யாரும் என்னிடம் பேசவில்லை: பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய வேல்முருகன் வேதனை

நானும் கலராக இருந்திருந்து, நாலு வார்த்தை இங்க்லீஷ் பேசியிருந்தால் எல்லோருக்கும் நான் நண்பனாகியிருப்பேன்...
யாரும் என்னிடம் பேசவில்லை: பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய வேல்முருகன் வேதனை

பிக் பாஸ் போட்டியிலிருந்து ரேகாவுக்கு அடுத்ததாக பாடகர் வேல்முருகன் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறியுள்ளார்.

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாக புதிய போட்டியாளர்களாக நுழைந்துள்ளார்கள். 

இந்த வருட பிக் பாஸ் போட்டியில் முதலில் வெளியேறியவர் மூத்த நடிகை ரேகா. பாடகர் வேல்முருகன் 2-வது போட்டியாளராக வெளியேறியுள்ளார். 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் வேல் முருகன் கூறியதாவது:

பாலாவுடன் அர்ச்சனா இணக்கமாகிவிடுவார் என எனக்கு முதலிலேயே தெரியும். இல்லாவிட்டால் அவர் தினமும் அவமானப்பட வேண்டியிருக்கும். தலைவலி என்று கூறி முதல் நாளிலேயே அர்ச்சனாவை அழ வைத்தார் பாலா. மிகுந்த அனுபவம் கொண்ட அர்ச்சனாவிடமே அவரால் அப்படி நடந்துகொள்ளும்போது நான் மட்டும் என்ன செய்துவிட முடியும்? பிக் பாஸை அவர் நடத்துவது போலவே நடந்துகொள்வார். இதைப் புரிந்துகொள்ள எனக்குச் சில காலமானது. 

டிப்ளோமேடிக், குரூப்பிஸம், ஃபேவரிடசம் என்கிற வார்த்தைகளுக்கு எல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாது. அதனால் இதை வைத்து நான் உத்திகள் எதுவும் கையாளவில்லை. தனக்காகவோ மற்றவர்களுக்காகவோ தேவையிருந்தால் மட்டுமே ஒருவர் பேசவேண்டும். வெளியே இப்படித்தான் நான் நடந்துகொள்வேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது. நான் ஏதாவது உத்தியைக் கடைப்பிடித்திருந்தால் நீண்ட நாளைக்கு உள்ளே இருந்திருக்கலாம். வேஷ்டி விவகாரத்தில் சுரேஷுடன் நான் சண்டை போட்டபோது அதுவும் பிரச்னையானது. குரூப்பிஸம் என முத்திரை குத்தினார்கள். எப்படிப் போனாலும் ரவுண்டு கட்டி ஒருத்தனை இப்படிப் பண்றாங்களேனு தோணுச்சு. நியாயமாக விளையாடி, யாரையும் காயப்படுத்தாமல், என் டாஸ்க்கைச் சரியாகச் செய்ய நினைத்தேன். ஏன்யா நல்ல மனுஷனா இருந்தது தப்பா? இதற்குப் போய் வெளியே அனுப்பி விட்டீர்களே! கமல் சார் என்னை மக்களின் சொத்து என்று பாராட்டியிருக்காவிட்டால் நான் இன்னும் வேதனையடைந்திருப்பேன்.

நான், நிஷா, சோம்சேகர் ஆகியோர் ரியோ, அர்ச்சனா குழுவில் உள்ளதாகக் கூறுகிறார்கள். அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அப்படி இருந்திருந்தால் நான் வெளியேற்றப்பட்டிருக்க மாட்டேன். போட்டியாளர்களை வெளியே அனுப்ப அதுபோல குற்றம் சுமத்துகிறார்கள். அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் என என்னைச் சொன்னார் அர்ச்சனா. சில டாஸ்க்குகளில் எனக்கு எதிர்மறையான முத்திரைகளை வழங்கினார் நிஷா. நான் எப்படி அவர்கள் குழுவில் இருக்க முடியும்? பலமுறை என்னை அநியாயமாக நடத்தினார்கள். அந்த இடத்தில் பாலாவோ அனிதாவோ இருந்திருந்தால் அவர்கள் பெரிய பிரச்னையை உண்டு பண்ணியிருப்பார்கள். ஆனால் நான் அதைக் கண்டும் காணாமலும் விட்டுவிட்டேன். 

பிக் பாஸ் இல்லத்தில் யாரும் என்னிடம் நெருக்கமாக இல்லை. நானும் கலராக இருந்திருந்து, நாலு வார்த்தை இங்க்லீஷ் பேசியிருந்தால் எல்லோருக்கும் நான் நண்பனாகியிருப்பேன். என்னை ஒதுக்கிவிட்டார்கள். என் பாடலைக் கேட்பதற்காக மட்டுமே என்னிடம் பேசினார்கள். இதுதான் உண்மை. சகஜமாகப் பேசுவதற்கே என்னை ஒதுக்கிவைத்தார்கள். பிறகு நாம் போய் அவர்களிடம் என்ன பேசுவது? கலராகவும் நாலு வார்த்தை ஆங்கிலம் பேசுவதால் மட்டுமே அப்படி இருக்கிறார்கள். மற்றபடி நல்ல மனது, உண்மையான எண்ணத்தை நான் வெளிப்படுத்தியுள்ளேன். வெளியே வந்து கேட்டால், வேல்முருகனா, பாவம் அவர் அப்பாவி என்றுதான் சொல்வார்கள். அதைத் தாண்டி எதுவும் சொல்ல மாட்டார்கள். விஜயதசமி டாஸ்க்கின்போது என்னிடம் ரம்யா பாண்டியன் வந்து மன்னிப்பு கோரினார். உங்களைத் தப்பா புரிஞ்சுகிட்டேன் என்றார். ஏன் என யாராவது எண்ணினார்களா?

எனக்குக் கிடைத்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதற்காக வருந்துகிறேன். இன்னும் அதிகமாகப் பேசி, என்னுடைய கருத்துகளை ஆணித்தரமாக நான் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். பல இடங்களில் என் இருப்பை வெளிப்படுத்தினேன். குறைந்தது நான்கு போட்டியாளர்களாவது நான் செய்ததைக் கூட செய்யவில்லை. ஆனால் அவர்கள் இன்னும் உள்ளே இருக்கிறார்கள், என்னை விடவும் அதிக வாக்குகளை வாங்கியிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் உரையாடுவதற்கு ஆள்களைத் தேடிக்கொண்டார்கள். அதன்மூலம் கண்டண்ட் வழங்கியுள்ளார்கள். என்னால் அதைச் செய்ய முடியவில்லை. என்னுடன் பேசுவதற்கு ஒரு ஆள் கூட இல்லை. பாடுவதற்கு மட்டுமே என்னைப் பயன்படுத்திக்கொண்டார்கள். மற்றபடி என்னுடன் பேசவில்லை. அது பரவாயில்லை. என்னுடைய பங்களிப்பில் எனக்கு மகிழ்ச்சியே.

நான் எல்லோரிடமும் நன்றாகப் பேசியதாகச் சொன்னார் பாலா. ஆனால் நான் வெளியேறியதற்கு அவரிடம் சந்தோஷம் வெளிப்பட்டது. நான் வெளியேறுவதாக கமல் சார் அறிவித்தவுடன், ஆஜித் வெளியேறாமல் இருந்ததற்காக உடனடியாக ஓடிவந்து அவரைத் தூக்குகிறார் பாலா. மனத்துக்குள் எவ்வளவு வைத்திருக்கிறார். அது அப்போது காட்டிவிட்டது. என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com