Enable Javscript for better performance
‘நான் ஈ’ புகழ் நானி ஏற்று நடத்தவிருக்கும் தெலுங்கு பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் லிஸ்ட்!- Dinamani

சுடச்சுட

  

  ‘நான் ஈ’ புகழ் நானி ஏற்று நடத்தவிருக்கும் தெலுங்கு பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் லிஸ்ட்!

  By சரோஜினி  |   Published on : 16th May 2018 11:47 AM  |   அ+அ அ-   |    |  

  z_nani

   

  தமிழில் நடிகர் கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் - சீஸன் 2 க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து தெலுங்கு மா டிவியில் ஈகா (தமிழில் நான் ஈ) திரைப்படப் புகழ் நடிகர் நானி தொகுத்து வழங்கவிருக்கும் தெலுங்கு பிக் பாஸ் சீஸன் 2 க்கான தகவல்கள் வெளிவந்துள்ளன. தெலுங்கில் பிக் பாஸின் முதல் பாகத்தை தொகுத்து வழங்கியவர் நடிகர் ஜூனியர் என் டி ஆர். 18 வாரங்கள் நடைபெற்ற அந்த போட்டியின் இறுதியில் நடிகர் சிவபாலாஜி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தமிழில் 100 நாட்கள் நடத்தப்பட்ட அந்த போட்டியின் இறுதியில் நடிகர் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

  பிக் பாஸ் போட்டிக்கான நிபந்தனைகள்...

  தமிழ், தெலுங்கு இரண்டு பிக்பாஸ் போட்டிகளுக்கும் நிபந்தனைகள் ஒரே மாதிரியானவையே.

  போட்டிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் எவராயினும் அவர்கள் தொடர்ந்து 100 நாட்களுக்கு வெளிஉலகத் தொடர்பே இன்றி பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக அமைக்கப்படும் பிக் பாஸ் வீட்டில் கழிவறை மற்றும் குளியலறைகள் தவிர சதா தங்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும் எண்ணற்ற கேமிராக்களின் மத்தியில் தங்களுக்குத் தாங்களே சமைத்துச் சாப்பிட்டு, தங்கியிருக்கும் வசிப்பிடத்தைச் சுத்தம் செய்து சக போட்டியாளர்களிடம் அனுசரணையாகவும் நட்போடும் கலந்து பேசி வாழ வேண்டும். இது தான் போட்டிக்கான விதி. இதில் நடு நடுவே பிக் பாஸ் சில டாஸ்குகளை அறிவிப்பார். அந்த டாஸ்குகளை போட்டியாளர்கள் தனியாகவோ, குழுவாகவோ வெற்றிகரமாக முடித்துக் காட்ட வேண்டும்.

  பிக் பாஸ் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் வாரம் ஒருமுறையோ அல்லது இருவாரங்களுக்கு ஒருமுறையோ பொதுமக்கள் அவர்களுக்கு அளிக்கும் ஓட்டுக்களின் அடிப்படையில், குறைந்த ஓட்டுக்களைப் பெற்று சக போட்டியாளர்களின் அதிருப்தியையும் பெற்றவர்கள் போட்டியிலிருந்து இடையில் நீக்கப்படுவார்கள். போட்டியின் கடைசி நாளான 100 நாட்களை பிக் பாஸ் வீட்டில் வெற்றிகரமாக எவர் நிறைவு செய்கிறார்களோ? எவர் இறுதி நாள் போட்டியில் மக்களிடையே அதிக ஓட்டுக்களைப் பெறுகிறார்களோ அவர்களே பிக் பாஸ் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதில் ரன்னர் எல்லாம் கிடையாது. ஒரே ஒரு வின்னர் மட்டுமே.

  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் 2 ல் நடிகை சிம்ரன், நடிகர் ராதாரவி முதல் எழுத்தாளர் சார் நிவேதிதா, நடிகை ராய் லட்சுமி, லட்சுமி மேனன், நடிகை ஓவியா, மெட்ராஸ் படப்புகழ் ரித்விகா, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் போட்டியாளர்களாகக் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில் போட்டியாளர்கள் லிஸ்டில் மாற்றம் இருக்கலாம்.

  தெலுங்கு பிக்பாஸ் 2 க்கான போட்டியாளர்களாக நடிகை மந்த்ரா (ராசி), நடிகர் தருண், தெலுங்குப் பாடகி கீதா மாதுரி, திருநங்கை சியாமளா தேவி, தேஜஸ்வி மதிவதா உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் கசிய விடப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலுமே ஜூன்  இரண்டாம் வாரம் முதல் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீஸன் 2 க்கான போட்டியாளர்கள் லிஸ்ட் குறித்து இன்னமும் சேனல் தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை. எனவே இந்த லிஸ்டில் கடைசி நிமிடம் வரை மாற்றங்கள் நிகழலாம்.

  கடந்த முறை ஒரு ட்ரையல் போல பிக் பாஸ் போட்டிகள் நடத்தப்பட்டதாகவும், இம்முறை மேலும் கிராண்ட்டாக இந்த ஷோவை நடத்த சேனல் நிர்வாகம் முயல்வதாகவும் நிர்வாகத்தரப்பில் இருப்பவர்கள் கூறியுள்ளனர். எது எப்படியோ பிக் பாஸ் ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டால் போதும் நம் மக்களுக்கு பிறகு 100 நாட்களுக்கு நாட்டின் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக அலசிக் காயப்போட பிக்பாஸ் போட்டி ஒன்று மட்டுமே மிஞ்சும் என்பதில் யாருக்கும் எவ்விதச் சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai