புனித் ராஜ்குமார் நினைவு நாள்: ரசிகர்கள் கொண்டாடிய அப்பு!

அந்த ரசிகர்கள் தான் மருத்துவமனை வாசலில் திரண்டார்கள். எப்படியாவது பிழைத்துவிட வேண்டும் என...
புனித் ராஜ்குமார் நினைவு நாள்: ரசிகர்கள் கொண்டாடிய அப்பு!

பெங்களூரில் வசித்து கன்னடப் படங்களைப் பார்த்ததே இல்லையென்றாலும் புனித் ராஜ்குமாரின் புகழை உணராமல் இருக்க முடியாது. ஆட்டோக்களில் அவருடைய புகைப்படங்கள், பேருந்துகள், வேன்களில் அவருடைய பாடல்கள் என எங்கும் புனித்தின் அலை வீசுவதைக் காண முடியும். அவருடைய படங்களின் போஸ்டர்கள் எல்லா இடங்களிலும் தென்படும். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் ஸ்டாராக, பவர் ஸ்டாராக வாழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அவர் நம்மை விட்டுப் பிரிந்து இன்றுடன் ஒரு வருடமாகி விட்டது.

தந்தையும் பிரபல நடிகருமான ராஜ்குமாரின் புகழ்பெற்ற படமான பிரேம்தா கனிகே (Premada Kanike) படத்தில் 6 மாதக் குழந்தையாகத் திரையுலகில் அறிமுகமானார் புனித். 1976-ல் வந்த படம். சலிசுவா மொடகலு (Chalisuva Modagalu), யேர்டா நக்‌ஷத்ரகலு (Yeradu Nakshatragalu) படங்களில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில அரசின் விருதுகளைப் பெற்றார். பெட்டாடா ஹுவு (Bettada Hoovu) படம் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை புனித்துக்குப் பெற்றுத் தந்தது. 1989-ல் தந்தையுடன் மீண்டும் இணைந்து பரசுராம் என்கிற படத்திலும் நடித்தார். 14 வயதுக்குள் 14 படங்களில் நடித்து முடித்திருந்தார். புனித், சென்னையில் பிறந்தவர் என்பதால் தமிழ்நாட்டுடனும் அவருக்குப் பிணைப்பு உண்டு. 

தந்தையுடன்... (படம் - twitter.com/PuneethRajkumar)
தந்தையுடன்... (படம் - twitter.com/PuneethRajkumar)

2002-ல் அப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் புனித் ராஜ்குமார். ஜோடி - ரக்‌ஷிதா. ரசிகர்கள் எதிர்பார்த்த முதல் படமே 200 நாள்கள் ஓடி, வணிக வெற்றியைப் பெற்றது. தானாகச் சேர்ந்த ரசிகர் கூட்டம் அன்றைக்கு உருவானதுதான். அப்பு, அபி, வீர கன்னடிகா, மெளர்யா, ஆகாஷ், அஜய், அரசு, மிலானா, வம்சி, ராம், ஜாக்கி, ஹுடுகாரு, ராஜகுமாரா, அஞ்சனி புத்ரா என பல வெற்றிப் படங்களில் புனித் நடித்தார். இத்தனை வெற்றிகளும் அவரைத் தென்னிந்தியாவின் பிரபல நடிகராக மாற்றியது. இன்ஸ்டகிராமில் அவரை 1.5 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்தார்கள். 2020-ல் புனித் நடிப்பில் யுவரத்னா படம் வெளியானது. புனித், நான்கு மாநில விருதுகளை வென்றார். கடைசியாக ஜாக்கி படத்துக்காகக் கிடைத்தது. ஏராளமான ஃபிலிம்ஃபேர், சைமா விருதுகளையும் வென்றார். புனித்தின் அண்ணன் ஷிவராஜ் குமாரும் கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். 

