இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3-ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றன. தமிழில் நடிகர் கமல் நடித்திருந்தார்.
ஹிந்தியில் அஜய் தேவ்கன், ஷ்ரேயா நடித்திருந்தார்கள்.
த்ரிஷ்யம் படத்தின் தயாரிப்பாளர் ஆசிர்வாத் சினிமாஸ் - ஆண்டனி பெரும்பாவூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ‘த்ரிஷ்யம் 3’ உறுதி எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆக.15இல் நானக்குழி எனும் நகைச்சுவை படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் நேர்காணல் ஒன்றில் ஜீத்து ஜோசப் பேசியதாவது:
2013இல் த்ரிஷ்யம் எடுக்கும்போது அதன் அடுத்தபாகம் குறித்து திட்டம் எதுவுமில்லை. பூச்சியத்திலிருந்து ஒரு சிந்தனை உருவாக 5 ஆண்டுகள் ஆனது. தற்போது எனக்கு எந்த சிந்தனையும் வரவில்லை. இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் ஒரு பிரச்னை இருக்கிறது.
த்ரிஷ்யம் 3 படத்தில் ஒரு இடத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. எனக்கு படத்தை எப்படி முடிக்க வேண்டுமெனத் தெரிகிறது. ஆனால் சில இடங்களில் என்ன செய்ய வேண்டுமென தெரியவில்லை.
த்ரிஷ்யம் 3 படத்தின் கிளைமேக்ஸ் குறித்த திட்டம் ஏற்கனவே எனக்கு இருந்தது. அதை மோகன்லால் சாரிடம் கூறினேன். அவருக்கும் பிடித்தது. ஆனால் திரைக்கதையில் அந்தக் குறிப்பிட்ட இடத்தை நான் தாண்டியாக வேண்டும் என்றார்.