/

'இந்தியன் 2' இழுத்தடிக்கிறாரா கமல்?

வெளிப்படையாகச் சொல்ல முடியாத காரணங்களால் இந்தியன் - 2 படத்தை கமல்ஹாசன் இழுத்தடிக்கிறார் எனக் கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:21 pm

DIN

வெளிப்படையாகச் சொல்ல முடியாத காரணங்களால் இந்தியன் - 2 படத்தை கமல்ஹாசன் இழுத்தடிக்கிறார் எனக் கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது.

1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். சுஜாதா எழுத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் இது. இந்தப் படத்தில் இந்தியன் தாத்தா கமல் உயிருடன்  இருப்பதாக கதையை முடித்திருப்பார்கள். இதை வைத்தே இந்தியன் இரண்டாம் பாகமும் வருமென்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையில் கமல்ஹாசன் - ஷங்கர் இருவருமாக இந்தியன் -2 புதுப்பட அறிவிப்பை வெளியிட்டனர். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பார் எனக் கூறப்பட்டது. இதன் பின் கமல்ஹாசன் தீவிர அரசியலைத் தொடங்கி மக்கள் நீதி மையத்தை வேலைகளில் ஆர்வம் காட்டினார்.

Story image

இதன் காரணமாக இந்தியன்-2 படப்பிடிப்பு தொடங்குவதே தொய்வுற்றது. பின்பு பொருளாதார சிக்கலால் தில் ராஜு இப்படத்தைத் தொடர முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிப்புப் பொறுப்பேற்றுப்  படப்பிடிப்பைத் தொடங்கியது.

ஓரளவு படப்பிடிப்பு நல்ல விதமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கமல் காலில் அறுவைசி சிகிச்சை செய்துகொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டு பின்பு படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டது. ஆனால், இன்னமும் படப்பிடிப்புக்கு கமல்ஹாசன் செல்லாத நிலையில் இந்தியன் - 2 படப்பிடிப்பு முடங்கிப் போய்க் கிடக்கிறது.

உள்ளபடியே லைகாவின் அப்போதைய தயாரிப்பு நிர்வாகியாக இருந்த கருணாமூர்த்தியிடம் கமல் தரப்பில் பெரும் சம்பளம் பேசப்பட்டதாகவும் அதில் பாதியை முன்பணமாகப் பெற்றுக் கொண்டும்விட்டனர் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, கருணாமூர்த்தியை பொறுப்பில் இருந்து லைகா நீக்கிவிட்டது, ஆனால், ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில்  பாக்கியைக் கேட்டு கமல் தரப்பு லைகாவை அணுகியதாகவும் ஆனால்  லைகா நிர்வாகம் பிடிகொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Story image

இத்தனைக்கும் நடுவே பொங்கலையொட்டி தமிழின பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்து கமல் நடித்திருப்பதாகவும் இதை வெளியிட பிரபல டிவி சேனல்களிடம் பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

டிவி நிகழ்ச்சி செல்ல முடிந்த கமலால் இந்தியன் படப்பிடிப்புக்குச் செல்ல முடியவில்லையா என சினிமா வட்டாரத்தில் பேசுகின்றனர். இதேபோல் லைகா தயாரிப்பில் கமல் இயக்கி நடித்த சபாஷ் நாயுடுவும் பாதிப் படப்பிடிப்புடன் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதன் தயாரிப்புச் செலவை இந்தியன் இரண்டாம் பாகத்தில் கழித்துக் கொள்ளலாம் எனத் தற்போதைய லைகா தலைமை முடிவெடுத்து இருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.

இந்த சூழ்நிலையில்தான் கமல்ஹாசன் படப்பிடிப்புக்கு வராமல் "ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும்" நிலையில் இந்தியன்- 2 படம் முடங்கிக் கிடப்பதாக ஒரு பரபரப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.