

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சாதி பாகுபாட்டுடன் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் நடந்துகொண்டதாக பிரவீன்ராஜ் தேவசகாயம் தெரிவித்துள்ளார். இதேபோன்று பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கானா வினோத்தும் விக்கல்ஸ் விக்ரமிடம் இதனை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சி முடிய ஒன்றரை வாரங்களே உள்ளதால், போட்டி தீவிரமடைந்துள்ளது.
தற்போது அரோரா, சான்ட்ரா, திவ்யா கணேசன், விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், கானா வினோத் ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக உள்ளனர். இதில், அரோரா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் யாரேனும் நிகழ்ச்சியில் தொடர விருப்பம் இல்லை என்றால், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம். எஞ்சிய 5 பேரில் ஒருவர் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுவார்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகைப்புரிந்துள்ளனர். வியானா, பிரவீன் காந்தி, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், துஷார், ரம்யா ஜோ, அப்சரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகைப்புரிந்துள்ளனர்.
இந்நிலையில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் சாதிய பாகுபாட்டுடன் நடந்துகொண்டதாக விக்கல்ஸ் விக்ரமிடம் கானா வினோத் சுட்டிக்காட்டும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அதில், கானா வினோத் - திவாகர் இணைந்து இருந்த காட்சிகள் பலரால் ரசிக்கப்படுவதாக விஜய் சேதுபதி பாராட்டியதில் இருந்து, திவாகர் தன்னிடம் நடந்துகொள்ளும் விதம் மாறிவிட்டதாகக் கூறியுள்ளார்.
தான் உடன் இருக்கும்போதுதான் திவாகர் மக்களால் ரசிகப்படுகிறார் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை கானா வினோத் சுட்டிக்காட்டினார். அப்போது உடன் இருந்த விக்கல்ஸ் விக்ரம், தாங்கள் கூற வரும் விஷயம் புரிவதாகவும், சிலவற்றை வெளிப்படையாகப் பேச முடியாது எனவும் அவருக்கு ஆறுதல் கூறினார். இந்த விடியோ தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதேபோன்று பிக் பாஸ் வீட்டில் 33 நாள்கள் இருந்துவிட்டு வெளியேறிய பிரவீன்ராஜ் தேவசகாயம் அளித்த நேர்காணலிலும், திவாகரிடம் பாகுபாடு இருந்ததாகக் கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் திவாகரிடம் தானும் அதனை உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள திவாகர், கேமரா முன்பு பேசும்போது கூட, சபரி, திவ்யா, விக்ரம் என தகுதியான நபர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு வாக்கு சேகரித்தார். அப்போதும் கானா வினோத் பெயரை திவாகர் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த இரு விடியோக்களையும் இணைத்து, திவாகரை பிக் பாஸ் ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். மதுரையைச் சேர்ந்தவர் என்பதாலேயே விஜே பார்வதியுடன் திவாகர் நெருக்கமாக இருந்ததாகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.