சூரரைப் போற்று படத்தைப் பார்த்த பிறகு கேப்டன் கோபிநாத் சொன்னது என்ன?

என்னுடைய சுயசரிதையின் நோக்கத்தைப் படம் சரியாகப் பிரதிபலித்திருக்கிறது.
சூரரைப் போற்று படத்தைப் பார்த்த பிறகு கேப்டன் கோபிநாத் சொன்னது என்ன?

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் 2020-ம் வருடம் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்தார். இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.  

திரைப்படத் தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து விருதுகளை சூரரைப் போற்று படம் அள்ளியது.

இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான சிம்ப்ளி ஃப்ளையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படம் வெளியான சமயத்தில் படத்தைப் பார்த்துவிட்டு கேப்டன் கோபிநாத் கூறியதாவது:

சூரரைப் போற்று படத்தைப் பார்த்தேன். பல காட்சிகள் சிரிக்கவும் குடும்பக் காட்சிகள் அழவும் செய்தன. இந்தக் காட்சிகள் எல்லாம் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது. என் மனைவி பார்கவி கதாபாத்திரம் அழகாக இருந்தது. 

சூரரைப் போற்று படம் அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளது. அதிகமாகக் கற்பனைகள் கலந்திருந்தாலும் என்னுடைய சுயசரிதையின் நோக்கத்தைப் படம் சரியாகப் பிரதிபலித்திருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கராவுக்குப் பெரிய சல்யூட்

முன்னேறத் துடிக்கும் ஒரு தொழில்முனைவோரின் கதாபாத்திரத்தை சரியாகவும் வலுவாகவும் செய்திருக்கிறார் சூர்யா. தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்தப் படம் பலருக்கும் உத்வேகமாக அமையும் என்று கூறினார். 

தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சூரரைப் போற்று படக்குழுவினரைப் பாராட்டி கோபிநாத் ட்வீட் வெளியிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com