அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், யாருக்கு அதிக திரையரங்கம் ஒதுக்கப்படும் என்கிற கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்து முன்னதாக, துணிவு படத்தினை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின் ‘பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் சரி சமமான திரையரங்குகளில் வெளியாகும்’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய நிலவரப்படி வாரிசு திரைப்படத்தை விட அதிக திரையரங்குகளில் துணிவு வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட திரைகளில் துணிவு திரையிடப்பட உள்ளதாகவும் தகவல்.
வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ “அஜித்துடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் விஜய்தான் நம்பர்.1 இடத்தில் இருக்கிறார். ஆனால், வாரிசு படத்திற்கு குறைவான திரைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. நான் சென்னைக்கு சென்று உதயநிதியை சந்தித்து கூடுதல் திரைகள் குறித்துப் பேசப்போகிறேன்’ என நேர்காணல் ஒன்றில் பேசிய விடியோ வைரல் ஆனது. இதனால் அஜித் ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். தொலைக்காட்சி விவாதங்களில் கூட இது பேசு பொருளானது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜூ, “மீடியாவிற்கு முன்பு பேசுவதற்கே பயமாக இருக்கிறது. 45 நிமிஷம் நேர்காணல் கொடுத்தேன். 20 நொடி விடியோவை வைத்து சர்ச்சையை உருவாக்காதீர்கள். நான் யாரையும் தாழ்த்தியோ அல்லது உயர்த்தியோ பேசவில்லை. நான் எல்லா நல்ல திரைப்படங்களையும் ஆதரிக்கிறேன்” என கூறினார்.