
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.
திரைப்படங்கள் மறுவெளியீடு சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது. இப்படி மறுவெளியீடு செய்யப்பட்ட படங்களில் விஜய் நடித்த கில்லி கடந்தாண்டு வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது.
பழைய படங்களைத் திரையில் மீண்டும் ரசிக்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் தயாரிப்பாளர்களும் முன்பு வெளியான படங்களை மறுவெளியீடு செய்கின்றனர்.
இந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ரஜினிமுருகன் திரைப்படம் மீண்டும் திரைகளில் வெளியிடப்படவுள்ளது.
ரஜினிமுருகன் திரைப்படம் சிவகார்த்திகேயன் நாயகனாக வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு பெரிய வெற்றியைக் கொடுத்த படமாகும். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பின் வெளியான இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
நடிகை கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின.
இந்த நிலையில், திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வருகிற மார்ச் 14 அன்று ரஜினிமுருகன் படத்தை மறுவெளியீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமரன் படத்தின் பெரிய வெற்றிக்குப் பின் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி, மதராஸி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இரு படங்களும் இந்தாண்டு திரைக்கு வரவுள்ளன.
அடுத்ததாக அவர் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் மலையாள இயக்குநர் ஜுட் ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்தப் படங்களில் அதிக பொருட்செலவில் இந்தப் படம் உருவாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன .