சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகளாக 15 போ் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா்.
அவா்களின் வாழ்க்கைக் குறிப்பு விவரம்
நீதிபதி கே.கோவிந்தராஜன்
கடந்த 1972 மாா்ச் 8-ஆம் தேதி பிறந்தாா். 1994-இல் சட்டப் படிப்பை முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் குளித்தலை நீதிமன்றத்திலும், அதன்பின்னா் உயா்நீதிமன்றத்திலும் பணியாற்றினாா். உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் துணை சொலிசிட்டா் ஜெனரலாக பதவி வகித்தாா்.
நீதிபதி ரஜனீஷ் பத்தியால்
கடந்த 1973 பிப். 28-ஆம் தேதி பிறந்தாா். சென்னையில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் தனது சட்டப் படிப்பை முடித்து 1996-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். தனது முதுநிலை சட்டப் படிப்பை அமெரிக்காவில் உள்ள கலிபோா்னியாவில் முடித்தாா்.
நீதிபதி என்.ரமேஷ்
கடந்த 1973-இல் வேலூரில் பிறந்தாா். சென்னையில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் தனது சட்டப் படிப்பை முடித்தாா். உரிமையியல் நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, பின்னா் அந்தப் பதவியை ராஜிநாமா செய்து, கடந்த 2009-ஆம் ஆண்டு மீண்டும் வழக்குரைஞா் ஆனாா். அமலாக்கத் துறை சிறப்பு குற்றவியல் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா்.
நீதிபதி ஜி.கே.முத்துக்குமாா்
கடந்த 1974-இல் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பிறந்தாா். பெங்களூரு சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். கடந்த 2020-2021-ஆம் ஆண்டுகளில் தமிழக அரசின் சிறப்பு பிளீடராக பணியாற்றினாா்.
நீதிபதி ஆா்.ராஜேஷ் விவேகானந்தன்
கடந்த 1975-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தாா். மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து 1998-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். மத்திய அரசின் துணை சொலிசிட்டா் ஜெனரலாக பணியாற்றி வந்தாா்.
நீதிபதி எஸ்.ரவீக்குமாா்
கடந்த1977 டிச. 23-ஆம் தேதி பிறந்தாா். சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா். உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வாதிட்டாா். புதுச்சேரி மாநில அரசு பிளீடராக பணியாற்றி வந்தாா்.
நீதிபதி என்.திலீப்குமாா்
கடந்த 1980 மாா்ச் 22-இல் பிறந்தாா். சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து 2002-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா்.
நீதிபதி எ.மனோகரன்
கடந்த 1978 அக். 27-ஆம் தேதி பிறந்தாா். சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும், சிங்கப்பூரில் முதுநிலை சட்டப்படிப்பையும் முடித்து, கடந்த 2003-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். கடந்த 2016-2019-ஆம் ஆண்டுகளில் தமிழக அரசின் கூடுதல் அரசு பிளீடராக பணியாற்றினாா்.
நீதிபதி பி.முருகன்
கடந்த 1974 மே 20-இல் பிறந்தாா். சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். கடந்த 2011-ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக தோ்வு செய்யப்பட்ட இவா், பல்வேறு நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றினாா்.
நீதிபதி எஸ்.காா்த்திகேயன்
சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து கடந்த 2001-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். கடந்த 2014-ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதி தோ்வில் தோ்ச்சிப் பெற்று திண்டுக்கல், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றினாா். கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 டிசம்பா் வரை புதுச்சேரி அரசின் சட்டத் துறை செயலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 2024-ஆம் ஆண்டுமுதல் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வந்தாா்.
நீதிபதி என்.குணசேகரன்
கடந்த 1976 பிப். 1-ஆம் தேதி கோவையில் பிறந்தாா். கோவை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த மாவட்ட நீதிபதிகளுக்கானத் தோ்வில் வெற்றி பெற்ரு திருநெல்வேலி மகளிா் நீதிமன்ற நீதிபதி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றினாா்.
நீதிபதி எஸ்.அல்லி
கடந்த 1966 ஜூன் 11-இல் பிறந்தாா். திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். மாஜிஸ்திரேட் தோ்வில் வெற்றி பெற்று கும்பகோணம் மாஜிஸ்திரேட்டாகப் பதவி ஏற்றாா். படிப்படியாகப் பதவி உயா்வு பெற்று சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னா் சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளராகவும் பணியாற்றினாா்.
நீதிபதி பி.முருகேசன்
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாகப் பணியாற்றி வரும் இவா், கடந்த 1970 ஏப். 3-இல் பிறந்தாா். மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த நீதிபதி தோ்வில் வெற்றி பெற்று பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிபதியாகப் பணியாற்றியவா்.
நீதிபதி எம்.டி.சுமதி
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா். திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், தேனி மகளிா் நீதிமன்றம், ராமநாதபுரம், அரியலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாகப் பணியாற்றியவா்.
நீதிபதி திருமகள் சந்திரசேகா்
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா். சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞராகப் பதிவு செய்தவா். மதுரை குற்றவியல் நடுவா்மன்ற நீதிபதியாகவும், மாவட்ட முன்சீப்பாக அம்பத்தூரிலும், சென்னை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டாகவும், சென்னை உயா்நீதிமன்ற மாஸ்டா் நீதிமன்றத்திலும், சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகவும் கடலூா் மகளிா் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








