
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்த ஜானி மாஸ்டர் பிணையில் வீடு திரும்பியுள்ளார்.
நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து தான் வெளியேற்றப்படவில்லை என தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.
நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் கடந்த 4 வருடங்களாக பெண் உதவி நடன இயக்குநரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பெண் மைனராக இருக்கும்போதிருந்தே அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஜானி மாஸ்டர் மீது ஐபிசி (இந்திய குற்றவியல் சட்டம்) 376, 506 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சாரளப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
30 நாள்களுக்கும் மேலாக சிறையிலிருந்த பின்னர் பிணையில் வீடு திரும்பினார்.
திறமையை முடக்க முடியாது
இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டு கூறியதாவது:
நடனர்கள், நடன இயக்குநர்கள் அசோசியேஷன் குழுவிலிருந்து என்னை நிரந்தரமாக நீக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மையில்லை. அது முற்றிலும் பொய்யானது. நான் இப்போதும் உறுப்பினராகத்தான் இருக்கிறேன்.
எனக்கு ஆதரவு தெரிவிக்கும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. சில ஊடகங்கள் மட்டுமே தவறான செய்திகளை பரப்புகின்றன. உண்மையான செய்திகளை அறிந்து வெளியிடுங்கள். ஏனெனில் அதனால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
திறமையை முடக்க யாராலும் முடியாது. யார் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம். நான் அடுத்த பாடலுக்கு என் குழுவுடன் தயாராகி வருகிறேன்.
கேம் சேஞ்சர் படத்தில் நடனம்
எனது நடன இயக்குநர்கள் சங்கத்துக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். அதனால்தான் எனக்கு பான் இந்திய நடன இயக்குநர் என்ற பெயர் வந்துள்ளது. எனக்கு ஆதரவு தெரிவிக்கும் சங்கத்துக்கு நான் எப்போதும் நன்றி கடன்பட்டுள்ளேன். அதன் தேர்தல் குறித்து நான் சட்டபூர்வமாக போராடி வருகிறேன்.
என்னால் பல நடன இயக்குநர்கள் உருவாகியுள்ளார்கள். கேம் சேஞ்சர் படத்தில் என்னுடைய பாடல் ஒன்று வெளிவரவிருக்கிறது. உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.