பொன்னியின் செல்வனில் வைரமுத்து பாடல்கள் இல்லை, மீ டு புகார்கள் காரணமா?

பிரமாண்டம் என எதிர்பார்க்கப்படும் இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்கு வைரமுத்துவின் பாடல்கள் எழுதாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
பொன்னியின் செல்வனில் வைரமுத்து பாடல்கள் இல்லை, மீ டு புகார்கள் காரணமா?

பிரமாண்டம் என எதிர்பார்க்கப்படும் இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்துக்குக் கவிஞர் வைரமுத்து பாடல் எழுதாதது  திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை பலர் முயன்றனர். நடிகர் ரஜினிகாந்த்கூட தனது 'படையப்பா' படத்தில்  நீலாம்பரி கதாபாத்திரத்தை பொன்னியின் செல்வனில் இடம்பெற்ற நந்தினி என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கினார் என்று  கூறுவர். 

இப்படி பலரும் முயன்று முடியாததை மணிரத்னம் நிகழ்த்திக் காட்டுகிறார். தமிழ் சினிமாவின் வியாபாரம் விரிவடைந்திருப்பதன் காரணமாக படங்களை உலக அளவில் வெளியிட முடியும் என்பதால் தயாரிப்பாளர்கள் பெரிய பொருட் செலவில் படங்களை தயாரிக்க முன் வருவது,  தொழில்நுட்பங்களின் உதவியினால் போர்க் காட்சிகள் உட்பட பிரமாண்டமான காட்சிகளை மிக தத்ரூபமாக படமாக்கக் கூடிய வாய்ப்பு ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இயக்குநர் மணிரத்னமே இதற்கு முன்பு நடிகர்கள் விஜய், மகேஷ்பாபு, ஆர்யா ஆகியோரை வைத்து பொன்னியின் செல்வனை இயக்கத் திட்டமிட்டார். ஆனால் அது அப்போது கைகூடவில்லை. இந்த நிலையில்தான் லைக்காவுடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். 

தற்போது பொன்னியின் செல்வனுக்கான 80 சதவிகித படப்பிடிப்புகளை முடித்துவிட்டார் மணிரத்னம். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் யார், யார் எந்தெந்த வேடங்களில் நடிக்கிறார்கள் என்பது குறித்து சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவினாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் பொன்னியின் செல்வனில் 12 பாடல்கள் இருப்பதாகவும் இதில் 8 பாடல்களை இளங்கோ கிருஷ்ணன் என்பவர் எழுதுவதாகவும், மீதமுள்ள 4 பாடல்களை கபிலன், கபிலன் வைரமுத்து, வெண்பா கீதையன் ஆகியோர் எழுதுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வைரமுத்துவின் பெயர் இல்லை.

ஏ.ஆர்.ரஹ்மானும் கடந்த சில வருடங்களாக செக்கச்சிவந்த வானம் படம் தவிர்த்து, அவர் இசையமைத்த, '2.0', 'சர்கார்', 'மெர்சல்', 'சர்வம் தாளமயம்', 'பிகில்' படங்களுக்கு வைரமுத்துவை பயன்படுத்தவில்லை. மணிரத்னம் படங்களுக்கு மட்டும் இருவரும் இணைந்து பணியாற்றினர். 

மேலும் 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் படம் என்பதால் மணிரத்னம் நிச்சயம் வைரமுத்துவை பயன்படுத்துவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. இந்த நிலையில்தான் பொன்னியின் செல்வனில் வைரமுத்து இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

மீ டூ விவகாரத்தில் பாடகி சின்மயி, வைரமுத்துவை குற்றம்சாட்டிய நிலையில், வைரமுத்துவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் திரையுலகத்தில் ஏராளமான குரல்கள் வந்தன.  மீ டூ விவகாரம் உச்சத்தில் இருந்தபோதுகூட மணிரத்னத்தின் 'செக்கச்சிவந்த வானம்' படத்துக்கு வைரமுத்து பாடல் எழுதியிருந்தார். 

திரைப்படங்களில் வைரமுத்துவுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது எனவும், வைரமுத்துவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே சின்மயி இத்தகைய புகாரை முன்வைத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.  

இத்தகைய சூழலில் பொன்னியின் செல்வனில் வைரமுத்து  வாய்ப்பளிக்காததற்கு சமூக அழுத்தம் காரணமா? அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா? அல்லது இயல்பாகவே தேவைப்படவில்லையா என்பதை மணிரத்னத்தால் மட்டும்தான் கூற முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com