‘நேர்கொண்ட பார்வை’ படத்தை விடவும் ‘கோமாளி’க்கு முன்னுரிமை தரும் திரையரங்குகள்!

கோமாளி படம் வெளியான ஒருவாரத்துக்குள் அபார வசூலை அடைந்துவருவதால் நிலைமை மாறியுள்ளது...
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை விடவும் ‘கோமாளி’க்கு முன்னுரிமை தரும் திரையரங்குகள்!

நேர்கொண்ட பார்வை படம்  ஆகஸ்ட் 8 அன்றும் கோமாளி படம் ஆகஸ்ட் 15 அன்றும் வெளியாகின. கோமாளி படம் வெளியான ஒருவாரத்துக்குள் அபார வசூலை அடைந்துவருவதால் நிலைமை மாறியுள்ளது.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை விடவும் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்துக்கு சென்னைத் திரையரங்கு உரிமையாளர்கள் முன்னுரிமை தருகிறார்கள். சென்னையில் பெரும்பாலான மல்டிபிளெக்ஸ்களில் உள்ள பெரிய திரையரங்குகளில் இதுவரை ஓடிக்கொண்டிருந்த நேர்கொண்ட பார்வை படம் சிறிய திரையரங்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்தப் பெரிய திரையரங்குகளில் கோமாளி படம் தற்போது திரையிடப்பட்டுள்ளது.

சத்யம் திரையரங்கில் இதுவரை ஓடிக்கொண்டிருந்த நேர்கொண்ட பார்வை தற்போது அதைவிடவும் சிறிய திரையரங்கான சாந்தமுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது சத்யம் திரையரங்கில் நான்குக் காட்சிகளாக கோமாளி படம் திரையிடப்பட்டுள்ளது. கோமாளியை விடவும் ஒருவாரத்துக்கு முன்பே நேர்கொண்ட பார்வை படம் வெளியானதால் அதற்கான வரவேற்பு தற்போது குறைந்துள்ளது. இதனால் கோமாளி படம் அதிகமாகப் பலனடைந்துள்ளது. நகைச்சுவை படம் என்பதால் ரசிகர்களும் அதிக ஆதரவு தந்துவருகிறார்கள். ஜெயம் ரவி திரையுலக வாழ்க்கையில் முதல் நான்கு நாள்களில் அதிக வசூல் கண்ட படம் என்கிற பெருமையும் கோமாளி படத்துக்குக் கிடைத்துள்ளது. டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை அடைந்து தமிழ்த் திரையுலகில் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளார் ஜெயம் ரவி. 

சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோஹிணி காம்ப்ளெக்ஸிலும் பெரிய திரையரங்கான ரோஹினியில் கோமாளி திரையிடப்பட்டுள்ளது.

சங்கம் திரையரங்கில் வெளியான கோமாளி படம் இரண்டாவது வாரத்திலும் அதே பெரிய திரையரங்கில் தொடர்கிறது. 

வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் இரண்டு திரையரங்குகள் உள்ளன. அவற்றில் 6 காட்சிகள் கோமாளிக்கும் இரு காட்சிகள் நேர்கொண்ட பார்வைக்கும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளன. கோகுலாஷ்டமியை முன்னிட்டு வார இறுதியில் 5 காட்சிகள் கோமாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஸ்கீரின் 2-ல் கென்னடி கிளப் படத்துக்கு 2 காட்சிகளும் ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி 2 மற்றும் பக்ரீத் ஆகிய படங்களுக்கு தலா ஒரு காட்சியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் திரையரங்கில் நேர்கொண்ட பார்வை படம் இந்த வாரத்துடன் வெளியேறுகிறது. 

எனினும் சென்னை தேவி காம்ப்ளெக்ஸில் தேவி திரையரங்கம், நேர்கொண்ட பார்வைக்கு நான்கு காட்சிகளை ஒதுக்கியுள்ளது. அதை விடவும் சிறிய திரையரங்கமான தேவி பாரடைஸில் கோமாளி ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல உதயம் திரையரங்கிலும் பெரிய திரையரங்கமான உதயத்தில் நேர்கொண்ட பார்வை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. நான்கு காட்சிகளும் இப்படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

காசி திரையரங்கில் மூன்று காட்சிகள் கோமாளிக்கும் ஒரு காட்சி நேர்கொண்ட பார்வைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆல்பர்ட் காம்ப்ளெக்ஸிலும் கோமாளி படத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை படம் பேபி ஆல்பர்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. அம்பத்தூர் ராக்கியிலும் இதே நிலைமைதான். அதிக இருக்கைகள் கொண்ட ராக்கி திரையரங்கில் கோமாளி திரையிடப்பட்டுள்ளது. குரோம்பேட்டை வெற்றியில் நான்கு காட்சிகளாக கோமாளியும் ராகேஷ் திரையரங்கில் நேர்கொண்ட பார்வையும் திரையிடப்பட்டுள்ளன. 

ஆகஸ்ட் 30 அன்று பிரபாஸ் நடித்த சாஹோ படம் வெளியாகிறது. அதுவரை கோமாளி படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com