‘டங்கல்’ சிறுமி சாய்ரா வாஸிமின் அதிர்ச்சியூட்டும் சமூக ஊடகப் பகிர்வு!

‘டங்கல்’ சிறுமி சாய்ரா வாஸிமின் அதிர்ச்சியூட்டும் சமூக ஊடகப் பகிர்வு!

‘கடுமையான கவலை மற்றும் மனச்சோர்வில் இருக்கிறேன். அவ்வப்போது தற்கொலை செய்து கொள்ளலாமா? என்றுகூடத் தோன்றுகிறது.
Published on

‘கடுமையான கவலை மற்றும் மனச்சோர்வில் இருக்கிறேன். அவ்வப்போது தற்கொலை செய்து கொள்ளலாமா? என்றுகூடத் தோன்றுகிறது. இது இன்று தோன்றிய பிரச்னை இல்லை பல்லாண்டுகளாக எனக்குள் இருந்து கொண்டு என்னைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் பிரச்னை. இதிலிருந்து எப்படியாவது வெளியில் வரவேண்டுமென்று தோன்றுகிறது. அதற்கான முயற்சியாகத்தான் நான் இதை சமூக ஊடகத்தில் பகிர்வது.’

- என்று படு கவலையாக ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார் டங்கல் படத்தில் சிறு வயது மல்யுத்த வீரங்கனையாக நடித்து பலத்த பாராட்டுகளைப் பெற்றவரான சாய்ரா வாஸிம். 

சாய்ராவுக்கு 17 வயது தான் ஆகிறது. அதற்குள் மூன்று முறை கடுமையான மனச்சோர்வு நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்.

‘எனக்கு வந்திருக்கும் பிரச்னையைக் காட்டிலும் எதற்காக இத்தனை சீக்கிரம் இது எனக்கு வரவேண்டும்? என்ற இயலாமை கலந்த சுய இரக்கமே பல இரவுகளில் என் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. 12 வயதில் முதல்முறை இந்த மனச்சோர்வு நோய்க்கு உள்ளானேன். பிறகு 14 வயதில் ஒருமுறை. இப்போது மீண்டும் அப்படியொரு அதீத மனச்சோர்வு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். இதனால் தற்கொலை எண்ணங்கள், பசியின்மை, கடுமையான மனக்கவலை, அதற்காக உட்கொள்ளும் ஹெவி டோஸ் மருந்து மாத்திரைகள், அதனால் உண்டாலும் நரம்புத் தளர்ச்சி, நிம்மதியின்மை உள்ளிட்டவற்றால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். இவை அனைத்திலிருந்தும் விடுபட நினைக்கிறேன். விடுபடுதல் என்றால் நோயிலிருந்து மட்டுமல்ல நோய்க்கு காரணமான எனது திரையுலக பங்கேற்பு, வேலைகள், எனது பள்ளிப்படிப்பு, அதிமுக்கியமாக சமூக ஊடகப் பங்கேற்பு என என் மொத்த நேரத்தையும் குத்தகை எடுத்துக் கொள்ளும் அத்தனை தளைகளில் இருந்தும் நான் விடுபட வேண்டும். அதற்காகத்தான் நான் புனித ரமலான் மாதத்தை எதிர்நோக்கியிருக்கிறேன். அந்த சமயத்தில் தான் என் வேதனைகளில் இருந்து நான் முற்றிலுமாக விடுபட சரியான வாய்ப்புகள் அமையும். எனது ரசிகர்களே என்னை உங்களது பிரார்த்தனைகளின் போது நினைவில் வையுங்கள்.’

- என சாய்ரா வாஸிம் படு சோகமாகத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

மீண்டு வா சின்னப்பெண்ணே! முழுமையான ஓய்வு... உனக்குப் பிடித்த துறையில் நீ வெற்றிகரமாக இயங்குவதற்கான முழு ஆற்றலையும் மீட்டுத் தரட்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com