இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

திரையில் விஜய்யின் அரசியல் - இயல்பானதா? திட்டமிடப்பட்டதா?

முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி... திரைப்படங்களில் விஜய்யின் நடிப்பில் அரசியல் செயற்பாடுகள் பற்றி...

News image

விஜய் - மாறுபட்ட தோற்றங்களில்... - சித்திரிப்பு

Updated On :21 ஜூன் 2026, 10:00 am IST

வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ்த் திரையுலகுக்குப் பல வெற்றிப் படங்களையும் தந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உருவெடுத்து, தேர்தலில் போட்டியிட்டுத் தற்போது தமிழகத்தின் முதல்வராகியிருக்கிறார் ச. ஜோசப் விஜய்.

நடிக்க வந்த புதிதில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற விஜய், பின்னர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து, தமிழ்த் திரையுலகின் வெற்றிப் பயணத்தின் நிறைவில் இன்று அரசியலிலும் சாதித்திருக்கிறார்.

திரையுலகில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், தனக்கென தனியிடத்தைப் பெறுவது சுலபமல்ல. அதுவும் சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் மிகவும் கடினம். அப்படியிருக்கையில், தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத மகுடதாரியாகவே வலம் வந்தார், உங்கள் விஜய். திரையுலகை விட்டுச் சென்றபோதிலும்...

தமிழ்த் திரையுலகின் பாக்ஸ் ஆஃபிஸில் தன்னுடைய சாதனைகளை முறியடிக்கத் தன்னால் மட்டுமே முடியும் என்பதுபோலத்தான் விஜய்யின் படங்கள் வெளியாகும், ஹிட் அடிக்கும்; வெளியாகும், ஹிட் அடிக்கும், ரிபீட்...

விஜய்யின் படங்களில் மாணவராக, ஆசிரியராக, ராணுவ வீரராக, காவல் அதிகாரியாக, மருத்துவராக, வழக்கறிஞராக, பாதுகாவலராக எனப் பல்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும், எந்தப் படத்திலும் அரசியல்வாதியாக விஜய் நடிக்கவில்லை. ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் படத்தில்கூட அரசியலில் கார்ப்பரேட் மூளையைத்தான் விஜய் புகுத்தியிருப்பாரே தவிர, அன்றாடம் நாம் காணக் கூடிய அரசியல்வாதிகள்போல காட்டியிருக்க மாட்டார்கள். ஆனால், அதேவேளையில் அவருடைய படங்களில் அரசியல் வசனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமிருக்காது.

அரசியல் சஸ்பென்ஸ் - துப்பாக்கி!

துப்பாக்கி படத்தில் குறிப்பிட்ட மதத்தினரைச் சுட்டிக்காட்டி புண்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டன. நேரடியாக அரசியல் எதுவுமில்லாவிட்டாலும், நாட்டின் மீது ராணுவ வீரர்கள் கொண்டுள்ள பற்றை வெளிக் கொணர்வதுமாக, ராணுவத்துக்குள் அரசியல் செய்ய முயல்பவர்களை வேரோடு அழிப்பதுமாகத் துப்பாக்கியின் கதைக்களம் அமைந்திருக்கும்.

அரசியல் சமிக்ஞையா தலைவா?

விஜய்யின் படம் வெளியாகி வெற்றியடையும் என்பதிலிருந்து மாறி, படம் வெளியாவதே வெற்றிதான் என்ற நிலையில் திரையரங்குகளில் நுழைந்த படம்தான் தலைவா. காரணம் - சுவரொட்டிகளில் படத்தின் பெயருடன் இடம் பெற்றிருந்த டைம் டூ லீட் என்ற டேக்லைன். விஜய்யின் சூடுபிடிக்கும் அரசியல் வசனம், இங்கிருந்து தொடங்கியது எனலாம்.

கார்ப்பரேட் அரசியலைக் கிழித்த கத்தி!

