தமிழ் மக்கள் மீது அதிக அன்பும் மரியாதையும் கொண்டுள்ளோம்: தி ஃபேமிலி மேன் 2 சர்ச்சைகளுக்கு இயக்குநர்கள் விளக்கம்

தமிழ்க் கலாசாரம் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம்.
தமிழ் மக்கள் மீது அதிக அன்பும் மரியாதையும் கொண்டுள்ளோம்: தி ஃபேமிலி மேன் 2 சர்ச்சைகளுக்கு இயக்குநர்கள் விளக்கம்

தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் தொடர்பான சர்ச்சைகளுக்கு அதன் இயக்குநர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். 

2019 செப்டம்பரில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி நடித்த இத்தொடரை ராஜ் & டி.கே. இயக்கியிருந்தார்கள்.

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் 2-வது பாகம் உருவாகியுள்ளது. இதில் இலங்கைத் தமிழராக நடிகை சமந்தா நடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 2 ஜூன் 4 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.  இந்த அறிவிப்புடன் தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடரின் டிரெய்லரும் சமீபத்தில் வெளியானது. 

ஐஎஸ்ஐ அமைப்புக்கும் போராளிகளுக்கும் இடையே எதிர்பாராத விதத்தில் கூட்டணி உருவாகியுள்ளது என்கிற ஒரு வசனம் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து இலங்கைப் போரைத் தவறான விதத்தில் சித்தரித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் #FamilyMan2_against_Tamils என்கிற ஹாஷ்டேக்கின் வழியே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

தி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார். ஈழப் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் தி ஃபேமிலி மேன் 2 தொடரின் டிரெய்லர் உள்ளது. இந்த இணையத்தொடர் ஒளிபரப்பானால் மாநிலத்தில் மதநல்லிணக்கத்தைக் காப்பது கடினமாகும் என்பதால் தடை செய்ய வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடரின் கதை மற்றும் சமந்தா கதாபாத்திரம் தொடர்பான சர்ச்சைகள் குறித்து இயக்குநர்கள் ராஜ் & டி.கே கூறியுள்ளதாவது: 

டிரெய்லரில் இடம்பெற்றிருந்த ஒன்றிரண்டு காட்சிகளின் அடிப்படையில் சில ஊகங்களும் கருத்துகளும் செய்யப்பட்டிருக்கின்றன. எமது நடிகர்கள் குழுவில் பலரும், படைப்பாக்க மற்றும் கதாசிரியக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் தமிழர்கள். தமிழ்க் கலாசாரம் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். எமது தமிழ் மக்கள் மீது மிக அதிக அன்பும், மரியாதையும் நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த இணையத்தொடர் உருவாக்கத்திற்காக பல ஆண்டுகள் கடும் உழைப்பை நாங்கள் தந்திருக்கிறோம். 

இதன் முதல் பாகத்தில் நாங்கள் செய்ததைப்போலவே எமது பார்வையாளர்களுக்கு சிறப்பான, உணர்வுகளை மதிக்கிற மற்றும் நடுநிலையான கதையை வழங்குவதற்கு மிகப்பெரிய சிரமங்களை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். 2-ம் பாகம் ஒளிபரப்பாகும்வரை காத்திருக்குமாறும், நிகழ்ச்சியைப் பார்க்குமாறும் ஒவ்வொருவரையும் நாங்கள் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். அதை நீங்கள் பார்க்கும்போது, கதையையும், கதாபாத்திரங்களின் சித்தரிப்பையும், நடுநிலையான கருத்துகளையும் நீங்கள் நிச்சயம் பாராட்டுவீர்கள் என்று நாங்கள் அறிவோம் எனக் கூறியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com