டபுள் மீனிங் வசனங்கள் இல்லாத படம் இது! ஜருகண்டி இயக்குநர் பிச்சுமணி மற்றும் தயாரிப்பாளர் நிதின் சத்யாவுடன் நேர்காணல்!

'சென்னை 28', 'மங்காத்தா' உள்ளிட்ட படங்களில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த பிச்சுமணி எழுதி இயக்கும் படம் 'ஜருகண்டி'. 
டபுள் மீனிங் வசனங்கள் இல்லாத படம் இது! ஜருகண்டி இயக்குநர் பிச்சுமணி மற்றும் தயாரிப்பாளர் நிதின் சத்யாவுடன் நேர்காணல்!

'சென்னை 28', 'மங்காத்தா' உள்ளிட்ட படங்களில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த பிச்சுமணி எழுதி இயக்கும் படம் 'ஜருகண்டி'. 

ஜெய், ரெபா மோனிகா, ரோபோ சங்கர், டேனியல், அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நிதின் சத்யா தயாரிக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் பிச்சுமணி கூறுகையில், 'இந்தக் கதையை கோடம்பாக்கத்தில் இருக்கிற அனைத்து தயாரிப்பாளர்களிடமும் சொல்லியிருக்கிறேன். கதை பிடித்து, இறுதி கட்டத்தை எட்டும் போது ஏதாவது பிரச்னைகள் வந்து படம் நின்று போகும். அப்படித்தான் இந்தக் கதை நடிகர் நிதின் சத்யாவிடம் சொல்லப்பட்டது. கதை பிடித்தவுடனே எந்த தயக்கமும் இன்றி படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார். 

நமக்கு தேவை என்று வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் தொடங்க நினைத்து வங்கியில் கடன் கேட்டுச் செல்லும் ஹீரோவுக்கு, கடன் மறுக்கப்படுகிறது. இதனால் வேறு வழிகளில் கடன் வாங்கி பிரச்னைகளில் சிக்கிக் கொள்கிறார் ஹீரோ. அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் வெளிவரவிருக்கும் இந்த நிலையில் மக்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற ரிசல்டுக்காக காத்திருக்கிறோம்’ என்றார்.

நடிகர் தயாரிப்பாளர் நிதின் சத்யா மற்றும் இயக்குநர் பிச்சுமணி ஆகிய இருவருடன் சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் அருண்குமார் சேகர் எடுத்த நேர்காணலின் சில துளிகள் :

ஜருகண்டியின் துவக்கப் புள்ளி எது?

பிச்சுமணி : நிதின் படம் தயாரிக்க நிறைய பேர்கிட்ட கதைகள் கேட்கறாருன்னு கேள்விப்பட்டேன். எடிட்டர் பிரவீண் என்கிட்ட இருந்த ஒன்லைனை நிதினிடம் சொல்லி, கதை சொல்ல அறிமுகம் செஞ்சு வைச்சார். என்னுடைய இயக்குநர் வெங்கட் பிரபுவும் என் கதையைப் பத்தி ஏற்கனவே சொல்லியிருந்தார். இவங்க ரெண்டு பேரோட சிபாரிசாலத்தான் என்னால நிதினை சந்திச்சு கதை சொல்ல முடிஞ்சுது.

சிபாரிசு இல்லாம இருந்திருந்தா நீங்க பிச்சுமணியோட கதையைக் கேட்டிருப்பீங்களா?

நிதின் சத்யா : பிச்சுமணியை எனக்கு ஆரம்ப காலத்திலிருந்தே தெரியும். அவரோட வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு பிடிக்கும். தயாரிப்பாளராகணும்னு முடிவு செஞ்சதும் நிறைய கதைகள் கேட்கத் தொடங்கினேன். எனக்கு நேரடியா தெரியாதவங்க கிட்டத்தான் கதை கேட்டுட்டு இருந்தேன். கதை சொல்லணும்னு என்னை அவர் அப்ரோச் பண்ணியிருந்தா நிச்சயம் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லியிருப்பேன். அந்தக் கால அவகாசத்துக்குப் பிறகு சந்திச்சிருப்பேன். இப்ப என்ன கொஞ்சம் சீக்கிரமே சந்திச்சிட்டேன். அவ்வளவு தான் வித்யாசம். மத்தபடி இந்த ஸ்கிரிப்ட் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்திருச்சு. 

ஜருகண்டி - இந்த டைட்டில் வித்யாசமாக இருக்கிறதே?

நிதின் : ஜருகண்டி தலைப்பு பற்றி எல்லோரும் கேட்கிறாங்க. தெலுங்கு வார்த்தையை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கேட்காதவர்களே இல்லைன்னு சொல்லலாம். இந்தத் திரைக்கதையில் ஒரு வேகம் இருக்கும். அதை குறிப்பதற்காகவே இதை வைத்தோம். வேகம் என்றே வைக்கலாம். அது ஏற்கனவே ஒரு படத்துக்குக்கு வைச்சிட்டாங்க. போலவே 'ரன்', 'ஸ்பீடு' என எல்லாப் பெயர்களிலும் படம் வந்து விட்டதால், 'ஜருகண்டி' என்றே வைத்து விட்டோம். படம் பார்த்த நீங்களே டைட்டில் சரியா இருக்குன்னு உணர்வீங்க...

பிச்சுமணி : வெங்கட் பிரபு சாருக்கு தான் நன்றி சொல்லணும். இது அவரோட டைட்டில். நிதின் ஸ்க்ரிப்ட் படிச்சிட்டு ஓகே சொன்னதும், இந்த டைட்டில் சூப்பரா  இருக்கும்னு எனக்கு விட்டுக் கொடுத்துட்டார்.

