'வீரமே வாகை சூடும்' - விஷால் சூடுவாரா? திரை விமர்சனம்

விஷால் தயாரித்து நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்தின் திரை விமர்சனம். 
'வீரமே வாகை சூடும்' - விஷால் சூடுவாரா?  திரை விமர்சனம்

விஷால் தயாரித்து நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 

போரஸ் என்கிற வேடத்தில் விஷால். காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். சமூகத்தில் நிகழும் குற்றங்கள் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், தான் காவல்துறையில் பணியில் சேர வேண்டும் என்பதற்காக அதனைச் சகித்துக்கொள்கிறார். ஆனால், சமூக குற்றங்களால் அவரே நேரடியாக பாதிக்கப்பட்டால், என்ன ஆகும் என்பதே படத்தின் கதை. 

80களில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபல நட்சத்திர நாயகர்கள் செய்துவந்த ஆங்கிரி யங் மேன் வேடம்தான் விஷாலுக்கு. உணர்வுபூர்வமான காட்சிகளில் நிறைய தடுமாறினாலும் சண்டைக்காட்சிகளில் முறைப்பும், விறைப்புமாக கலக்கியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி. வழக்கமான ஒரு நாயகி வேடம்தான் அவருக்கு. காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்பட்டிருக்கிறார். 

யோகி பாபு இந்தப் படத்திலும் தனது வசனங்களால் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார். வெகுசில இடங்களில் மட்டும் அவரது முயற்சி பலனளித்திருக்கிறது. விஷாலின் தங்கையாக தனது யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார் ரவீனா ரவி. அவரது நடிப்பு படத்துக்கு பலமாக அமைந்திருக்கிறது. 

துளசி, ஆர்என்ஆர் மனோகர், மாரிமுத்து, கவிதா பாரதி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடங்களை குறை சொல்ல முடியாதபடி செய்திருக்கிறார்கள். வில்லன்களாக மலையாள நடிகர் பாபு ராஜ் உள்ளிட்டோர் வழக்கம்போல சப்தமாக அலறுகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. குறிப்பாக தித்திக்கிறதே கண்கள் பாடல் நான் மகான் அல்ல படப் பாடலான கண்ணோடு காதல் வந்தால் பாடலை நினைவுபடுத்துகிறது. ஆனால் பின்னணி இசையில் யுவன் அதகளம் புரிந்திருக்கிறார். குறிப்பாக இறுதி சண்டைக்காட்சியில் தனது இசையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதம் சிறப்பாக இருக்கிறது. இடைவேளைக்கு முந்தைய காட்சியில் ஒளிப்பதிவாளர் கவின் ராஜின் பணி பாராட்டும்படி இருக்கிறது. அந்தக் காட்சி நம்மை இருக்கை நுனிக்கு வந்து பார்க்க வைக்கிறது. 

பெரும்பாலான காட்சிகள் இயக்குநர் சுசீந்திரனின் நான் மகான் அல்ல, பாண்டியநாடு படங்களை நினைவுபடுத்துகின்றன. விஷாலுக்கும் அவரது தங்கை ரவீனா ரவிக்கும் இடையேயான காட்சிகள் அழுத்தமில்லாமல் செயற்கையாகக் கடந்துபோகின்றன. தொலைக்காட்சி ரீமோட்டுக்கு செல்ல சண்டைபோடுவது என அவை சாதாரண காட்சிகளாகவே இருக்கின்றன. 

அதே போல விஷால் குடும்பத்துக்கு பிரச்னை உள்ளிட்டவை மேலோட்டமாகவே இருக்கின்றன. மற்றொருபுறம் தொழிற்சாலைக்  கழிவுகளால் ஏற்படும் பிரச்னைகள் தொடர்பான காட்சிகளை நாமே பல நூறு தமிழ் சினிமாக்களில் பார்த்துவிட்டோம். இதன் காரணமாக படத்துடன் நாம் உணர்வுபூர்வமாக ஒன்ற முடியவில்லை. 

பொது இடங்களில் பெண்களுக்கு நிகழும் பிரச்னைகளை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் து.பா.சரவணன். ஆனால், அந்தக் காட்சிகளில் புதிதாக எதுவும் இல்லை என்பது சோகம்.

இரண்டாம் பாதியில் விஷாலும், வில்லன் பாபு ராஜும் எலியும் பூனையும்  ஆட்டம் ஆடுகின்றனர். ஒரு சில இடங்களில் அந்த காட்சிகள் நன்றாக இருந்தாலும், நிறைய இடங்களில் நம் பொறுமையைச் சோதிக்கவே செய்கின்றன. 

காரணம் ஒவ்வொரு வில்லன்களையும் விஷால் அடித்து பறக்க விடுகிறார். இறுதியாக  முதன்மை வில்லனான பாபு ராஜையும் அவ்வாறே செய்கிறார். தனக்கு சிக்கலாக இருப்பவர்களை இலகுவாக கொலை செய்யும் பாபு ராஜ், விஷாலை கொலை செய்ய முயற்சிகூட எடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

படத்தின் போஸ்டரில் 'தி ரைஸ் ஆஃப் காமன்மேன்' என்று வாசகம்  இடம்பெற்றிருக்கிறது. ஆனால் படம் பார்க்கும்போது ஒரு சாதாரண மனிதன், விஷால் செய்வதையெல்லாம் செய்ய முடியுமா என்ற கேள்விதான் எழுகிறது. 

தமிழ் சினிமாவில் பொழுதுபோக்கு திரைப்படங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக கடந்த வருடம் வெளியான விஜய்யின் மாஸ்டர், சிவகார்த்திகேயனின் டாக்டர், சிம்புவின் மாநாடு படங்கள் புதுமையான திரைக்கதையால்தான் பெரும் வெற்றிபெற்றன. ஆனால் எந்த புதுமையில்லாமல் வழக்கமான பொழுதுபோக்கு சினிமாவாகவே கடந்துபோகிறது வீரமே வாகை சூடும். வாகை சூடுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com