
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் இரண்டு போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரண்டும் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை என்றாலும் இப்படம் அரசியலை மையமாக வைத்து உருவாகிறது என்கிற ஊகத்தை அளித்துள்ளது.
முக்கியமாக, விஜய் சாட்டையை சுழற்றும் இரண்டாவது போஸ்டரின் வண்ணம், ‘நான் ஆணைவிட்டால்’ வாசகம் குறிப்பிட்ட அரசியல் கட்சியைத் தாக்குவதுபோன்றே இருக்கிறது.
மறைந்த முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் நடித்த எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படத்தில்தான், ‘நான் ஆணையிட்டால்’ பாடல் இடம்பெற்றது. எம்ஜிஆரும் விஜய்யும் சுழற்றிய சாட்டைகளுக்கு இடையே சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.
இதையும் படிக்க: தன்பாலின காதலை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்: லிஜோமோல் ஜோஸ்!
எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியானதற்கு (1965) ஓராண்டு முன்புதான் 1964-ல் எம்ஜிஆர், ‘காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி’ என்றார். இதனால், மறைந்த முதல்வர் மு. கருணாநிதியுடன் அவருக்கு கசப்பு ஏற்பட்டிருக்கிறது. இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாகவே எம்ஜிஆர் தான் பதவி வகித்துவந்த சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.
’எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்..’ வரிகள் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக்கொண்டிருக்க, எம்ஜிஆர் 1967 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகிறார். நடிகர் விஜய் ஜன நாயகனுக்குப் பின் தன் முதல் தேர்தலை சந்திக்கவுள்ளார்.
எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படம் தெலுங்கில் வெளியான ‘ராமுடு பீமுடு’ (Ramudu bheemudu) படத்தின் தழுவல்தான். ஜன நாயகன் படமும் சில மாறுதல்களுடன் உருவாகும் ‘பகவந்த் கேசரி’ என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக் என்றே சொல்லப்படுகிறது. ராமுடு பீமுடுவின் கதாநாயகன் என்.டி. ராமாராவ் (என்டிஆர்). பகவந்த் கேசரி நாயகன் என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா.
முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினராகும்போது எம்ஜிஆருக்கு சரியாக 50 வயது. நடிகர் விஜய் தன் 50-வது வயதில் அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தி, அடுத்தாண்டு தேர்தலை எதிர்கொள்கிறார்.