அடுத்தடுத்து கைதான மலையாளத் திரைப் பிரபலங்கள்! பின்னணியில் யார்?

மலையாளத் திரைப் பிரபலங்கள் கைது குறித்து....
ஷைன் டாம் சாக்கோ, வேடன், ஸ்ரீநாத் பாசி
ஷைன் டாம் சாக்கோ, வேடன், ஸ்ரீநாத் பாசி
Published on
Updated on
2 min read

மலையாள சினிமாவின் பிரபலங்கள் தொடர்ந்து கைதாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா என்றாலே ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமான விஷயம்தான். ஆனால், சினிமாவிலிருக்கும் பெரும்பாலானவர்களின் கொண்டாட்டங்கள் போதைப்பொருளாலும் நள்ளிரவு பார்ட்டிகளாலுமே நிரம்பியிருக்கின்றன.

இந்தியளவில் அதிக வணிகங்களைச் செய்யும் தென்னிந்திய சினிமாவில் இப்பழக்கம் மிக அதிகம் என்றாலும் அண்மை காலமாக மலையாளிகளின் போதைப்பழக்கம் அதிகரித்துள்ளதாகவே ஆய்வுகள் சொல்கின்றன.

கல்வியில், சிந்தனையில் முதன்மை மாநிலம் என்கிற அடையாளத்துடன் வலம் வந்த கேரளம் இப்போது போதைப்பொருள் கலாசாரத்தால் சீரழிந்து வருவது வருத்தத்தையே ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்திய அரசாங்சகத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சா, கொகைன், ஹெராயின் உள்பட்ட பல போதைப்பொருள்களுடன் இவற்றைவிட விலை குறைவான போதைப்பொருளாகக் கருதப்படும் எம்டிஎம்ஏ (MDMA) போன்ற போதை மாத்திரைகளும் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளது நாள்தோறும் கேரளத்தில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் தெரிகிறது.

கூர்ந்து கவனித்தால் சில ஆண்டுகளாக வெளியாகும் மலையாளப் படங்களில் 90 சதவீதம் போதை கலாசாரத்தை ஏற்றுக்கொண்டதாகவே காட்டுகின்றன. உதாரணம், ஆவேஷம் திரைப்படம். புகைப்பிடிப்பது, மது அருந்துவது என படம் முழுக்க கல்லூரி மாணவர்கள் அதையேதான் செய்துகொண்டிருக்கின்றனர்.

ஆவேஷம் போல் பல படங்கள். போதையும் அலம்பல்களும் இருந்தால்தான் நல்ல கதைக்கு அழகு என ரசிகர்களை பல இயக்குநர்கள் உருவாக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.

இன்னொரு உதாரணம், ஃபாசில் ஜோசஃப் நடித்த பொன்மேன். அவருடைய கதாபாத்திரம் கொஞ்சம் சுயநலவாதியாக இருந்தாலும் குடும்பத்திற்காக உழைக்கும் நல்லவன். ஆனால், பெரும் குடிகாரன். காட்சிக்கு காட்சி ஃபாசில் குடித்துக்கொண்டேதான் இருக்கிறார். இறுதியில், அவர் ஒரு நல்லவராக எஞ்சுகிறார். அப்படத்தில் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் நார்மலைஸ் (normalize) செய்யப்படுகிறது. அது இளம் தலைமுறைக்கு அபாயத்தைப் போதிக்கக்கூடியது இல்லையா?

ஏன் சினிமாவைக் குறிப்பிட வேண்டும் என்றால், ஒரு கலாசாரத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல சில கலாசாரங்களையும் சினிமாவால் உருவாக்க முடியும். அப்படி, மலையாள திரைப்படங்கள் போதையை இயல்பாக்கி வருவதையே அங்கு உருவாகும் படங்கள் தெரிவிக்கின்றன.

விஷயத்துக்கு வருவோம், கடந்த ஏப். 1 ஆம் தேதி ஆழப்புழாவிலுள்ள கடற்கரை விடுதி ஒன்றில், ரூ. 3 கோடி மதிப்புள்ள ஹைபிரிட் (hybrid) கஞ்சாவுடன் ஃபெரோஸ் (26) என்பவர் சிக்கினார். அவரை விசாரித்ததில் அதைக் கொடுத்து அனுப்பியது சென்னையைச் சேர்ந்த பெண் தஸ்லீமா (42) எனத் தெரிய வந்ததும் காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது.

தஸ்லீமாவை நேரில் அழைத்து விசாரித்ததில் அந்த கஞ்சா அனைத்தும் சினிமா பிரபலங்களுக்கு விற்க கொண்டுவந்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். காவல்துறையினர் அதிர்ச்சியடையும் அளவிற்கான நட்சத்திரங்களின் பெயர்களெல்லாம் அப்பட்டியலில் இருந்திருக்கிறது.

அதில் முக்கியமாக, நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி உள்ளிடோர் கைது செய்யப்பட்டு பின் சாக்கோ போதை மறுவாழ்வு மையத்திற்கும் ஸ்ரீநாத் பாசி வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், இந்தக் கைதுகளைத் தொடர்ந்து பிரபல இயக்குநர்களான காலித் ரஹ்மான் (தள்ளுமலா, ஆழப்புழா ஜிம்கானா), அஷ்ரஃப் ஹம்சா (தமாஷா) நேற்று (ஏப்.28) பிரபல ராப் பாடகரான வேடன் (மஞ்ஞுமல் பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற குதந்த்ரம் பாடலைப் பாடியவர்) உள்ளிட்டோர் அதே ஹைபிரிட் (hybrid) கஞ்சாவுடன் சிக்கியது அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வேடன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.
வேடன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

அன்றாடம் போதைப்பொருள் செய்திகள் இல்லாத கேரளம் இல்லை. சர்வ சாதாரணமாக 3 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் பிடிபட்டு தொடர்ந்து திரைத்துறையினர் கைதாகி வருவது உள்ளிட்டவை கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இதற்கு முன்பே ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி ஆகியோர் போதைப்பொருள் வழக்கில் கைதானவர்கள்தான். ஆனால், ஏன் அவர்கள் சரியான தண்டனை இல்லாமல் விடுவிக்கப்பட்டனர் என குரல்கள் எழுந்துள்ளன. இன்னும் சில நட்சத்திரங்களின் பெயர் பட்டியலில் இருப்பதால் அவர்களும் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிற்து.

இதற்கிடையே, மறைமுகமாக சில போதைப்பொருள் கும்பல்கள்தான் மலையாள சினிமாவைக் கட்டுப்படுத்தி வருகின்றன என்றும் ஒவ்வொருவராகக் கைது செய்வதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக போதைப்பொருள் கும்பலை அரசால் ஏன் பிடிக்க முடியவில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில், கேரளத்தில் இவ்வளவு போதைப்பொருள் புழக்கத்திற்கு பின்னணியில் யார், யாரெல்லாம் இருக்கிறார்கள் என ஆளும் அரசிற்குத் தெரியாமல் இருக்குமா? இல்லை நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு அவர்கள் பெரிய ஆள்களா? என அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com