ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாகிஸ்தானின் விதியை எழுதும் இந்தியா? துரந்தர் ரிவென்ஞ் - திரை விமர்சனம்!

துரந்தர் ரிவென்ஞ் திரைப்படத்தின் விமர்சனம்....

News image
Updated On :19 மார்ச் 2026, 12:10 pm

துரந்தர் ரிவென்ஞ் - திரை விமர்சனம்

2.5/5

சிவசங்கர்

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் தி ரிவென்ஞ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

துரந்தர் கதைச் சுருக்கம்: நாயகனான ரன்வீர் சிங் இந்திய பாதுகாப்பு துறையின் ரகசிய திட்டத்தின்படி உளவாளியாக பாகிஸ்தானுக்குள் நுழைகிறார். அங்கு லியாரியைச் சேர்ந்த ரவுடியும் பலூச் தலைவருமான ரஹ்மான் டக்காய்ட் அணியில் சேர்ந்து ரஹ்மானைக் கொன்று லியாரியின் டான் ஆக மாறுகிறார்.

-----

இரண்டாம் பாகமான துரந்தர் ரிவென்ஞ்சில் நாயகன் ஹம்சா அலி (ரன்வீர் சிங்) இந்தியாவிலிருக்கும் போது என்ன செய்துகொண்டிருந்தார்? அவரை ஏன் பாதுகாப்பு துறை நாடியது? என்பவை காட்டப்படுகின்றன. ரஹ்மான் டக்காய்ட் இறந்த பின்பு லியாரி நகரத்தை இன்னொரு ரவுடி கைப்பற்றி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு முன் அந்த ரவுடியை ஹம்சா அழித்துவிட்டு சூழ்ச்சியால் லியாரியின் டான் ஆக மாறுவதுடன் பலூச்சின் தலைவராகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். பாகிஸ்தானுக்குள் நுழைந்து பாக். பெண்ணையே திருமணம் செய்து உளவாளியாக ரவுடிகளையும் குற்றவாளிகளையும் அழிக்கும் ஹம்சா அலி, பாகிஸ்தானின் அரசியலிலேயே செல்வாக்கு செலுத்தும் இடத்திற்குச் செல்கிறார். உளவு வேலைகள் சரியாகப் போய் கொண்டிருக்கும் போது இடைவேளையில் ஹம்சா உண்மையில் இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்கிரிட் என அடையாளம் காணப்படுகிறார்.

பல ஆண்டுகளாக உளவு பார்த்து எதிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்த ஹம்சா அலி எதிரிகளிடம் சிக்கிக்கொண்டாரா? முதல் பாகத்தில் கொடூரமான வில்லனாகக் காட்டப்பட்ட ஐஎஸ்ஐ மேஜர் இக்பால், ஹம்சா யார் என்பதைக் கண்டுபிடித்தாரா? என்கிற பதற்றமான கேள்விகளுக்கு இந்தப் பாகத்தில் பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு உளவாளியின் கதையைத் துரந்தர் அளவிற்கு விறுவிறுப்பாகவும் அதிக தகவல்களுடனும் சொன்ன திரைப்படம் இந்தியாவில் இல்லை என்கிற அளவிற்குப் பல உண்மைச் சம்பவங்கள் மற்றும் மனிதர்களைக் கொண்டு இது நடந்திருக்கலாம் அல்லது இதுவே நடந்திருக்க அதிக வாய்ப்பு என ஊகங்களாலேயே நிரம்பியிருக்கிறது துரந்தர் ரிவென்ஞ். படைப்பாளியாகத் தான் அறிந்துகொண்ட தகவல்கள் மற்றும் உளவுத்துறையிடமிருந்து பெற்ற உண்மை சம்பவங்களையும் இணைத்து இயக்குநர் ஆதித்யா தர் தன்னுடைய கதையொன்றையும் சொல்லியிருக்கிறார்.

ஒரு திரைப்படமாக இது எப்படியிருக்கிறது? என்கிற கோணத்தில் பார்த்தால் துரந்தர் அழுத்தமான கமர்சியல் சினிமா வடிவமாக தோன்றுகிறது. பூனை - எலி துரத்தலில் சந்தர்ப்ப சூழ்நிலையால் பூனை எலியாக மாறுவதும் எலி புலியாக மாறுவதுமான உளவு வாழ்க்கையை லாஜிக்கிற்குள் கொண்டு வந்ததுடன் சுவாரஸ்யமாக இரண்டு பாகத்தையும் சேர்த்து கிட்டத்தட்ட 8 மணிநேரத் திரைப்படமாக ஆதித்யா தர் உருவாக்கியிருக்கிறார். எங்கும் சலிக்காத ஒழுங்குதான் இதனை சாதாரண கமர்சியல் திரைப்படத்திலிருந்து அசாதாரணமான எழுத்து என எண்ண வைக்கிறது.

தாவூத் இப்ராஹிம் போன்ற நிழல் உலக ஆள்களைக் கதாபாத்திரமாகவே வைத்தது, பாலூச், பதான் இடையேயான மோதல் - அரசியல், இந்தியாவைத் தகர்க்கத் துடிக்கும் பயங்கரவாதிகள் என விரிவான பின்னணியில் பஞ்சம் இல்லாத ஒரு பரபரப்பான உளவுக்கதை வெற்றிகரமாக சொல்லப்பட்டிருக்கிறது.

