தமிழ் திரைப்பட பத்திரிக்கயாளர் சங்க விழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார். அப்போது ரஜினிகாந்த்தின் அண்ணாத்த குறித்து அவர் கூறியிருப்பதாவது, ''ரஜினிகாந்த்தை விட மிகச் சிறந்த நடிகர் இந்த உலகத்தில் இருக்கிறாரா ? நான் தப்புத்தாளங்கள் திரைப்படத்தை 20 முறை பார்த்திருக்கிறேன்.
நான் சினிமாவை அப்படித்தான் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 'குணா'வும், 'மகாநதி'யும் என்னை ஆக்கிரமித்தது. இல்லையென்றால் நான் ரஜினிகாந்த் பக்கம் தான் இருந்திருப்பேன். 4 நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழகம் மிரண்டு போனது. அவருடைய சில படங்கள் எனக்கு பிடிக்காது. அவருடைய நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும். அவருடைய பெரிய காதலன் நான்.
அவர் மக்களின் ரசனைக்காக, சிரிப்புக்காக 47 வருடங்களைக் கொடுத்திருக்கிறார். இயற்கை அவரை எப்பொழுதும் காப்பாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இன்னும் அவர் 50 வருடங்கள் இருக்க வேண்டும். அந்த மகாக் கலைஞனை எவ்வளவு நன்றியுடன் நாம் பார்க்க வேண்டும்?. 'அண்ணாத்த' பெரிய வெற்றியடைய வேண்டும்.
நம் குழந்தைகளுடன் 'அண்ணாத்த' போய் பார்க்க வேண்டும். தமிழ் நாடு முழுவதும் அண்ணாத்த படம் குறித்து பேச வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஒரு படம் ஓடினால் எல்லா படமும் ஓடும். அண்ணாத்த ரூ.500 கோடியை வசூலிக்க வேண்டும் என இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்'' என்றார்.