
பாகிஸ்தான் மக்களும் நம்மைப் போன்றவர்களே என்று இசையமைப்பாளரும் நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.
ஜம்மு-காஷ்மீரில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து கடந்த புதன்கிழமை கூடிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது.
அதில் முக்கியமாக, பாகிஸ்தானுக்கு நீா் ஆதாரமாக விளங்கும் சிந்து நதி நீரைப் பகிரும் 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது.
இந்தநிலையில், பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதல் குறித்தும் மத்திய அரசின் மேற்கண்ட நடவடிக்கைகளைப் பற்றியும் இன்று(ஏப். 27) விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவொன்றில், பாகிஸ்தான் மக்களும் நம்மைப் போன்றவர்களே என்று தெரிவித்துள்ளார். ‘காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகக்’ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் கூறியிருப்பதாவது: “பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், அங்குள்ள பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள்.
வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என்று பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.
இன்னொருபுறம், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுமையாக எதிா்க்கிறது என்று குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் அரசு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணையில் இணையத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.