

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள திவ்யா கணேசனை ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
பாக்கியலட்சுமி, செல்லம்மா போன்ற தொடர்களில் பிரபலமான திவ்யா, தற்போது பிக் பாஸ் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. நிகழ்ச்சி முடிய ஒன்றரை வாரங்களே உள்ளதால், போட்டி தீவிரமடைந்துள்ளது.
தற்போது அரோரா, சான்ட்ரா, திவ்யா கணேசன், விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன், கானா வினோத் ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக உள்ளனர். இதில், அரோரா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் யாரேனும் நிகழ்ச்சியில் தொடர விருப்பம் இல்லை என்றால், பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம். எஞ்சிய 5 பேரில் ஒருவர் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுவார்.
இந்நிலையில், இந்த வாரத்தில் பணப்பெட்டியில் பணம் சேர்ப்பதற்காக வைக்கப்படும் டாஸ்க்குகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் திவ்யாவின் பங்களிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
மற்ற போட்டியாளர்களைப்போன்று இல்லாமல், நேர்த்தியாக அவர் அணியும் உடைகளுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
மேலும், பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு பிரச்னை என்றாலும் தயங்காமல் குரல் கொடுப்பவராகவும், தனிப்பட்ட நபர்களுக்காக என்று அல்லாமல், எது சரி என்பதன் பக்கம் நின்று பேசுவதாகவும் ரசிகர்கள் திவ்யாவை பாராட்டி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டில் இறுதிப் போட்டியாளர்களில் வீட்டுப் பணிகளை எந்தவித எதிர்பார்ப்புமின்றி, யார் மீதும் பழி போடாமல் செய்து வருகிறார். சமையல் செய்வது தனக்குப் பிடிக்கும் என்பதால், யாரையும் எதிர்பாராமல் அனைவருக்கும் சமைப்பதாக திவ்யா தெரிவித்துள்ளார்.
போட்டியின்போது விஜே பார்வதியை சபரி தாக்கியதையும் தட்டிக்கேட்டார். அதேபோன்று சான்ட்ராவை விஜே பார்வதி காரில் இருந்து தள்ளிவிட்டபோதும் விஜே பார்வதிக்கு எதிராக கடுமையாகப் பேசினார்.
பிக் பாஸ் உடன் திவ்யா அடிக்கடி உரையாடும் விடியோக்களும் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இவ்வாறு திவ்யாவின் செயல்கள் அனைத்தும் மேம்பட்ட பெண்ணாக, திறமை வாய்ந்த பெண்ணாக ரசிகர்களிடம் சென்று சேர்ந்துள்ளது.
அழகு, திறமை, பண்பு என அனைத்தும் நிறந்திருந்தும் திவ்யாவுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் அவரின் புகைப்படங்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.