Enable Javscript for better performance
காலா-ஒரு ரசிகனின் திரைப் பார்வை- Dinamani

சுடச்சுட

  
  kaala_pic

   

  பல தடைகளை தாண்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் வியாழக்கிழமை (ஜூன் 7) வெளியாகியது.

  ஈஸ்வரி ராவ், ஹூமா குரோஷி, நானா படேகர், சமுத்திரகனி ஆகியோரின் நடிப்பில் உருவான இந்தத் திரைப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? பார்க்கலாம்.

  மகாராஷ்டிர மாநிலம், மும்பை மாநகரின் மையப் பகுதியில் உள்ள தாரவி பகுதிதான் கதையின் களம். அந்தப் பகுதி மக்கள்தான் இந்தப் படத்தின் நாயகர்கள் என்று கூறினால் மிகையல்ல.

  தாராவி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அங்கே அதிகமாக வசித்து வருகிறார்கள்.

  ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய குடிசைப் பகுதி குடியிருப்புகள் இருக்கும் இடம் இந்த தாராவிதான்.

  குடிசைப் பகுதிகளை அகற்றிவிட்டு அந்தப் பகுதி மக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டடம் கட்டித் தருகிறோம் என்று அரசியல்வாதி நானா படேகர் களம் இறங்குகிறார்.

  ஆனால், 'தீப்பெட்டி சைஸில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒதுக்கப்படும் வீடு தங்களுக்குத் தேவையில்லை. அடிப்படைத் தேவையான தண்ணீர், கழிப்பிடம், குழந்தைகளுக்கு நல்ல கல்வி, இளைஞர்களுக்கு விளையாட மைதானம், உடற்பயிற்சிக் கூடம் இவையே போதும்' என்று அந்தப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

  இதற்கு அந்தப் பகுதி மக்களின் காவலனாக விளங்கும் கரிகாலன் (ரஜினிகாந்த்) முழு ஆதரவு தருகிறார். இதனால், ஹரிதாதா  எனும் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் நானா படேகருக்கும், காலா என்கிற கரிகாலனுக்கும் நேரடி மோதல் ஏற்படுகிறது.

  தாராவி பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்று துடிக்கும் ஹரிதாதாவின் எண்ணம் நிறைவேறியதா? மக்கள் செல்வாக்கை மட்டும் வைத்துக் கொண்டு அரசையும், அதிகாரத்தையும் கரிகாலனால் எதிர்க்க முடிந்ததா? என்பதே மீதிக் கதை.

  படத்தில் தான் ஏற்ற கரிகாலன் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் ரஜினி. கருப்பு வேஷ்டி, கருப்பு சட்டை, வெள்ளை தாடி என அவரது தோற்றமே ரசிகர்களை திரையரங்கை நோக்கி இழுத்துவிடும்.

  வழக்கமாக ரஜினி படங்களில் இருக்கும் ஒப்பனிங் இதில் இல்லை. இருப்பினும், அவரது அறிமுகத்தின்போது திரையரங்கில் கரவொலி எழாமல் இல்லை.

  சிறார்களுடன் கிரிக்கெட் விளையாடுவது போல் மிக சாதாரணமாகவே அவர் அறிமுகமாகிறார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுள்ளான் படத்தில் அவரது அக்காவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஈஸ்வரி ராவ். அவர்தான் கரிகாலன் மனைவியாக செல்வி கதாபாத்திரம் ஏற்று நடத்திருக்கிறார்.

  திரிஷா, நயன்தாரா என்று ஹிரோயின் பிம்பத்துக்குள் அடங்காத கதைக்கு ஏற்ற ஒருவரை தேர்வு செய்து நடிக்கவைத்ததற்காகவே இயக்குநர் பா.இரஞ்சித்தை பாராட்டலாம்.

  ஈஸ்வரி ராய் மறுபடியும் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கலாம். காலாவின் முன்னாள் காதலியாக ஹூமா குரோஷியும் கதாபாத்திரத்துக்கு பொருத்தம். முன்னாள் காதலியிடம் பேசும் காட்சிகள், நானா படேகருடன் காவல் நிலையம் மற்றும் அவரது வீட்டில் உரையாடும் காட்சிகளில் ரஜினியின் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிபோடுகிறார்.

  மேம்பாலத்தில் நடக்கும் சண்டை காட்சி ரஜினி ரசிகர்களுக்கு விருந்து. சமூகத்துக்கு நல்ல கருத்துகளை தன் படங்கள் வாயிலாகவும், தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் வாயிலாகவும் சொல்லிவரும் சமுத்திரகனி இந்தப் படத்தில் குடித்துக் கொண்டிருப்பது உறுத்தலாக இருக்கிறது.

  ஒளிப்பதிவாளர் மற்றும் தாராவியை தத்ரூபமாக திரையில் கொண்டு வந்த கலை இயக்குநர் ஆகியோரின் உழைப்பு தெரிகிறது. பல இடங்களில் பின்னணி இசை தேவையில்லை. தனக்கு கிடைத்த இடத்தில் இசைப் பணியை நிறைவாக செய்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.  

  ஜல்லிக்கட்டு போராட்டம், தூத்துக்குடி போராட்டம் என்பது போன்ற தமிழகத்தில் நடைபெற்ற பல போராட்டங்களின் தாக்கம் இந்தப் படத்தில் இருக்கிறது.

  அறவழியில் நடைபெறும் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் எப்படி புகுந்து அந்தப் போராட்டத்தை திசை திருப்புகிறார்கள் என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது.

  இடைவேளை வரை சற்று நீளமாக இருப்பது போன்ற உணர்வை தருகிறது. இரண்டாவது பாதியிலும் மித வேகத்திலேயே செல்கிறது திரைக்கதை. ராவணனாக கரிகாலனையும், ராமனாக நானா படேகரையும் சித்திரித்து முடிவில் ராவணன் வெல்வது போன்று திரையில் காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

  மறைமுகமாக சில குறியீடுகளும் படத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரஜினி வீட்டில் ராவண காவியம் புத்தகம் இருப்பது, ராமரை நானா படேகர் வழிபடுவது என்று சில காட்சிகள் படத்தில் உள்ளன. இந்தப் படம் மெட்ராஸ், கபாலி பாணியில் அரசியலை பேசும் ஒரு இரஞ்சித் படமாக இருக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai