இந்தப் பிரச்னையில் ஏன் தீவிரம் காட்டினேன்? ராஷ்மிகா விளக்கம்

நடிகை ராஷ்மிகா மந்தனா போலி சித்திரிப்பு விடியோ குறித்து விளக்கமளித்துள்ளார்.
இந்தப் பிரச்னையில் ஏன் தீவிரம் காட்டினேன்? ராஷ்மிகா விளக்கம்

ராஷ்மிகா மந்தனாவின் போலி சித்தரிப்பு (டீப்ஃபேக்) விடியோ அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து தில்லி மகளிா் ஆணையம் அளித்த புகாரின்பேரில், தில்லி சிறப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

தொடர்ந்து, ஆந்திர மாநிலம் குண்டூரை சோ்ந்த ஈமனி நவீன் (23) என்ற பி.டெக் பட்டதாரி, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி சித்திரிப்பு விடியோவை வெளியிட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்தபோது, சமூக வலைதளத்தில் தன்னைப் பின்பற்றுபவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ராஷ்மிகா மந்தனாவை தவறாக சித்திரித்து விடியோ பதிவிட்டதாக தெரிவித்தாா்.

இதனால் பிரச்னை ஏற்பட்டதால், சம்பந்தப்பட்ட விடியோவை சமூக வலைதளத்தில் இருந்து உடனடியாக நீக்கிவிட்டதாகவும் அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இதுதொடா்பாக போலீஸாா் அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், சித்திரிப்பு விடியோ குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ராஷ்மிகா, “இது போன்ற தொல்லைகளைப் பலரும் எதிர்கொள்கிறார்கள். இதைக் குறித்து நாம் பேசினால், இதெல்லாம் நடக்கும் எனத் தெரிந்துதானே நீங்கள் இந்தத் துறைக்கு வந்தீர்கள் என்பதுபோல் கேட்கிறார்கள். நான் கல்லூரி மாணவியாக இருக்கும்போது இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால், பயந்து ஒதுங்கியிருப்பேன். ஆனால், இன்று நான் என்ன நினைக்கிறேன் என்பதை சமூகம் எதிர்பார்க்கிறது. குறைந்தது, என்னைப் பின்தொடரும் 4.1 கோடி (இன்ஸ்டாகிராமில்) மக்களுக்காவது இந்தப் பிரச்னையைத் தைரியமாக என்னால் எடுத்துக் கூற முடிகிறது. அதனால்தான், இந்த சித்திரிப்பு விவகாரத்தில் தீவிரம் காட்டினேன்” எனக் கூறியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com