ஏ.ஆர். முருகதாஸின் கத்தி படத்தில் விஜய்யின் அரசியல் வசனங்கள், விவசாயிகளை வீழ்த்த முயலும் வணிக அரசியலைக் கிழித்துக் காட்டியது. பெயருக்கு ஏற்றாற்போலவே, கதையும் சரி, வசனங்களும் சரி - கூர்மைதான். விவசாயிகளை நசுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியல் தொடங்கி, தமிழக அரசியல் நிலவரங்களைத் தவிடுபொடியாகத் தெரிவித்தார் கத்தி என்கிற கதிரேசன்.

மெர்சல் - மெடிக்கல் அரசியலா? தேசிய அரசியலா?

விஜய்யை மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு அழைத்துச் சென்ற படம்தான் மெர்சல். மருத்துவத் துறையில் வணிகத்தைத் திணித்து, பணத்தை ஈட்டும் லாப நோக்குடைய துறையாகக் காட்டும் வணிக அரசியலை வெளிக்கொணர்ந்தது முதல் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி குறித்தும் விஜய் பேசியிருப்பார். இளைய தளபதியான விஜய், தளபதியாக உருவெடுத்தது இங்கிருந்துதான் - மெர்சல்.

ஒரு வாக்கால் ஒரு சர்காரையே அமைக்கலாம்...

அரசியலில் நுழைகிறாரா விஜய்? என்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைக் கேள்வியெழுப்ப வைத்த படம்தான் சர்கார். ஒரு வாக்காக இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தையும் பாரம்பரிய அரசியல்வாதிகளையும் படத்தின் வாயிலாக கடுமையாகத் தாக்கியது சர்கார்.

மாஸ்டர்பிளான்...

கரோனா தொற்றிலும்கூட தமிழ்த் திரையுலகுக்கு பிளாக்பஸ்டர் புத்துணர்ச்சி அளித்த விஜய், போதைப் பொருள்கள் வாயிலாக சிறுவர்களுக்கு இழைக்கப்படும் அரசியல் குறித்து மாஸ்டராக பாடமெடுத்தார்.

படங்களில் அரசியல் வசனங்கள் பேசினாலும், அரசியல்வாதி பாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லையோ என்னவோ, நிஜ வாழ்க்கையில் அரசியல்வாதியாகக் கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே வெற்றியும் பெற்றிருக்கிறார். திரைப்படங்களில் அவர் பேசிய அரசியலெல்லாம் இயல்பானதா? திட்டமிடப்பட்டதா? அவருக்கு மட்டுமே தெரியும்.

ரசிகர் மன்றம் தொடங்கி, மக்கள் இயக்கமாக மாற்றி, அதனைக் கட்சியாக உருவாக்கி, ஆளுங்கட்சியாக வெற்றி பெறுவது அவ்வளவு எளிதன்று. ஆனால், சாத்தியப்படுத்தியவர்தான் ச. ஜோசப் விஜய்.

நேரடி அரசியலிலும் பல்வேறு விமர்சனங்களையெல்லாம் கடந்துதான் வெற்றி பெற்றிருக்கிறார் விஜய். ஓட்டுக்கு பணம், சாதி - மதம் சார்ந்த வாக்குகள் என்பன போன்றவற்றையெல்லாம் புறந்தள்ளியிருக்கிறார். அரசியல் ஆர்வம் பெரிதாக இல்லாத இளைஞர் சமுதாயம் இந்த முறை தேர்தலில் பெரும் பங்காற்றியிருக்கிறது.

திரையுலகிலிருந்து இதுவரையிலும் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தவர்களில் எம்ஜிஆர், என்.டி. ராமாராவ் தவிர, பெரும்பாலானவர்கள் அரைகுறை வெற்றிகளுடனேயே நின்றுவிட்டனர். ஆனால், அரசியலுக்குள் நுழையும்போதும் பல்வேறு தரப்பிலும் நம்பிக்கையின்மைதான் நிலவியது. ஆனால், வெற்றி பெற்றுக் காட்டியிருக்கிறார்.

எதிர்பார்ப்புகளாலும் வெற்றிகளாலும் நிரம்பிய திரை மற்றும் அரசியல் களம் இரண்டிலுமே விஜய் என்ற பெயர் என்றுமே ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Summary

Political elements in Vijay's film performances

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.