோற்றத்தை அடியோடு மாற்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். படம் உண்மைச் சம்பவத்தை, நிஜமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அதற்கேற்ப எனது பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் இந்தக் கதையை உள்வாங்கிக் கொண்டு இயல்பான நடிப்பைத் தர பல  வொர்க் ஷாப்புகள் நடத்தப்பட்டன. அவை எல்லாவற்றிலும் கலந்து கொண்டு பக்காவாகத் தயாராகி வந்திருக்கிறேன் என்கிறார் ஜான்.

இந்தியில் பர்மணு என்றால் அணு என்று பொருள், அதோடு சூப்பர் மேன் போல ஒரு காமிக் கேரக்டரின் பெயரும் பர்மணு.

மே 25 அன்று வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தை தயாரித்திருப்பது ஜீ ஸ்டுடியோஸ்.

இந்த பர்மணு வெளிவந்து பொக்ரான அணுகுண்டுச் சோதனை நிகழ்த்தப்பட்ட விதத்தை தத்ரூபமாக விளக்கி இந்தியர்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்தால் சரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com