நினைவு நாள்: எஸ்.பி.பி. என்கிற நடிகர்!

என்னை வைத்து படம் எடுக்கவேண்டாம். இந்தப் படம் தோற்றால் எனக்கு ஒன்றும் ஆகாது...
நினைவு நாள்: எஸ்.பி.பி. என்கிற நடிகர்!

பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தன் திறமையை நிரூபித்தவர் எஸ்.பி.பி. ஏராளமான தமிழ், தெலுங்குப் படங்களில் அவர் நடித்தார். சில படங்களில் அவர் தான் கதாநாயகன்.

நடிகராக எஸ்.பி.பி. முத்திரை பதித்த படங்கள் என இவற்றைச் சொல்லாம்.

கேளடி கண்மணி (1990)

என்னை வைத்து படம் எடுக்கவேண்டாம். இந்தப் படம் தோற்றால் எனக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் உங்களுடைய வாழ்க்கை போய்விடும் என வசந்துக்கு அறிவுறுத்தியிருக்கிறார் எஸ்.பி.பி. ஆனால் வசந்துக்கு எஸ்.பி.பி.யின் நடிப்பு பற்றி தெரியும்.

பாடகராக உச்சத்தில் இருந்தபோது 1987-ல் பாலசந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் பாடும் திறமை கொண்ட மருத்துவராக நடித்திருப்பார் எஸ்.பி.பி. அப்போது அவர் வயது 41. தான் பாடிய பாடல்கள் உள்பட பழைய பாடல்களை அடிக்கடிப் பாடும் வேடம் அது. எஸ்.பி.பி.யின் கதாபாத்திரத்தையும் அவருடைய நடிப்பையும் ரசிகர்கள் வரவேற்றார்கள். 

அடுத்த மூன்று வருடங்களுக்கு எஸ்.பி.பி. நடித்து ஒரு தமிழ்ப் படமும் வெளிவரவில்லை. ஆனால் கே.பி.யின் சீடர் வசந்த், எஸ்.பி.பி.யைக் கதாநாயகன் ஆக்கினார், தனது முதல் படமான கேளடி கண்மணியில்.

இயக்குநர் வசந்துக்கு அப்போது 26 வயதுதான். ஆனால் திருமணமான ஆணின் காதலை உணர்வுபூர்வமாகச் சொல்லும் கதையை தன் முதல் படமாகத் தேர்ந்தெடுத்தார். படத்தில் இளம் கதாநாயகனாக ரமேஷ் அரவிந்த் இருந்தாலும் கேளடி கண்மணி என்றால் அது எஸ்.பி.பி. தான்.

மண்ணில் இந்தக் காதல் இன்றி பாடலை மூச்சுவிடாமல் எஸ்.பி.பி. பாடினார் என்கிற செய்தி படம் வந்த புதிதில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 80ஸ் கிட்ஸ் எல்லாம் எஸ்.பி.பி. போல பாட முயற்சி எடுத்தார்கள். இந்த யோசனையை முதலில் எஸ்.பி.பி.யிடம் சொன்னார் வசந்த். 5 நிமிடப் பாடலை மூச்சுவிடாமல் பாட முடியுமா என்கிற கேள்விக்கு முடியும் எனப் பதில் கூறியுள்ளார் எஸ்.பி.பி. கூடுதலாக ஒரு கேள்வி கேட்டுள்ளார். 

நான் பாடிய பிறகு படத்தை எப்படி முடிப்பீர்கள்? 

ஏன்? 

பிறகுதான் நான் உயிரோடு இருக்க மாட்டேனே?!

இந்த யோசனையை இளையராஜாவிடம் விவாதித்துள்ளார் வசந்த். முழுப் பாடல் வேண்டாம், சரணத்தை மட்டும் பாடவைப்போம் எனக் கூறியுள்ளார் ராஜா. 40 நொடிகள் உள்ள 2-ம் சரணத்தின் முதல் 25 நொடிகளுக்கு மூச்சு விடாமல் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. பிறகு மீதமுள்ள 15 நொடிப் பாடலைத் தனியாகப் பாடியுள்ளார். ஒலிப்பதிவுக் கூடத்தில் இரண்டையும் சேர்த்து ஒரே டேக்கில் மூச்சுவிடாமல் பாடியது போல மாற்றியிருக்கிறார்கள். இந்த உத்தி படத்துக்குப் பெரிய விளம்பரத்தை அளித்தது.

எஸ்.பி.பி. பயந்தது போலில்லாமல் படம் 285 நாள்கள் ஓடியது. 

திருடா திருடா (1993)

சிபிஐ அதிகாரி வேடம், மணி ரத்னம் படம். யாருக்கு வேண்டாம் எனச் சொல்ல மனசு வரும்?

படம் முழுக்க வரும் கதாபாத்திரம். சிபிஐ அதிகாரி நாராயணனாக நடித்திருந்தார் எஸ்.பி.பி. அவருடைய உடல்மொழியும் அசால்டாகப் பேசும் தொனியும் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு நன்குப் பொருந்தியது.

சிகரம் (1991)

எஸ்.பி.பி. கதாநாயகனாக நடித்த மற்றுமொரு படம். ராதா, ரேகா என இரு ஜோடிகள். கதாநாயகனாக நடித்ததுடன் இசையமைப்பாளரும் எஸ்.பி.பி.தான். அற்புதமான பாடல்களுக்கு இன்றைக்கும் ரசிகர்களின் நினைவில் உள்ள படம்.  
காதலன் (1994)

ஆளுநர் மகளைக் காதலிக்கும் மகனைச் சமாளிக்கும் வேடம் எஸ்.பி.பி.க்கு. சாதாரண கான்ஸ்டபிளான எஸ்.பி.பி. மகனுடன் இணைந்து மது அருந்தும் காட்சிக்குத் திரையரங்கில் ரசிகர்கள் நன்கு வரவேற்பளித்தார்கள். அந்தக் காட்சியில் தான் ஆளுநர் மகளைத் தன் மகன் காதலிக்கிறான் என்பதை அறிவார் எஸ்.பி.பி. பிறகு மகனுக்கு உத்வேகம் அளித்து பழைய நிலைமைக்குக் கொண்டு வருவார். இப்படியொரு தந்தை நமக்கு இருக்கமாட்டாரா என இளைஞர்களை ஏங்க வைத்த கதாபாத்திரம்.

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு மீட்டினால் பாடலில் பிரபுதேவா, நக்மாவுடன் இணைந்து ஜாலியாக நடனமாடினார் எஸ்.பி.பி.

உல்லாசம் (1997)

90களில் தந்தை வேடத்துக்கு மிகப் பொருத்தமானவராக இருந்ததால் பல வாய்ப்புகள் எஸ்.பி.பி.யைத் தேடி வந்தன. அதில் ஒன்றுதான் உல்லாசம் படத்தில் அவர் நடித்த தங்கையா வேடம். அஜித்தின் தந்தையாக நடித்திருந்தார். தன் மகன் தன் பேச்சைக் கேட்காததால் தன்னுடைய நண்பன் மகனை நல்ல மனிதனாக மாற்றும் வேடம். 1997-ல் மட்டும் 5 படங்களில் நடித்திருந்தார். 

இந்தப் படங்கள் தவிர காதல் தேசம், குணா, பாட்டுப் பாடவா, அவ்வை சண்முகி, ரட்சகன், மின்சார கனவு, பிரியமானவளே எனப் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தார் எஸ்.பி.பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com