கோட் டிக்கெட் விலை ரூ. 2,000?
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கோட் திரைப்படத்தின் டிக்கெட் ரூ. 2,000-க்கு விற்கப்படுவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் எல்லையில் உள்ள கேரள மாநிலத்துக்கு உள்பட்ட பாலக்காட்டில் உள்ள திரையரங்கு ஒன்றில், கோட் படத்தின் டிக்கெட்டை திரையரங்கு நிர்வாகமே ரூ. 2,000-க்கு விற்றதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்டை மாநிலங்களில் சிறப்புக் காட்சி
நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் இன்று காலை வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசின் கட்டுப்பாடு காரணமாக காலை 9 மணிக்கே அனைத்து திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்படவுள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் திரையிடப்படுகிறது.
ஆனால், தமிழகத்தின் எல்லையில் உள்ள கேரளம், ஆந்திரம், புதுச்சேரி, கர்நாடக மாநிலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் அதிகாலை காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டதால் விஜய்யின் ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
டிக்கெட்டின் விலை ரூ. 2,000?
பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய்யின் ரசிகர்கள் ரூ. 1,200 முதல் ரூ. 2,000 வரை கொடுத்து டிக்கெட்டை வாங்கி படத்தை பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரையரங்கின் உரிமையாளரே தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ரூ. 2,000 வரை டிக்கெட்டை விற்றதாகவும், இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் கேரள ரசிகர்களால் படத்தை பார்க்க முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ரூ. 2,000-க்கு டிக்கெட்டை வாங்கி திரையரங்குக்கு வெளியே ரூ. 3,000 வரை ரசிகர்களுக்கு டிக்கெட்டை விற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ரூ. 400 கோடி செலவில் உருவாக்கியுள்ள கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 100 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.