Listicle image

கலை இயக்கத்தில் முதல் பாகத்தில் காட்டிய பாகிஸ்தனைவிட இரண்டாம் பாக பாகிஸ்தான் பகுதிகளும் அரசியல் சூழல்களும் அழுத்தமாக எடுக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக பாக். நிலப்பரப்புக்கே உரித்தான வெக்கையான தோற்றங்களை அப்படியே கொண்டு வந்திருக்கின்றனர். ஏ சான்றிதழ் என்பதால் ரத்தக்களறியே நடக்கிறது. ஆனால், வன்முறைக்கான தருணங்களை நேர்த்தியாக எழுதியதால் பார்வையாளர்களுக்கும் வெட்டிச் சாய்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை உளவியல் ரீதியாகவே எண்ண வைக்கிறார் ஆதித்யா தர். திறம்பட எழுதுவதின் பலமென ஏகப்பட்ட காட்சிகள் வரிசைகட்டியிருக்கின்றன.

முதல் பாகத்தில் இடம்பெற்ற இடங்கள், இரண்டாம் பாதியில் இடம்பெற்றாலும் சுவாரஸ்யமான காட்சிகளால் அது புதிதாகவே தோன்றுகிறது.

முன்பே சொன்னது போல், படத்தில் இடம்பெற்ற அஜய் சன்யால் (மாதவன்), எஸ்பி சௌத்ரி அஸ்லாம் (சஞ்சய் தத்), மேஜர் இக்பால் (அர்ஜுன் ராம்பால்), தாவூத் இப்ராஹிம் (டனிஷ் இக்பால்), ஜாவத் கனானி (அங்கித் சாகர்) என நிஜ மனிதர்களைக் கதைக்குள் கொண்டு வந்து நாம் செய்திகளின் வாயிலாக அறிந்துகொண்டிருந்த தகவல்களைக் கதையாக மாற்றிய இடத்தில்தான் துரந்தர் தனித்துவம் அடைகிறது. இந்தியாவில் இனி உளவு திரைப்படங்களுக்கான பெஞ்ச் மார்க் சினிமா துரந்தராகவே இருக்கும்.

என்ன சிக்கல்கள்? முதல் பாகத்தில் வலதுசாரி சிந்தனை கொண்ட கருத்துகளும் தேசியத்தை முதன்மையாக முன்வைக்கும் பார்வைகளும் இருந்தாலும் உண்மைச் சம்பவங்களைத்தானே எடுத்திருக்கின்றனர் என எதிர்நிலைப்பாட்டில் இருப்பவர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார் ஆதித்யா தர்.

ஆனால், இரண்டாம் பாகம் முழுக்கவே, ”பாரத் மாதா கி ஜே!” வகையாகவே துருத்திக்கொண்டு நிற்கிறது. தீவிரவாதத்துக்கும் அமைதிக்குமான கதையாக இருந்திருக்க வேண்டிய ஓர் உலகை, ‘தர்மத்தைச் செய் பலனை எதிர்பார்க்காதே’ போன்ற பகவத் கீதை மேற்கோள்களால் பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கரவாதிகள் VS இந்திய தேசியவாதிகள் என்கிற கோணத்திற்கு நகர்கிறது. முக்கியமாக, பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏன் நடைபெற்றது என்பதற்கு ஓர் காரணத்தைக் கூறியிருக்கிறார் இயக்குநர். அதாவது, பலரும் நினைத்தது போல அது முட்டாள்தனமான முடிவு அல்ல; நாட்டின் நலனிற்காக எடுக்கப்பட்ட முடிவு என. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சொந்த நாட்டின் மக்களே பாதிக்கப்படவில்லையா?

உளவாளிகளின் வாழ்க்கை என்பது தாயக்கட்டையைச் சுழற்றிவிட்டால் எட்டு விழுந்தாலும் 12 விழுந்தாலும் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கக்கூடியது. ரன்வீரின் ஒவ்வொரு பார்வையும் அப்படித்தான் இருக்கிறது. மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இறுதிக்காட்சியில் தன் தாயைத் தேடி வரும்போது ஒரு உளவாளியின் வாழ்க்கை வலி உலுக்கிப் பார்க்கிறது.

ஆதித்யா தர் மற்றும் ரன்வீர் சிங்குக்கு வாழ்நாளுக்கான படம் என்கிற பெயரைப் பெற்றுத்தரும் ஆற்றலுடன் துரந்தர் இருக்கிறது. முதல் பாகம் செய்த வசூல் சாதனையை இது முறியடிக்கும். ஆனால், திரையரங்கை விட்டு வெளியேறும்போது இப்படத்தை நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? என்கிற அழுத்தமான கேள்விகள் எழுகின்றன.

கலையின் தீவிரம் என்ன என அறிந்த ஒருவரால் எடுக்கப்பட்ட படம். சாதாரண ரசிகராக பார்த்தால் சந்தேகமே இல்லாமல் துரந்தர் ஓர் மேஜிக், தேச பக்தியாளர்களுக்கு உணர்வுப்பூர்வமானது, விமர்சகர்களுக்கு பிரசாரத் திரைப்படம். கலையில் ஒருபக்கம் மட்டும் காட்டலாமா? காட்டலாம். அந்த ஒருமுனைக்கென எழுச்சியும் வீழ்ச்சியும் இருக்கின்றன. அதை ஆதித்யா தர் நுணுக்கமாகவும் பதிவு செய்துவிட்டார். என்ன ஒன்று, இதில் சில விஷமத்தனங்களும் இருப்பதால் இனி துரந்தருக்கு முன் / துரந்தருக்குப் பின் என சில விஷயங்கள் விவாதிக்கப்படலாம்!

summary

aditya dhar and ranveer singh's dhurandhar the revenge movie release today

காதல் பூக்கும் காலத்தில்... யூத் - திரை விமர்சனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.