நானும் அஜித்தும் டுடோரியல்மெட்ஸ்: எஸ் பி பி சரண்

அஜித் இப்போ ரொம்ப பிஸி. எப்பவாவது நேர்ல பார்த்தா பேசிக்குவோம். ‘ஃபேமிலியோட வீட்டுக்கு வாடா, என் கையால பிரியாணி செஞ்சு போடறேன்’ ன்னு சொல்வார்.
நானும் அஜித்தும் டுடோரியல்மெட்ஸ்: எஸ் பி பி சரண்

எஸ் பி பி மகன் பாடகர் சரணைத் தெரியாதவர்கள் இருக்க முடியுமா? இருக்கிறார்கள் என்கிறார் சரண். தமிழ் ஊடகங்களில் இவரது நேர்காணலைக் காண்பது அரிது. ஆனால், தெலுங்கில் நகைச்சுவை நடிகர் அலி நடத்தும் ‘அலிதோ சரதாக’ எனும் காமெடி ரியாலிட்டி ஷோ ஒன்றின் மூலமாகத் தனது மனதில் பட்டவற்றை தயக்கமின்றி ஜாலியாக உரையாடியிருக்கிறார் சரண். தமிழ் ரசிகர்களுக்கு சரணை பாடகராக மட்டுமன்றி 'அண்ணாமலை' சீரியல் மூலமாக நடிகராகவும் நன்றாகவே தெரியும். ஆயினும் தான் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாடல்களில் ஒன்றை ஒரு குறிப்பிட்ட தமிழ் கேளிக்கை ஊடகமொன்று அப்பாவின் மாஸ்டர் பீஸ் பாடலாக அவரது லைஃப் டைம் அச்சீவ்மெண்ட் விழாவில் போட்டுக்காட்டியது சரணை சற்று மன வருத்தப்படுத்தியதாக அவர் குறிப்பிடும் போது அவரது ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. எஸ் பி பி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பரபரப்பாக பாடித்திரியும் சுறுசுறுப்புத் தேனீயாக இருக்கையில் அவரது மகனுக்கு அப்பா உயரத்துக்கு தன்னால் எழ முடியாமலாகிறதே எனும் ஆதங்கம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. ஏனெனில், எஸ் பி பி தன் மகனுக்காக வாய்ப்பு கேட்டு இதுவரை யாரிடமும் சிபாரிசுக்குச் சென்றதில்லை என்கிறார் சரண். ‘உன்னிடம் திறமை இருக்கிறது. அதை வைத்து உனக்கான வாய்ப்புகளை நீயே உருவாக்கிக் கொள். அது தான் நிலையானது’ எனும் பாலிஸி எஸ் பி பி யுடையது. அப்பாவின் இந்தக் குணத்தை மகனும் புரிந்து கொண்டார் என்றே சொல்லலாம்.

‘என் மகன் என்று நான் உனக்கு சிபாரிசு செய்தால் வாய்ப்புக்காக காத்திருப்போர் பட்டியலில் வேண்டுமானால்  எஸ் எஸ் பி பி மகன் என்று உன்னை அழைத்து முன்னால் நிற்க வைப்பார்கள். என் மகன் என்ற பெருமை அதற்குத்தான் உதவுமே தவிர உனக்கான அடுத்தடுத்த வெற்றி என்பது என் சிபாரிசினால் கிடைக்கக் கூடியது அல்ல. அதை சம்பாதிக்க உனக்கான அடையாளத்தை நீ தான் தேடிக் கொள்ள வேண்டும்.’ என்பாராம் எஸ் பி பி. இந்த அறிவுரை மகனுக்கு மட்டுமல்ல, புகழ்பெற்ற பாடகியான தங்கை எஸ் பி ஷைலஜாவுக்காகவும் இதுவரை அண்ணனாக தான் எப்போதும் சிபாரிசு செய்ததே இல்லை என்று அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

எனவே, சரண் இதுவரை பாடிய பாடல்களில் எதுவொன்றும் எஸ் பி பி யின் சிபாரிசில் கிடைத்தது இல்லை. அத்தனையும் சரணின் குரல் வளத்துக்காக வந்த வாய்ப்புகளே! 

சரண் முதன்முதலில் பாடியது தமிழில் வெளிவராத ஒரு படத்திற்கு. அப்பாவை பிரசாத் ஸ்டுடியோவில் இறக்கி விடச் சென்ற சரணை அழைத்து இசைஞானி இளையராஜா தந்த வாய்ப்பு அது. ஆனால், படம் வெளிவரவில்லை.

முறையாக, முழுவதுமாக பாடி வெளிவந்த பாடல் என்றால் அது தெலுங்குப் படத்தில் தான். முராரி எனும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தெலுங்குப் படத்தில் இடம்பெற்றுள்ள
 
‘எக்கட எக்கட எக்கட உந்தோ தாரகா
நாலோ உக்கிரி பிக்கிரி ஊஹலு ரேப்பே கோபிகா’ - எனத் தொடங்கும் அந்தப்பாடல் தான் சரணின் முதல் பாடல்.

இப்படி நீளும் அந்த நேர்காணல் சற்றுப் பெரியது. நேர்காணலின் ஊடே தமிழ் சினிமாவில் சரணுக்கு யாரெல்லாம் படிக்கும் காலத்தில் நண்பர்கள் என்றொரு கேள்வி கேட்கப்பட்ட போது;

சரண், அஜித்தைக் குறிப்பிட்டார்.

நானும் அஜித்தும் டுடோரியல்மேட்ஸ், நாங்க மூணு பேர். மியூசிக் டைரக்டர் சிவான்னு ஒருத்தர் இருந்தார். நானும், அஜித்தும், அவரும் ஒன்னா டுடோரியல்ல படிச்சோம். எனக்கு படிப்பே சுத்தமா வராது. 

சென்னைல நான் படிக்காத ஸ்கூலே இல்லை. அத்தனை ஸ்கூல்ல இருந்தும் என்னை ‘இவனுக்கு படிப்பு வராதுன்னு’ சொல்லி வெளியேத்திட்டாங்க. அப்புறம் அப்பா ஃப்ரெண்ட் ஒருத்தர் ஃபேமிலி யூ எஸ் ல இருந்தது, அவர் பொறுப்புல என்னை அங்கே படிக்க அனுப்பினார் அப்பா. அங்க போனதும் எப்படியோ ஒரு டிகிரி வாங்கிட்டேன்னு வைங்க. என்று சிரிக்கிறார் சரண். 

அஜித் குறித்த கேள்விக்கு;

அஜித் இப்போ ரொம்ப பிஸி. எப்பவாவது நேர்ல பார்த்தா பேசிக்குவோம். ‘ஃபேமிலியோட வீட்டுக்கு வாடா, என் கையால பிரியாணி செஞ்சு போடறேன்’ ன்னு சொல்வார்.

நீளும் சரணின் பேச்சில் ஒரு தயாரிப்பாளராக தான் சில தோல்விகளைச் சந்தித்து விட்ட துயரம் இருந்தது. அத்துடன் அப்பா மெச்சிய மகனாக ஆவதற்கான ஆதங்கமும் இழையோடியது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொருத்தவரை சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரிவில் நடுவர்களில் ஒருவராக சரணைக் காண முடிந்தது.

Concept Courtesy: alitho saradhaga program.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com