டிராஃபிக் ராமசாமியாக எதிர்காலம் நினைவுகூரப் போவது ஒரிஜினல் ராமசாமியையா அல்லது எஸ்.ஏ.சந்திரசேகரையா?

கமல் கூறியதென்னவோ படத்தைப் பற்றிய தனது பாராட்டுக்களைத் தான். ஆனால், இதில் அபஸ்வரமாக ஒலிப்பது இனிவரும் தலைமுறை டிராஃபிக் ராமசாமியாக நினைவுகூரவிருப்பது எஸ்.ஏ.சந்திரசேகரை எனும் புகழ்மொழியே!
டிராஃபிக் ராமசாமியாக எதிர்காலம் நினைவுகூரப் போவது ஒரிஜினல் ராமசாமியையா அல்லது எஸ்.ஏ.சந்திரசேகரையா?

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் கதை அவரது பெயரிலேயே திரைப்படமாகி வருவது அனைவருக்கும் தெரிந்த செய்தி. இதில் டிராஃபிக் ராமசாமி வேடமேற்று நடித்திருப்பது இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர். எஸ்.ஏ.சி இந்தப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்ததற்குக் காரணம் ஒரு இயக்குனராக அன்றி சக மனிதராக டிராஃபிக் ராமசாமி என்ற மனிதருக்கும், தனக்கும் சமூகப் பிரச்னைகள் சார்ந்த சிந்தனைகளில் நிலவிய ஒற்றுமையே தான் இந்தப் படத்தில் நடிக்க விரும்பியதற்கான காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தற்போது அத்திரைப்படம் குறித்த தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருந்த விஷயம்;

‘முதலில் ஒரு படத்தைப் பார்க்கும் போது பாத்திரப் பொருத்தம் என்று சொல்வார்கள். அது அமைவது கடினம், பெரிய, பெரிய நடிகர்களுக்கே சில சமயம் அமையாது. அது இதில் அமைந்திருக்கிறது. அவர் அப்படி அமைத்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட இருவரும் நடந்து வரும் போது சகோதரர்கள் மாதிரி இருக்கிறார்கள் இருவரும். அதுவே ஒரு பிளஸ். பிற்பாடு ஒரு காலகட்டத்தில் இனி வரும் தலைமுறைக்கு யார் ட்ராஃபிக் ராமசாமி என்பது தெரியாமல் இந்த முகம் தான் ஞாபகமிருக்கும். அதுவும் தவறில்லை. அந்தப் பெயரும், அந்த உணர்வும் ஞாபகம் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் தமிழகம் மட்டுமல்ல இந்தியா’ இந்தியாவின் வெற்றி இந்த மாதிரி சாமானிய மனிதர்களால் தான் என்பது என்னுடைய கருத்து. அந்த வீரத்தை நாமும் பிரதிபலிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. எனக்கு படத்தின் டிரெய்லரைப் போட்டுக் காட்டினார்கள். முழுப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்ததென்னவோ உண்மை தான். ஆனால், கிட்டத்தட்ட படம் பார்த்து விட்ட சந்தோஷமே எனக்குக் கிடைத்து விட்டது.’
- என்பதே.
டிராஃபிக் ராமசாமி படத்தின் டிரெய்லர்...

கமல் கூறியதென்னவோ படத்தைப் பற்றிய தனது பாராட்டுக்களைத் தான். ஆனால், இதில் அபஸ்வரமாக ஒலிப்பது இனிவரும் தலைமுறை டிராஃபிக் ராமசாமியாக நினைவுகூரவிருப்பது எஸ்.ஏ.சந்திரசேகரை எனும் புகழ்மொழியே!.

அதெப்படி டிராஃபிக் ராமசாமி எனும் தனியொரு சாமானியர் இந்த சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக தன்னியல்பாக பல ஆபத்தான அரசியல்வாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து ஆளும் வர்க்கத்தை எதிர்த்து உயிரைத் துச்சமாக மதித்து போராடிய போராட்டத்திற்கான பலனை திரைக்கு மட்டுமே முகம் கொடுத்து நடிக்கவிருக்கும் இயக்குனரால் அறுவடை செய்ய முடியும்?! என்பது தான் புரியவில்லை.

இதைக் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேட்டால்... அவர்;

நான் இப்போதல்ல எம்ஜிஆர் காலத்திலிருந்தே சமூகப் பிரச்னைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறேன். டிராஃபிக் ராமசாமிக்கு ஈடாக நானும் எனது திரைப்படங்கள் வாயிலாக அராஜகங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்திருக்கிறேன். என்பாரோ?!

சிவாஜியின் நடிப்பில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றொரு திரைப்படம் வந்தது. அந்தத் திரைப்படம் பார்த்த, பார்க்கப் போகிற எந்தத் தலைமுறையினருக்கும் இப்போது கட்டபொம்மன் என்ற பெயரைக் கேட்டதும்  முதலில் ஞாபகம் வரக்கூடியது சிவாஜியின் முகமே. ஏனெனில் ஒரிஜினல் கட்டபொம்மன் எப்படி இருப்பார் என யாருமே கண்டதில்லை. அப்படியான பட்சத்தில் சிவாஜியின் முகம், கட்டபொம்மனின் முகமாக தலைமுறை தோறும் நினைவில் பதிவதைப் பற்றி நம்மால் ஏதும் செய்ய இயலாது. ஆனால், டிராஃபிக் ராமசாமி நம் சமகாலத்தில் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரை இன்றுள்ள தலைமுறையினர் அனைவருக்குமே தெரியும். தெரியாதவர்கள் கூகுளில் தேடினால் உடனே கிடைத்து விடப்போகிறது அவரது முகமும், மொத்த  சரித்திரமும். அப்படியிருக்க எஸ்.ஏ.சந்திரசேகரை இனிவரும் தலைமுறையினரும் கூட நடிகராகவோ, இயக்குனராகவோ தான் நினைவில் நிறுத்த வேண்டுமே தவிர டிராஃபிக் ராமசாமி எனும் ஒரு சமூக ஆர்வலராக அல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com