தலைமுறைகள் தாண்டிய உறவு இது!
அகவை 85 முடிந்து, 86-இல் அடியெடுத்து வைக்கும்போது, அரைநூற்றாண்டு கால வாசகர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறது எங்கள் "தினமணி'.


அகவை 85 முடிந்து, 86-இல் அடியெடுத்து வைக்கும்போது, அரைநூற்றாண்டு கால வாசகர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறது எங்கள் "தினமணி'. அரை நூற்றாண்டு காலம் நான் தினமணியை வாசித்ததில்லை தான். ஆனால், தினமணியின் முதல்நாள் பத்திரிகையில் இருந்து, இன்று வரை அன்றாடம் எங்கள் குடும்பம் "தினமணி' வாசிக்கிறது.
எங்கள் தாத்தாவின் அப்பா தொடங்கி இப்போது என் ஒன்பது வயது மகள் வரை, எல்லாரும் "தினமணி' வாசகர்களே. தினமணியோடு எங்கள் நினைவுகள் என்றால், எதைச் சொல்வது, எதை விடுவது? எங்கள் அன்றாடங்களில் ஒன்றாக 85 ஆண்டு காலமும் தொடர்ந்து கொண்டிருக்கும் அனுபவம் அல்லவா "தினமணி' வாசிப்பு என்பது..
அதிகாலையிலேயே எங்கள் தாத்தாவை தினமணியும் கையுமாகத்தான் ஒவ்வொருநாளும் பார்த்திருக்கிறேன். நாற்காலியில் உட்கார்ந்து தினமணியை அகல விரித்து வைத்துப் படித்துக்கொண்டிருக்கும் தாத்தாவிற்கு எதிரில் போய் நின்று கொண்டு, என் பக்கம் தெரியும் தலைப்புச் செய்தியை உரக்க வாசிப்பேன். அது தாத்தாவிற்கு படிப்பதற்குத் தொந்தரவாக இருக்கும்.
அப்படியான ஒரு சமயத்தில் அவர் எனக்கு நிதானமாகப் பேப்பரில் எழுத்துக்களின் மீது விரலை வைத்துக்கொண்டு மனதிற்குள்ளேயே வாசிக்கச் சொல்லிக் கொடுத்த அந்த நாள் இன்றும் நினைவில் பசுமையாக இருக்கிறது.
அதேபோல, எட்டு வயது இருக்கும்போது, செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பது என்னுடைய லட்சியமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் தினமணியின் தலைப்புச் செய்தியை ஒரு செய்தி வாசிப்பாளருக்கே உரிய பாங்கோடு முருங்கைக் கட்டையை மைக்காகப் பயன்படுத்தி எங்கள் வீட்டின் கூடத்தில் அமர்ந்து அனைவருக்கும் வாசித்துக் காட்டுவேன். "தமிழ் வாசிப்பு' என்பதும் "செய்தி வாசிப்பு' என்பதும் தினமணியின் வாயிலாகவே எனக்குள் வந்தது என ஒரு செய்தி வாசிப்பாளராக ஆணித்தரமாக நம்புகிறேன்.
இப்போது போலவே, அப்போதும் தினமணியின் "தமிழ்மணி' பகுதி மிகப்பிரபலம். அதில் வரும் கட்டுரைகள் பற்றி எங்கள் தாத்தா அவர் நண்பர்களோடு விவாதம் செய்வதையும் பள்ளி நாள்களில் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆநாசி அவர்களைப் போல எவருக்கும் எழுத்தாற்றல் இல்லை என்று நம்பினார் தாத்தா. ஆம்பூர் நாணு ஐயர் சிவராமன் என்கிற ஏ.என். எஸ். அவர்களின் மிகத் தீவிர ரசிகர். "கணக்கன்' என்ற பெயரில் அவர் எழுதும் பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகளை வாசித்தார் என்பதை விட அவற்றை நேசித்தார் என்று சொல்வேன். "அரைகுறை வேதியன்' என்ற புனைப்பெயர் வைத்துக் கொண்டதை ரசித்து ரசித்து சொல்வார். அந்தப் பெயரை பல சமயங்களில் நகைச்சுவைக்காக எங்கள் வீட்டில் அப்போது பயன்படுத்துவார்கள்.
தாத்தா காலமான பிறகு அவரது பெட்டியை உடமைகளை எடுத்துப் பார்த்தோம். பெட்டியில் சித்தர் பாடல் புத்தகங்களோடு ஏ.என். சிவராமன் அவர்களின் தலையங்கங்கள் கத்தரித்து எடுக்கப்பட்டு ஒரு பெரிய கிளிப் போட்டு இருந்தது. அதேபோல நிலைக் கண்ணாடிக்குப் பின்னால் ஓலை விசிறியோடு "கணக்கன்' என்ற பெயரில் எழுதிய பல கட்டுரைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
சுதந்திரம் பெற்ற போது 1947 ஆகஸ்ட் 15 அன்று எழுதப்பட்ட தலையங்கம் சுவரில் மாட்டப்பட்டிருந்த எங்கள் கொள்ளுப்பாட்டியின் படத்திற்கும் சட்டகத்திற்கும் இடையே பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.
இப்போது என் மகள் கோதை, சிறுவர் மணியின் பல பகுதிகளை, விளையாட்டுப் பகுதியில் வரும் பல செய்திகளை அப்படி வெட்டி எடுத்து ஒரு ஆல்பம் போல சேமித்து வைக்கிறாள். தலைமுறைகள் தாண்டி இந்தப் பழக்கம் எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து கொண்டிருப்பது சுவாரஸ்யமானதும் மகிழ்ச்சியானதும் கூட.
என்னுடைய வளரிளம் வயதில் வண்ணமயமான விளம்பரங்கள் படங்கள் இடம்பெறும் பத்திரிகைகள் அதிக அளவில் வந்து கொண்டிருந்தன. ஒரு நாள் என் சித்தப்பாவிடம், "நாம் ஏன் "தினமணி' மட்டுமே தொடர்ந்து படிக்கிறோம்?'' என்றேன்.
"உள்ளூர் செய்திகள் மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்று நினைத்தால் எந்தப் பத்திரிக்கை வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம் ஆனால் உலகத்தில் உள்ள பல விஷயங்களையும் நீ தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் தினமணியைத் தான் படிக்க வேண்டும்'' என்றார் அவர். சித்தப்பாவின் பதில் எனக்குப் புரியத் தொடங்கியது என்னுடைய கல்லூரி நாள்களில்தான்.
"தினமணி' தனக்கென வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளோடு செயல்படுகிறது என்றபோதிலும் அதன் ஆசிரியர்கள் மாற்றத்தையும் புதுமையையும் ஏற்பதில் தயக்கம் காட்டாதவர்களாக அமைந்திருக்கிறார்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உண்டு. "ஏ.என்.எஸ்.' தனது தலையங்கங்களில் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று தாத்தா நம்பினார். மிகச்சிறந்த அறிவாளியான ஐராவதம் மகாதேவன் அவர்கள் இதே கருத்தைக் கொண்டிருந்ததாக என் பெரியப்பா சித்தப்பா நம்பினார்கள். மாலன் அவர்களின் புதுமையை ஏற்கும் விதத்தை நானும் என் சகோதரர்களும் ஆச்சரியத்தோடு பார்த்திருக்கிறோம். இன்றைக்கும் அந்தப் பண்பு ஆசிரியர் நாற்காலியில் அமர்வோரிடம் தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் "தினமணி' இன்றும் பொலிவோடு திகழ்வதற்குக் காரணம்.
தினமணியோடு எங்கள் அனுபவங்களை சொல்லிக்கொள்ளத் தனி புத்தகமே எழுதலாம். இன்னும் பல தலைமுறைகளுக்கு தினமணி தங்கள் தமிழ் சேவையை அறிவு வேள்வியைத் தொடர வேண்டும் என்று தினமணியின் நான்காம் தலைமுறை வாசகியான நானும் வாழ்த்துகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...