

பிக் பாஸ் சீசன் 9 கோப்பையை திவ்யா கணேசன் வென்றுள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்து கோப்பையை வென்ற இரண்டாவது போட்டியாளர் என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் திவ்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா, கோப்பையை வென்றிருந்தார்.
அர்ச்சனாவுக்கு அடுத்தபடியாக வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்து இந்த சீசனின் கோப்பையை வென்றுள்ளார் திவ்யா. திவ்யாவுக்கு அடுத்தபடியாக அரோரா சின்கிளேர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 106 வது நாளான இன்று (ஜன. 18) வெற்றியாளர் யார் என்பது குறித்து விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். நேற்று இதற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில், நடிகை திவ்யா கணேசன் வெற்றி பெற்று சீசன் 9 கோப்பையை வென்றுள்ளதாகத் தெரிகிறது.
சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்கிளேர், திவ்யா கணேசன் ஆகிய 4 பேர் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர். இவர்களுக்கு கடந்த வாரம் முழுக்க மக்கள் வாக்களித்தனர்.
இதில், அதிக வாக்குகளைப் பெற்று மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளராக திவ்யா மாறியுள்ளதால், வெற்றிக்கோப்பை அவருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரூ. 50 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 4 வாரங்கள் கழித்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ப்ரஜின், சான்ட்ரா, திவ்யா கணேசன், அமித் பார்கவ் ஆகிய 4 பேர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 100 நாள்கள் நீடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் வெளியேறுவார்.
இவ்வாறு 14 வாரங்கள் போட்டியில் நீடித்து டாப் 6 இடங்களில் சான்ட்ரா, கானா வினோத், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்கிளேர், திவ்யா கணேசன் ஆகியோர் இருந்தனர்.
இதில் ரூ. 18 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு கானா வினோத் போட்டியிலிருந்து வெளியேறினார். இறுதி வாரத்தில், குறைந்த வாக்குகளைப் பெற்றதாக சான்ட்ரா வெளியேற்றப்பட்டார்.
பின்னர் எஞ்சியிருந்த சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்கிளேர், திவ்யா கணேசன் ஆகிய நான்கு பேரில் அதிக வாக்குகளைப் பெற்று திவ்யா, பிக் பாஸ் சீசன் 9 கோப்பையை வென்றுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான படப்பிடிப்பு நேற்று நடைபெற்ற நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் திவ்யாவின் புகைப்படங்களைப் பகிர்ந்து வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.