படத்தோட ட்ரெயிலரைப் பார்க்கறப்ப மாநகரம் படத்தோட சாயல் தெரியற மாதிரி இருக்கே?

பிச்சுமணி : அப்படியா? இது ஒரு வித்யாசமான கதை. ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்னொரு கதாபாத்திரத்தோட ஒத்திசைவா இயங்கும். அதே சமயம் ஒவ்வொரு கேரக்டரும் இன்னொன்னை பாதிக்கும்.. படத்தோட க்ளைமேக்ஸ் வரை ஒரு ஹைபர்லிங்க் இருந்துட்டே இருக்கும்.

நிதின் : மாநகரம் படத்துக்கும் ஜருகண்டிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுங்க...

பிச்சுமணி - இது எந்த படத்தையும் பார்த்து இன்ஸ்பயர் ஆகி எழுதலை...யோசிச்சு எழுதினேன்

ட்ரெய்லர் பார்க்கறப்ப இந்தப் படத்தோட டோன் வித்யாசமாக இருந்துச்சு. அதைப் பத்தி சொல்லுங்க...

நிதின்.: இந்தப் படத்துக்கு பெரிய சப்போர்ட் எடிட்டிங். பிரவீண் KL பிரமாதப்படுத்தியிருக்கிறார். அதோட ஒளிப்பதிவு படத்தோட தரத்தை உயர்த்தியிருக்கு. RD ராஜசேகரோட கைவண்ணம். இவங்க ரெண்டு பேரோட பங்களிப்பு படத்துக்கு புதிய கலர் கொடுத்திருக்கு.

பிச்சுமணி : ராஜசேகர் சாரைப் போல ஒருத்தரை நான் பாத்ததே இல்லைன்னு சொல்லலாம். தினமும் ஷூட் போகறதுக்கு முன்னாடி ஸ்கிரிப்டை ரெண்டு மூணு தடவை படிச்சிடுவார். ஒவ்வொரு ஷாட்டுக்கு முன்னாடியும் அந்தக் காட்சிக்குத் தேவையான எல்லாத்தையும் தரோவா செக் பண்ணிட்டுத்தான் பதிவு பண்ணுவார். ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன் இவங்களோட வொர்க் பண்ணியிருக்கார். நீ நடிகர்களை நடிக்க வைச்சிடு, மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன்னு சொல்வாரு...

படத்தோட நடிகர்கள் தேர்வு பற்றி சொல்லுங்க..

பிச்சுமணி : இந்தக் கதைக்கு பொருத்தமானவர்களை நாங்க தேர்வு செய்து நடிக்க வைச்சிருக்கோம்.

நிதின் : இவங்க இந்த ரோலுக்கு சரியா இருப்பாங்கன்னு முதன் முதலா நாங்க பிக்ஸ் பண்ணவங்களே அந்தந்த ரோலை பண்றாங்க. ஒரு மிடில் க்ளாஸ் லுக் ஹீரோவுக்கு வேணும் அதோட இந்தப் படம் ஆக்‌ஷன் காமெடி ஜானர், இந்த ரெண்டுக்கும் ஜெய் பொருத்தமா இருப்பாருன்னு முடிவு பண்ணோம். ரோபோ ஷங்கர், டானியல், ஆனி போப் இவங்கல்லாம் பிச்சுமணி மைண்ட்ல ஏற்கனவே கதை எழுதறப்பவே பிக்ஸ் ஆனவங்க...

ஹீரோயின் ரீபா மோனிகா ஜானை எப்படி தேர்ந்தெடுத்தீங்க?

நிதின் : இந்தப் படத்துக்கு புதுமுகம் வேணும்னு முடிவு செஞ்சோம். அழகா மட்டும் இருந்தா போதாது நல்ல நடிக்கத் தெரிஞ்சவங்களா இருக்கணும்னு நினைச்சோம். அதே போல ஒருத்தங்க கிடைச்சாங்க. ஆடிஷன் எடுத்துப் பார்த்து செலக்ட் பண்ணோம். ரொம்ப நல்லா பண்ணியிருக்காங்க.

பிச்சுமணி : படத்தோட ரெண்டாம் பகுதி முழுக்க அவங்களுக்கு ரோல் இருக்கும்.

வெங்கட் பிரபுவோட பாதிப்பு உங்க படத்துல இருக்குமா?

நிதின் : அவருக்கே தெரியாம குருநாதரோட பாதிப்பு இருக்கத்தான் செய்யும். தவிர்க்க முடியாது...வெங்கட் பிரபு ஒரு சீரியஸான சீனைக் கூட உடைச்சு தகர்த்தி அதுல இருக்கற காமெடியை வெளில கொண்டு வந்துடுவார். பிச்சுமணிக்குக்கும் அந்த பாதிப்பு இருக்கு. ஆனால் இவரோட ஸ்டைல் புதுசு......சொல்லப்போனா அதைவிடவும் சூப்பரா இருக்கு. 

பிச்சுமணி : இந்தப் படத்துல பப் பாடல்கள் கிடையாது, டூயட் இல்லை, ரெட்டை அர்த்த வசனங்கள் கிடையாது. மொத்தத்துல நீங்க குடும்பத்தோட தியேட்டருக்கு வந்து படம் பார்த்து ரசிக்கற மாதிரி ஜருகண்டி இருக்கும்.

நிதின் : (சிரிப்பு) நான்தான் சொன்னேனே..இவரோட ஸ்டைல்  வேற மாதிரி இருக்கும்ணு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com