

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் தலைப்பு போஸ்டர் விடியோ, சமூகவலைத்தளங்களில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான்.
கடந்த வருட இறுதியில் ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடத்தப்பட்டது. எனினும் அண்ணாத்த படப்பிடிப்புத் தளத்தில் நான்கு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதையடுத்து ஹைதராபாத்தில் ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லையென்றாலும் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, அண்ணாத்த படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
பிறகு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டார். அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்காக தனி விமானத்தில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்குச் சென்றார் ரஜினி. தற்போது, அண்ணாத்த படப்பிடிப்பில் தன்னுடைய காட்சிகள் அனைத்தையும் நடித்துக் கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் விடியோ சமூகவலைத்தளங்களில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி 24 அன்று வெளியான இந்த விடியோ அனைத்து சமூகவலைத்தளங்களிலும் 8 மில்லியன் (80 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ளது. தமிழ்ப் படங்களில் வேறு எந்தப் படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் விடியோவும் இந்த எண்ணிக்கையைத் தொட்டதில்லை எனச் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அகமது ட்வீட் வெளியிட்டுள்ளார்.
மேலும் அண்ணாத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.