என்றுமே இசையோடு இணைந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று நான் விரும்புவேன்! பூர்ணிமா பாக்கியராஜ்!

என்றுமே இசையோடு இணைந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று நான் விரும்புவேன்! பூர்ணிமா பாக்கியராஜ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவரும். தற்போது சின்னதிரையிலும் முதல் முறையாக வலம் வந்து கொண்டிருக்கிறவருமான பூர்ணிமா பாக்யராஜ் தனக்கு "பிடித்த பத்து' பற்றி இங்கு சொல்கிறார்: 

வண்ணம்: வண்ணங்கள் மீது எனக்கு என்றுமே ஒரு வாஞ்சை உண்டு. குறிப்பாக பிங்க் கலர் என்றால் எனக்கு எப்பொழுதுமே விருப்பம் அதிகம். காரணம் என்ன தெரியுமா? இந்த வண்ணம் கண்களுக்கு குளிர்ச்சியாக, நம் மனதை மிருதுவாக வருடும் தன்மை கொண்டது என்பது என் எண்ணம். அதே போன்று நிலாவின் வண்ணமும் பிடிக்கும். இவை எல்லாமே நம்மை வசப்படுத்தும் வண்ணங்கள் என்று கூறினால் அது மிகையாகாது. 

இடம்: இருக்கும் இடமே நான் விரும்பும் இடம் என்று கூறலாம். ஏனென்றால், நாள்தோறும் இதே இடத்தில்தானே நாம் வளைய வளைய வந்து கொண்டிருக்கிறோம். ஆக, சென்னையில் என் வீடும், அதே போல் நான் வளர்ந்த மும்பை நகரமும் என்னால் மறக்க முடியாது. வெளிநாடு என்றால் எல்லோரும் விரும்பும் சுவிட்சர்லாந்துதான் என் விருப்பமும். அதன் இயற்கை அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

பயணம்: எனக்கு விருப்பமான ஒன்று. நான் 1991- ஆம் ஆண்டு உலகைச் சுற்ற முடிவெடுத்து லண்டன், பாரிஸ், அமெரிக்க, ஹாவாய், சிங்கப்பூர் என்று சுற்றி வந்தோம். எனக்கு தனியாக செல்ல என்றுமே பிடிக்காது. குடும்பத்துடன் அல்லது தோழிகளுடன் செல்வேன். வருடம் ஒரு முறை சுமார் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டிற்கு செல்வது, அதுவும் நெருங்கிய தோழிகளுடன் செல்வதை ஒரு கடமையாக வைத்துள்ளேன். 

சாப்பாடு: நான் சுத்தமான சைவம். எனக்கு தயிர் சாதம், சிப்ஸ் இருந்தாலே போதுமானது. வத்தக் குழம்பும், பருப்பு உசிலியும் கிடைத்து விட்டால் அமிர்தம். இவை எதுவும் கிடைக்க வில்லை என்றால் இருக்கவே இருக்கிறது bread, butter, jam. இதுவும் இல்லை என்றால் சாலட் என்று பல்வேறு காய்கறிகளை வெட்டி ஒரு தட்டில் வைத்து, அத்துடன் தயிரையும் சேர்த்து கொடுத்தாலும் போதும். என் மதிய உணவு முடிந்து விடும். இரவு என்ன இருக்கோ பார்த்துக் கொள்ளலாம். 

திரைப்படம்: "Sound of Music'என்ற ஆங்கிலப் படத்தை நான் இதுவரை சுமார் 30 முறை பார்திருப்பேன். ஹிந்தியில் "ஆராதனா' , "குச் குச் ஹோதா ஹை' போன்ற படங்களை சொல்லலாம். அன்று மும்பையில் நான் படித்த காலத்தில் ஒரு படம் பார்க்க 50 பைசா கொடுத்து டிக்கெட் வாங்கணும். கல்லூரியை கட் அடித்து விட்டு படம் பார்க்க போவோம். தமிழில் "அந்த 7 நாட்கள்' மற்றும் நானும் என் கணவரும் சேர்ந்து நடித்த "டார்லிங் டார்லிங்' என்ற படமும் பிடிக்கும்.