உடற்பயிற்சியில் அதிகக் கவனம் செலுத்தியவர் புனித். அவர் உடற்பயிற்சி செய்யும் காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பலமுறை பகிரப்பட்டுள்ளன. கரோனா ஊரடங்கின்போது வீட்டிலேயே உடற்பயிற்சி மேற்கொண்டார். நீண்ட நாள் கழித்து வீட்டில் குடும்பத்தினருடன் இணைந்து நேரம் செலவழிக்கிறேன். சமையல் அறையில் பல உணவுகளைச் சமைத்தேன். ஓடிடியில் பல படங்களைப் பார்த்தேன். தினமும் காலையில் மார்ஷியல் ஆர்ட்ஸ், யோகா பயிற்சிகளை மேற்கொண்டேன் என்று கரோனா காலம் பற்றி பேட்டியளித்தார். உடற்பயிற்சியில் அக்கறை கொண்டவர் 46 வயதில் மாரடைப்பில் இறந்ததுதான் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புனித் - ப்ரியா மணி
புனித் - ப்ரியா மணி

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கேபிசி நிகழ்ச்சியின் கன்னடப் பதிப்பில் தொகுப்பாளராகப் பணியாற்றினார் புனித். 1,2 மற்றும் 4 என மூன்று பருவங்களில் பணியாற்றினார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஃபேமிலி பவர் என்கிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். படங்களில் பாடல்களையும் பாடியுள்ள புனித், இதில் கிடைத்த வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார்.

புனித்தின் மனைவி, அஸ்வினி ரேவந்த். இரு மகள்கள் உண்டு. நண்பர் அறிமுகம் செய்துவைத்ததன் மூலம் அஸ்வினியை முதலில் அறிந்தார் புனித். 8 மாதங்களுக்குப் பிறகு காதலில் விழுந்ததை உணர்ந்தார். தோழியிடம் உடனே காதலைத் தெரிவித்தார். அஸ்வினியும் உடனே ஏற்றுக்கொண்டார். காதலுக்கு புனித்தின் வீட்டில் சம்மதம் சொன்னாலும் அஸ்வினியின் வீட்டில் சம்மதம் பெற தாமதம் ஆனது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அஸ்வினி தன் காதலில் உறுதியாக இருப்பதை அவருடைய பெற்றோர் அறிந்து ஏற்றுக்கொண்டார்கள். 1999 டிசம்பர் 1 அன்று புனித்தும் அஸ்வினியும் திருமணம் செய்துகொண்டார்கள். ஒரு பேட்டியில் இதுபற்றி கூறிய புனித், என் பெற்றோரிடம் காதலைப் பற்றியெல்லாம் நான் பேசியதில்லை. முதலில் என் தந்தையிடம் சொன்னேன். அம்மாவிடம் இதைச் சொல் என்றார். பிறகு இருவரும் சம்மதித்துவிட்டார்கள் என்றார். 

புனித் - பார்வதி
புனித் - பார்வதி

சேத்தன் குமார் இயக்கத்தில் ஜேம்ஸ் என்கிற படத்தில் நடித்துவந்தார் புனித். ப்ரியா ஆனந்த் கதாநாயகி.  ராஜகுமாரா படத்துக்குப் பிறகு புனித்துடன் மீண்டும் இணைந்து நடித்தார் ப்ரியா ஆனந்த். கரோனாவால் ஜேம்ஸ் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. யூ டர்ன் படத்தை இயக்கிய பவன் குமாரின் த்விதா படத்தில் அடுத்ததாக நடிக்கவிருந்தார் புனித். ஆனால் பவன் குமாரின் பிறந்த நாளன்று மறைந்தார் புனித். 

மருத்துவமனை முன்பு திரண்ட ரசிகர்கள்
மருத்துவமனை முன்பு திரண்ட ரசிகர்கள்

அப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனதால் ரசிகர்களால் அப்பு என அழைக்கப்பட்டார் புனித். கதாநாயகனாக 29 படங்களில் நடித்தார். பவர் ஸ்டார் என்கிற பட்டம் ரசிகர்கள் வழங்கியது. அவர்கள் தான் என்னுடைய பலம் என்று அவர் பேட்டியளித்தார். மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் புனித் அனுமதிக்கப்பட்டபோது அந்த ரசிகர்கள் தான் மருத்துவமனை வாசலில் திரண்டார்கள். எப்படியாவது பிழைத்துவிட வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களால் இந்த இழப்பிலிருந்து மீள்வது எளிதல்ல. அத்தகைய தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தி மறைந்து விட்டார் புனித். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com