குட் பேட் அக்லியின் வெற்றிக்குப் பின் இயக்குநர் ஆதிக்குக்கு அஜித் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகுந்த திருப்தியளித்துள்ளதால் பலரும் மறுமுறையும் திரையரங்கில் இப்படத்தைப் பார்த்து வருகின்றனர்.
இதனால், முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாகவே வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “அஜித் சாரை இயக்குவேன் என நினைத்துகூட பார்க்கவில்லை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் போதுதான் முதலில் அவரைச் சந்தித்தேன். அவருடன் இருந்த அந்த 20 நாள்களில் என் சிந்தனை, சினிமாவில் நான் என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் மாற்றிவிட்டார்.
அப்போதே, தயாரிப்பாளர் போனி கபூரிடம் நான் பெரிய இயக்குநராக வருவேன் எனக் கூறினார். குட் பேட் அக்லி வெளியீட்டுக்குப் பின் அஜித் சாரிடம் பேசினேன். சரி, படம் வெற்றி பெற்றுவிட்டது. இதை தலையில் ஏற்றிக்கொள்ள வேண்டாம். தோல்வியடைந்தாலும் அதை வீட்டுக்கு எடுத்தச் செல்ல வேண்டாம். அடுத்த வேலையைப் பாருங்கள். தொடர்ந்து பணியாற்றுங்கள்” எனக் கூறியதாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: அஜித் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி உறுதி?