சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்.17 ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. தற்போது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும் தனுஷ் மீண்டும் இயக்குநராக புதிய படத்தினை இயக்குவார் எனத் தகவல் வெளியானது.
இப்படம் வட சென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தப் படத்தில் துஷாரா விஜயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘சார்பட்ட பரம்பரை’ படத்தில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனம் பெற்ற நடிகையாக மாறினார். பின்னர் நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தில் ரெனே கதாபாத்திரத்தில் நடித்து சமூக வலைதளங்களில் உரையாடலையும் தொடங்கி வைத்தார்.
முக்கியமான கதாபாத்திரங்களை தேடி நடிக்கும் இவர் தற்போது தனுஷின் 50வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெய்ராம் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.