பாடல்: என்றுமே இசையோடு இணைந்த வாழ்க்கை வாழவேண்டும் என்று நான் விரும்புவேன். புகழ் பெற்ற பல ஹிந்தி பாடல்களை என் கல்லூரி நாட்களில் நான் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். தமிழில் கேட்டால் பல பாடல்களை நான் சொல்லவும் முடியும். மனதை விட்டு நீங்காத பாடல்களை சொல் என்றால் எனக்கு பாரதியார் பாடலான "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா', "நான் பேச நினைப்பதெல்லாம்', "பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப் பூ' போன்ற பாடல்கள்தான் என் நினைவிற்கு வருகிறது. 

நாவல்: நான் இன்று புத்தக புழு இல்லை என்றாலும் கல்லூரி நாட்களில் நான் படிக்காத ஆங்கில நாவல்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு எல்லாவிதமான நாவல்களையும் படித்து விடுவேன். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஆங்கிலதில் வெளிவந்து, மிக சிறப்பாக ஓடிய படம் "Gone With the Wind'. இதை நாவலாகவும் படித்திருக்கிறேன், படமாகவும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இந்த நாவலை எழுதியவர் அமெரிக்க ஆசிரியர் Margaret Munnerlyn Mitchell. அவர் தனது நாவலின் தலைப்பை கவிஞர் Ernest Dowson எழுதிய ஒரு கவிதையின் வரியில் இருந்து எடுத்துள்ளார். அது மட்டும் அல்லாமல் ஜெஃப்ர்ரி ஆர்ச்சர் எழுதிய நாவல்களையும் படித்துள்ளேன். இந்திய நாவலாசிரியர்களில் Chetan Bhagath எழுத்துகள் என்னை கவர்ந்தவை. 

நடிகை: அன்று நான் பார்க்க ஆசைப்பட்டது ஹிந்தி நடிகை ரேகா. நான் திரைப்பட நடிகையானவுடன் ஒரு முறை அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு சிம்பிளான மனுஷி என்று நான் வியந்து பார்க்கும் வண்ணம் அவரது சுபாவமும், பழகும் தன்மையும் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. ஒரு முறை அவருடன் பேசிக் கொண்டிருந்த போது மேக்கப் பற்றி பேச்சு திரும்பியது. படப்பிடிப்பென்றால் எப்படி மேக்கப் போட்டுக் கொள்ளவேண்டும். வெளியே செல்கிறோம் என்றால் எப்படி, வீட்டில் இருக்கிறோம் என்றால் என்ன செய்து கொள்ளவேண்டும் என்று ஒரு சிறிய வகுப்பே எனக்காக நடத்தி விட்டார். இன்று வரை அதைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். சிறந்த நடிகை மட்டும் அல்ல, நல்ல இதயம் உள்ளவர். 

பொழுதுபோக்கு: ஆரம்பத்தில் நடனம் தான் என்று இருந்த நான் திரைத்துறைக்கு வந்த பிறகு நேரமே இல்லை என்று தான் சொல்லவேண்டும். சிறு வயதில் நான் பாட்டு வகுப்பிற்கும், நடன வகுப்பிற்கும் செல்வதுண்டு. எனது பாட்டு ஆசிரியர் பாலாமணி அவர்கள்தான் ஷங்கர் மகாதேவன் அவர்களுக்கும், பாம்பே ஜெய்ஸ்ரீ அவர்களுக்கும் பாட்டு சொல்லிக் கொடுத்தவர் என்று கேள்விப்பட்டவுடன் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஒரு வேளை பாட்டை நான் தொடர்ந்திருந்தால் நல்ல பாடகி ஆகி இருப்பேனோ என்னவோ? 

குடும்பம்: எனது கணவர் பாக்யராஜ்தான் எனக்கு எல்லாமே. சிறந்த மனிதர், நல்ல வழிகாட்டி, ஒரு பிரச்னையை சரியாக உணர்ந்து நல்லது கேட்டது என்ன என்று சீர்தூக்கி பார்த்து முடிவெடுப்பவர். அந்த முடிவு என்றுமே சரியாகத் தான் இருக்கும். அவரை கணவராக அடைந்ததற்கு ஆண்டவனுக்கு நான் நன்றி சொல்கிறேன். எனது மகன் சாந்தனு சிறந்த நடிகன், சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். அவருக்கு ஏற்ற மனைவி என் மருமகள். மகள் சரண்யா உலகம் அறிந்த பெண். அளவான குடும்பம். சந்தோஷமான வாழ்க்கை. வேறு என்ன வேண்டும். 
- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com