பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று (ஜன. 9) காலமானார். அவருக்கு வயது 80.
கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் பிறந்த ஜெயச்சந்திரன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
தமிழில், வசந்தகால நதியினிலே, கவிதை அரங்கேறும் நேரம், ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, அந்தி நேர தென்றல் காற்று... உள்ளிட்ட பலர் சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில், ஒரு தெய்வம் தந்த பூவே... கிழக்குச் சீமையிலே படத்தில் கத்தாழம் காட்டுவழி... ஆகிய பாடலை பாடியிருந்தார்.
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, ஐந்து முறை கேரள மாநில திரைப்பட விருதுகள், கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். நான்குமுறை தமிழ்நாடு மாநில விருதுகளை வென்றுள்ளார்.
இதையும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!