ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் சண்டக்கோழி தொடரில் நடித்து பிரபலமான நடிகர் நவீன் கிஷோர் நடிக்கவுள்ளார்.
இவருடைய வருகையின் மூலம் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கும் கார்த்திகை தீபம் தொடரில் மேலும் பல திருப்பங்கள் உருவாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2022 முதல் கார்த்திகை தீபம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ தமிழில் அதிக டிஆர்பி பெற்றுத்தரும் தொடர்களில் ஒன்றாக உள்ள கார்த்திகை தீபம் தொடரில் நாயகனாக கார்த்திக் ராஜ், நாயகியாக ஆர்த்திகா ஆகியோர் நடிக்கின்றனர்.
நிற பாகுபாடு காரணமாக பாடல் பாடும் திறமையிருந்தும் மேடைகளில் புறக்கணிக்கப்படும் இளம்பெண், ஒரு கட்டத்தில் குடும்ப சூழல் காரணமாக பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்துகொள்கிறார்.
பணக்கார இளைஞன், கிராமத்தில் தான் ஈர்க்கப்பட்ட காந்தக் குரலைத் தேடி அலைகிறார். ஆனால், அந்தக் குரல் தனது மனைவியினுடையது என்பது அவருக்குத் தெரியாது. இவர்களுக்குட்பட்ட கதைதான் கார்த்திகை தீபம். தற்போது இக்கதை பல திருப்பங்களுக்கிடையே பயணித்து வருகிறது.
இத்தொடரில் நடிக்கும் துணை நடிகர்களான ரியா சக்ரவர்த்தி, நிமேஷ் சாகர், விஜே ரேஷ்மா, சத்யா சுதா, தினேஷ் கோபால்சாமி உள்ளிட்டோரின் மூலம் இத்தொடர் விறுவிறுப்பு குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனிடையே இத்தொடரில் மேலும் பல இளம் ரசிகர்களைக் கவரும் வகையில் நடிகர் நவீன் கிஷோர் அறிமுகமாகவுள்ளார். இவர் சண்டக்கோழி தொடரில் நடித்து புகழ் பெற்றவர். இதனால் கார்த்திகை தீபம் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | அமைச்சர் அன்பில் மகேஸ் நடித்த தொடர் எது தெரியுமா?