அஸ்வின் குமாரின் 'என்ன சொல்ல போகிறாய்' - திரை விமர்சனம் : காதலில் இவ்வளவு பிரச்னைகளா ?

அஸ்வின் குமார் நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் திரைப்பட விமர்சனம் 
அஸ்வின் குமாரின் 'என்ன சொல்ல போகிறாய்' - திரை விமர்சனம் : காதலில் இவ்வளவு பிரச்னைகளா ?

அஸ்வின் குமார், தேஜு அஷ்வினி, அவந்திகா, புகழ், உள்ளிட்டோர் நடித்து திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் 'என்ன சொல்ல போகிறாய்'. ஹரிஹரன் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். 

சில காரணங்களுக்காக காதலர்களாக நடிக்கும் அஸ்வின் குமாரும் தேஜு அஸ்வினியும் நிஜமாகவே காதலிக்கிறார்கள். இதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்னையே படத்தின் கதை. 

விக்ரமாக அஸ்வின் குமார். சிறுசிறு வேடங்களில் நடித்திருந்த அவருக்கு கதாநாயகனாக முதல் படம். ஒரு காதல் கதைக்கு அவர் சரியாக பொறுந்தியிருக்கிறார். உணர்ச்சிகரமான காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். 

தேஜு அஸ்வினி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். நிறைய காட்சிகளில் அவரது நடிப்புதான் படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறது. அவந்திகாவின் நடிப்பும் நன்றாக இருந்தது. புகழ் ஒரு நகைச்சுவை நடிகராக அவரது பங்களிப்பு சிறப்பாக இல்லையென்றாலும், உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்

மேலும், சுப்பு பஞ்சு, சுவாமிநாதன், டெல்லி கணேஷ், ஹரிபிரியா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை நன்றாக செய்திருக்கிறார்கள். 

அஸ்வின் குமார், தேஜு அஷ்வினி, அவந்திகா ஆகியோரை மையப்படுத்திய கதையில், மூவருக்கும் சரிசமமான வாய்ப்பை வழங்கியிருக்கிறார் இயக்குநர் ஹரிஹரன். படத்தில் அஸ்வின் மற்றும் தேஜு இடையேயான காட்சிகள் நன்றாக எழுதப்பட்டிருந்தது. பாலகுமாரனின் வசனங்கள் நிறைய இடங்களில் ரசிக்கும்படி இருந்தது. 

விவேக் - மெர்வினின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. வண்ணமயமான காட்சியமைப்பு மூலம் சிறப்பான காட்சி அனுபவத்தை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு நாதன். இயக்குநர் ஹரிஹரனின் காட்சி உருவாக்கம் நன்றாக இருந்தது.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பழக்கப்பட்ட முக்கோணக் காதல் கதை தான் இதிலும். அஸ்வின் - தேஜு ஏன் பொய்யான காதலர்களாக நடிக்கிறார்கள் என்பதற்கு அழுத்தமான காரணங்கள் இல்லை. அதுதான் படத்துக்கு அடிப்படை. அவந்திகா ஒரு எழுத்தாளராக வருகிறார். அதுவும் காதல் கதைகளை எழுதுபவர். அவர் அஸ்வின் சொல்லும் பொய்யை தொடர்ந்து நம்புவதாக காட்டுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. 

காதலியை தேர்ந்தெடுப்பதில் சிரத்தை எடுத்துக்கொள்கிறார் அஸ்வின். ஆனால் அவருக்கு ஏன் அவந்திகாவை பிடித்தது என்பதும் சரியாக சொல்லப்படவில்லை. அஸ்வினும், தேஜுவும் ஒருவரையொருவர் காதலிக்கத் துவங்குவது வரை படம் ஓரளவுக்கு சுவாரசியமாகவே நகர்கிறது. ஆனால் அதன் பிறகு படம் தொய்வடைகிறது. படத்தை எளிதாக கணிக்க முடிவதே அதற்கு காரணம். 

உணர்வுப்பூர்வமான காட்சிகளில் புகழ் நன்றாக நடித்திருந்தாலும், காமெடி காட்சிகளில் அவரது நடிப்பு யோகி பாபு, சந்தானம் போன்றோரை நியாபகப்படுத்துகிறது. குறிப்பாக படத்துக்கு துளியும் சம்பந்தமில்லாமல் வரும் நகைச்சுவை காட்சிகளை படத்தொகுப்பாளர் மிதவதணன் நீக்கியிருக்கலாம்.

நல்ல காட்சி உருவாக்கம் இருந்தும் திரைக்கதை அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், தமிழின் முக்கிய காதல் படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் இந்த என்ன சொல்ல போகிறாய். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com