''ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மத ரீதியாக நெருக்கடி கொடுத்தால்...'': பாஜகவுக்கு சீமான் எச்சரிக்கை

பாஜகவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கவிடுத்துள்ளார். 
''ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மத ரீதியாக நெருக்கடி கொடுத்தால்...'': பாஜகவுக்கு சீமான் எச்சரிக்கை

தமிழ்தான் இணைப்பு மொழி என ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது பெரும் விவதாங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக பாஜகவினர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக ஹிந்தி திணிப்பை எதிர்க்கிறது எனவும், ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்தை வரவேற்கிறோம் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ''ஹிந்தித் திணிப்புக்கெதிராகக் கருத்தைக் கூறியதால் சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். 

ஹிந்தித் திணிப்புக்கெதிரான நிலைப்பாட்டை முன்வைத்து, கருத்துத் தெரிவித்ததற்காக சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மானை குறிவைத்து, இந்துத்துவக்கூட்டமும், வலதுசாரியினரும் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவரை அச்சுறுத்த முனைவதுமான போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது. நாட்டின் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல்பாடுகளையும், வன்மப்பர்ப்புகளையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உறுதிபடத்தெரிவிக்கிறேன். 

ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் ஒற்றையாட்சி முறையின் நீட்சியாக ஹிந்தியை எல்லாத்தளங்களிலும் மெல்ல மெல்லத் திணிக்க முற்படுவதும், மாநில மொழிகளை மூன்றாந்தரமாய் நடத்தி, சமவாய்ப்பையும், சமவுரிமையையும் அளிக்க மறுப்பதுமான செயல்பாடுகளுக்கு நாடெங்கிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், சகோதரர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணவோட்டத்தையே தனது கருத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆங்கிலத்துக்கு மாற்றாக, இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்க வேண்டுமெனக் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துப் பதிலுரைக்கும் விதமாக, தமிழை இணைப்பு மொழியாகக் கோரியதை முழுமையாக வரவேற்று வழிமொழிகிறேன். 

இந்தியாவின் மிக மூத்த மொழி தமிழ்தான். எல்லாவித இலக்கண, இலக்கியங்களையும் கொண்டு செழுமையோடு, எவ்விதச்சார்புமற்று தனித்த இயங்கவல்ல உயர்தனிச்செம்மொழியாக விளங்கும் தமிழை, இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக்க வேண்டுமென எங்கள் மூதாதை காயிதே மில்லத் துவங்கி, பலர் இந்திய நாடாளுமன்த்திலேயே உரைத்துள்ள நிலையில் ஹிந்தியை புகுத்தத் துடிக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுஞ்செயலை வன்மையாக எதிர்க்கிறேன். பாஜக அரசு ஹிந்தியைத் திணிக்க முற்பட்டால் தமிழ் மண் மீண்டுமொரு மொழிப்போரை நிகழ்த்திகாட்டுமென்பது திண்ணம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com