
சினிமாத்துறையில் பிரபலமான, நிறைவேறாத காதல்கள் பல இருந்தாலும் இன்றும் ஒரு சோகத்துடன் நினைவு கூறப்படும் காதல் என்றால் அது நடிகர் கமல்ஹாசன் நடிகை ஸ்ரீவித்யாவின் காதலாகத்தான் இருக்கும். ‘அன்னை வேளாங்கன்னி’, ‘உணர்ச்சிகள்’, ‘அபூர்வ ராகங்கள்’ என 1970-களில் அதிக படங்களில் கமல்ஹாசனுடன், ஸ்ரீவித்யா நடித்திருக்கிறார். தொடர்ந்து, இருவரும் அடிக்கடி ஸ்டூடியோவில் சந்திக்கும் சூழல் இருந்தது. ஒருகட்டத்தில், கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் காதலிக்கத் துவங்கினர். அன்றைய சினிமா வட்டாரத்தில் இவர்களது காதல் குறித்துப் பெரிதாகப் பேசப்பட்டதாகவே பலரும் குறிப்பிடுவதுடன் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றே எதிர்பார்ப்பு இருந்திருக்கிறது.
ஆனால், இந்த விவகாரம் ஸ்ரீவித்யாவின் குடும்பத்திற்கு தெரிய வந்தபோது பிரச்னை அதிகரித்து. உடனே, ஸ்ரீவித்யாவின் அம்மா இருவரையும் அழைத்து ஆலோசனை வழங்கியிருக்கிறார். குறிப்பாக, காதலுக்காக சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக வரும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள் என்று எச்சரித்து காத்திருக்க சொல்லியிருக்கிறார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்குள் கமல்ஹாசன், வாணி கணபதியைத் திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீவித்யாவும் இயக்குநர் பரதனைக் காதலித்தார். அது விரைவில் தோல்வியடைய, ஜார்ஜ் தாமஸ் என்பவரைத் திருமணம் செய்தார்.
ஆனால், சில ஆண்டுகளிலேயே ஜார்ஜின் நடவடிக்கைகள் பிடிக்காததால் விவாகரத்து பெற்றார். கமலும் வாணியுடன் 10 ஆண்டுகள் திருமண வாழ்வில் இருந்தார். பின். அவரை விவாகரத்து செய்து சரிகாவைத் திருமணம் செய்துகொண்டார். காதலித்த இருவர், யாரோ இருவராக பிரிந்து சென்றதும், வேறு வேறு வாழ்க்கை அமைகிறது. அதிலும் இருவருக்கும் தனிப்பட்ட சிக்கல்கள், விவாகரத்துகள். ஆனால், ஸ்ரீ வித்யா அதன் பின் திருமண வாழ்க்கைக்குள் செல்லவில்லை.
அதேநேரம், இருவரது திருமணத்திற்குப் பின்பும் கமலும், ஸ்ரீவித்யாவும் அபூர்வ சகோதரர்கள், குணா, காதலா காதலா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.
இப்போது ஏன் இந்தத் தகவல்கள்? காரணம் இருக்கிறது. சில நாள்களாக சமூக வலைதளங்களில் இரண்டு விடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. முதலில் ஸ்ரீவித்யாவின் பழைய நேர்காணல் விடியோ. அதில், தனக்கும் கமல்ஹாசனுக்குமான காதல் கதையைக் கூறுபவர் தன் அம்மா சொன்னதால் காதலை முறித்துக்கொண்டதாகக் கூறுகிறார். ஆனால், அவரே கமல்ஹாசனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டது எனத் தெரியவந்தபோது உடைந்து விட்டதையும் குறிப்பிடுகிறார்.
இன்னொன்று, கமலின் விடியோ. அதில் ஸ்ரீவித்யாவுடனான புகைப்படத்தைக் குறிப்பிட்டு கேள்வியெழுப்பப்படுகிறது. அதற்கு கமல், “அவர் என் காதலி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது, திருமணத்தில்தான் முடிய வேண்டும் என்றில்லை. எங்களுக்குள் எப்போதும், அந்தக் காதல் இருக்கும்” என உருக்கமாக பதிலளிக்கிறார்.
இதையும் படிக்க: பிக் பாஸ்: பணப்பெட்டியுடன் வெளியேறப் போவது யார்?
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவித்யா கடந்த 2006 ஆம் ஆண்டு மறைந்தார். இறப்பதற்கு சில நாள்களுக்கு முன், மறைந்த நடிகரும் இயக்குநருமான மனோபாலாவை அழைத்து இறுதியாக கமல்ஹாசனைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். மிகப்பேரழகி எனப் பெயரெடுத்த வித்யாவின் முகம் புற்றுநோயால் சிதைந்த நேரத்தில் இறுதியாகக் கமல் அவரைச் சந்தித்தார் எனக் கூறுகின்றனர். 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ’திரக்கத’ (திரைக்கதை) படம் கமல், ஸ்ரீவித்யாவின் காதலை மையமாகக் கொண்டு உருவானதுதான்.
இந்த மூன்று விடியோக்களையும் இணைத்து கமல், உத்தம வில்லன் படத்தில் ஸ்ரீவித்யாவுக்கும் தனக்குமான உறவையே பேசியிருக்கிறார் என ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். சினிமாவுக்காக தன் காதலியைப் பிரிந்த நாயகனின் கதையாக உருவான உத்தம வில்லன் கிளைமேக்ஸில் கமல் புற்றுநோயால் முகம் ஒடுங்கிய நிலையில்தான் உயிரிழக்கிறார். அது ஸ்ரீவித்யாவுக்கான காட்சிதான் என ரசிகர்கள் இவர்களின் காதலை நினைத்து நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.