காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவு! கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

பொறுமையை சோதிக்கிறதா மகுடம்? திரைவிமர்சனம்

நடிகர் விஷால் இயக்கி நடித்துள்ள மகுடம் திரைப்படம் குறித்த விமர்சனம்

News image

மகுடம் திரைப்படத்தின் போஸ்டர்

Updated On :23 வினாடிகள் முன்பு

நடிகர் விஷால் இயக்குநராக அவதாரமெடுத்திருக்கும் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

1965இல் தொடங்குகிறது கதை. சென்னையில் கடத்தப்பட்ட குழந்தையான விஷால் ரவுடி கும்பலால் பிச்சையெடுக்க வைக்கப்படுகிறார். அங்கிருந்து தப்பித்து விசாகப்பட்டினம் துறைமுகம் செல்லும் அவர் அங்கு கப்பலையே வாங்கும் அளவு வளர வேண்டும் என ஆசைப்படுகிறார். அப்படியே இன்னொரு பக்கம் வரும் கதையில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்யும் விஷால், தனது மாமனார் தம்பி ராமையாவிடம் துஷாரா விஜயனை திருமணம் செய்ய தன்னிடம் கார் இருப்பதாக பொய் சொன்னதை சமாளிக்க கார் வாங்கத் தவிக்கிறார். மாத சம்பளம் ரூ.17500 வாங்கும் விஷால் ஒரு கட்டத்தில் கார் வாங்கி தனது குடும்பத்துடன் குன்னூர் செல்கிறார். அங்கு திடீரென ஒரு கும்பல் அவரது காரை சுத்துபோட்டு துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. இதில் துஷாரா விஜயனும், அவரது பெண் குழந்தையும் கொல்லப்படுகின்றனர். யார் அந்த கும்பல்? எதற்காக விஷால் குடும்பத்தைக் கொன்றனர்? இந்த விஷாலுக்கும், விசாகப்பட்டினம் விஷாலுக்கும் என்ன தொடர்பு? இந்த கொலைக்குப் பிறகு என்னவானார் சென்னை விஷால்? இதுதான் மகுடம் திரைப்படத்தின் கதை.

மகுடம் படத்தில் நடிகர் விஷால்

மகுடம் படத்தில் நடிகர் விஷால்

இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் ’இயக்குநர்’ விஷால், ரவுடி தந்தை, அப்பாவி மகன் என அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் இதற்கு மேல் துவைக்க முடியாத அளவு அடித்து துவைக்கப்பட்டு விட்டதால் அதை ஏன் இதில் முயற்சித்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ஒட்டு தாடியும், கரகர குரலும் மட்டும் இருந்தால் போதும் அது அப்பா கதாபாத்திரம் ஆகிவிடும் என்பதும் இதில் எடுபடவில்லை. அதிகம் உண்ணும் கதாபாத்திரம் துஷாரா விஜயனுக்கு. அதை சரியாக செய்திருக்கிறார் அவர். அதைத்தாண்டி சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை அவரது கதாபாத்திரம். ப்ளாஷ்பேக் காட்சியில் வருகிறார் நடிகை அஞ்சலி. பார்வையாளர்களைக் கட்டிப்போட திரையில் சற்று துள்ளலாக இருக்கிறார். ஒரு பாடல்...கொஞ்சம் ரொமான்ஸ்...ஒரு அடிதடி...அதன்பிறகு அவரும் சோபிக்கவில்லை.

மகுடம் படத்தில் நடிகை அஞ்சலி

மகுடம் படத்தில் நடிகை அஞ்சலி

இவர்களுடன் நடிகர்கள் ஜான் விஜய், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் என பலர் நடித்துள்ளனர். நண்பனாக வரும் ஜான் விஜய்யின் கதாபாத்திரம் ஒட்டவேயில்லை. தம்பி ராமையா தொடக்கக் காட்சியில் நடிக்கிறேன் என குளிரில் நடுங்குகிறார். அடுத்த நொடியே அதை மாற்றி இயல்பாகிறார். என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்குள் காட்சிகளால் இட்டு நிரப்பியிருக்கிறது எழுத்து.

திரைக்கதையும் விஷால்தான் எழுதியிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. எந்த விறுவிறுப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது என உறுதிமொழி எடுத்துக் கொண்டிருப்பதைப் போல இருக்கிறது எழுத்து. விரைவாக கதைக்குள் செல்லாமல் பார்வையாளர்களின் பொறுமையை சோதித்தே ஆக வேண்டும் என கார் வாங்கும் காட்சிகளையெல்லாம் பார்த்து பார்த்து வைத்திருப்பதைப் போன்ற உணர்வு. மாதம் 17500 சம்பளம் வாங்கும் ஒருவர் BMW கார் வாங்குவதாகவும், அதை வாங்க முடிவதற்காக ஒரு காரணத்தையும் சொல்லியிருப்பதும் போதும், படத்தில் இருக்கும் லாஜிக்குகளுக்கான சாம்பிள். வனப்பகுதிக்குள் துப்பாக்கிகளுடன் வந்து 50 பேர் விஷால் குடும்பத்தை சுற்றி வளைக்கின்றனர். கமர்ஷியல் படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதற்காக இஷ்டத்திற்கு அடித்துவிட்டால் எப்படி பாஸ்? படத்திற்கு பில்டப் ஏற்றுகிறேன் என்பது சரி. அதற்கான பட்ஜெட்டை அவிழ்த்திருக்க வேண்டாமா? கப்பல்களில் வெடிக்கும் கலர் பொடிகளும், சண்டைக்காட்சிகளில் எகிறும் லாரிகளும், கட்டட வெடிகளும் கிராபிக்ஸ் சொதப்பல்களுக்கு சாட்சி.

மகுடம் படத்தில் நடிகர் விஷால்

மகுடம் படத்தில் நடிகர் விஷால்

தெலுங்கு வைரல் பாட்டின் மெட்டை எடுத்து அஞ்சலியை ஆட விட்டு இசைக்கான தனது பழியையும் சுமந்துகொண்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஒளிப்பதிவு சுமார் ரகம். திரைப்படத்தை எடிட்டிங் செய்யும் இடத்திலாவது காப்பாற்றி கருணை காட்டியிருக்கலாம். எடிட்டருக்கு என்ன கோபமோ அவரும் கைவிட்டுவிட்டது படத்தை அதலபாதாளத்திற்கு தள்ளிவிட்டுவிட்டது.

மகுடம் படத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை துஷாரா

மகுடம் படத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை துஷாரா

என்ன செய்தாவது எடுத்து,எதையாவது கொடுத்துவிட்டால் போதும். பார்வையாளர்கள் எப்படியாவது பார்த்துவிடுவார்கள் என நினைத்து வந்திருக்கும் மகுடம், ரசிகர்கள் சுட்டிக்கொள்ள தகுதியாக இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.