/

இளம்பெண்ணுடன் சபரி மலைக்கு சென்றாரா சிரஞ்சீவி? பெரும் சர்ச்சை

இளம்பெண்ணுடன் நடிகர் சிரஞ்சீவி சாமி தரிசனம் செய்ததாக சர்ச்சை உருவாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:26 am

DIN

நடிகர் சிரஞ்சீவி தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சமீபத்தில் சபரிமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அவருடன் ஹைதராபாத்தைச் சேர்ந்த பீனிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் சக்கபல்லி என்பவரும் அவரது மனைவி மதுமதியும் சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் சிரஞ்சீவியுடன் சென்ற மதுமதி 50 வயதுக்கு குறைவான பெண் என சர்ச்சை உருவானது. 

இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவில் நிர்வாகத்தினர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர். அதில், நாங்கள் எல்லோருடைய ஆதார் கார்டையும் பரிசோதித்துவிட்டுதான் அனுமதித்தோம். நாங்கள் மதுமதியிடமும் அவரது ஆதார் கார்டை சோதித்த பிறகே அனுமதித்தோம். அவர் ஏற்கனவே சபரிமலை கோவிலுக்கு வந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர். 

இதுகுறித்து மதுமதியின் மகன் அவினாஷ் தனது முகநூல் பக்கத்தில், என் அம்மா 1966 ஆம் ஆண்டு பிறந்தவர். நான் அவரது மகன். எனக்கு 34 வயதாகிறது. தயவு செய்து வதந்திகளைப் பரப்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.