இந்திரா காந்தி பற்றி காரியக் கமிட்டி முடிவு - தலையங்கம்

இந்திரா காந்தியை காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருந்து "வெளியேற்றுவது' (அதாவது அவர் காங்கிரஸ் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவரல்ல என்று அறிவிப்பது) என்று காரியக் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியாய்விட்டது

இந்திரா காந்தி பற்றி காரியக் கமிட்டி முடிவு

இந்திரா காந்தியை காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருந்து "வெளியேற்றுவது' (அதாவது அவர் காங்கிரஸ் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவரல்ல என்று அறிவிப்பது) என்று காரியக் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியாய்விட்டது. இது எதிர்பார்க்கப்பட்டதே. இதன் விளைவாக என்ன காரியங்கள் நடக்கக் கூடும் என்பது பற்றி ஹேஷ்யங்கள் ஏராளமாக ஏற்கனவே பிரசுரமாகியிருக்கின்றன. இது பற்றி இப்போது யாரும் எதுவும் சொல்வதற்கில்லை.

சிறிதுகாலம் இரு கோஷ்டிகளும் பரஸ்பரம் ஏசிக்கொண்டு, அந்த ஏச்சு முடிந்து, பார்லிமெண்டரி தேர்தல் நெருங்கும்போது யார் எப்படி நிற்கிறார்கள் என்பதைப் பொருத்துத்தான் மக்கள் தமது மனதில் "யாருக்கு வோட்டு'' என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். யார் செய்தது தவறு என்பது பற்றியும் நாம் சர்ச்சை செய்வதில் அர்த்தமில்லை. ஏனென்றால் சண்டை போட்டுக் கொள்பவர்கள் யார் யாரை தம் பக்கம் இழுக்கலாம் - அதற்கு உதவியாக என்ன கோஷங்கள் தேவையாகும் - "காங்கிரஸ்'' என்ற பெயரை வைத்துக் கொள்ளும் உரிமை எந்த கோஷ்டிக்கு என்பதை நிர்ணயிக்க கோர்ட்டுக்குப் போகலாமா - என்பதில்தான் அக்கறை கொள்வார்களேயொழிய, நியாய அநியாயத்தை பற்றிய பிரச்னையே அவர்கள்செவியில் விழப் போவதில்லை. ஆதலால் பொதுவாக நாட்டு மக்கள் முன் உருவாகும் பிரச்னையைப் பற்றியே இன்று எழுதுகிறோம்.

காங்கிரஸுக்குள்ளே ஒரு கோஷ்டியைவிட மற்றொரு கோஷ்டிக்கு அதிக ஆதரவு இருக்கலாம். ஆனால் பொதுத் தேர்தலில் வோட்டர்கள் மத்தியில் இந்த கோஷ்டிகள் மட்டுமின்றி இதர கட்சிகளும் நிற்குமாதலின் இரண்டு கோஷ்டியுமே முறியடிக்கப்படுவது சாத்தியம். இதை உணராமல் (அல்லது உணர்ந்தே) இரு தரப்பினரும் சூதாடித்தனமாக "வீம்பு போட்டு'' நடந்து கொண்டிருக்கின்றனர்.

டில்லியிலும் "அஜாய் முகர்ஜி' நிலைமை

1967-ல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு வங்காளத்தில் அஜாய் முகர்ஜி, கம்யூனிஸ்டு கட்சிகளுடன் சேர்ந்து மந்திரி சபையை அமைத்தார். கம்யூனிஸ்ட் பிடிப்பிலிருந்து அஜாய் முகர்ஜியை விடுவித்து ஒரு "தாற்காலிக வங்காள மாநில காங்கிரஸ் கமிட்டி''யின் ஆதரவுடன், பல காங்கிரஸ்காரர்களின் அபிமானத்தைப் பெறக்கூடியதான ஒரு மந்திரிசபையை அமைக்க இந்திரா (நந்தா மூலம்) சில ஏற்பாடுகள் செய்தார். இந்திரா முயற்சிக்கு அப்போதைய காங்கிரஸ் "தலைமைப் பீடம்'' ஆதரவு தராததால், "கம்யூனிஸ்ட் துணையுடன் அஜாய் முகர்ஜி'' என்ற நிலைமை மாறி, கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தில் அஜாய் முகர்ஜி என்ற நிலைமை வங்காளத்தில் ஏற்பட்டது. பிறகு வங்காளத்தின் நிலைமை எப்படி உருவாயிருக்கிறது என்பது யாவருக்கும் தெரிந்ததே. என்ன செய்வதென்று தெரியாமல் அஜாய் முகர்ஜி திணறுகிறார் வங்காளமும் திணறுகிறது!

இப்போது டில்லியிலேயே ஒரு அஜாய் முகர்ஜி நிலைமை உருவாகியிருக்கிறது என்பதுதான் சிறிது காலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகளின் சாராம்சம். வங்காள காங்கிரஸில் 1967-க்கு முன்னர் அஜாய் முகர்ஜிக்கும் அதுல்ய கோஷுக்குமிடையே இருந்த சண்டை, தத்துவ வாதங்கள் பற்றிய சண்டையோ வேலைத் திட்டம் பற்றிய சண்டையோ அல்ல. காங்கிரஸில் (மந்திரியாகவோ, ஸ்தாபனத் தலைவராகவோ) கிடைத்த ஆதிக்கத்தை அதுல்ய கோஷ் எப்படி உபயோகித்தார் என்பது பற்றிய சண்டை. இப்போது அனைத்திந்திய மட்டத்தில் நடப்பதும் அதுபோலத்தான்.

இருதரப்பிலும் ஒரே "இஸ்டுகள்'

காரியக் கமிட்டி மெஜாரிட்டிக்கும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதவி பெற்ற பிரதம மந்திரிக்கும் இப்போது நடக்கும் சண்டை அதுல்ய கோஷ் - அஜாய் முகர்ஜி சண்டை போன்றதே. ஒரே ஒரு வித்தியாசம்தான். அதுல்ய - அஜாய் சண்டையை தத்துவவாதச் சண்டையாக இருவருமே சித்தரிக்கவில்லை. ஆனால் இப்போது அனைத்திந்திய சண்டை போல சித்தரிக்க இந்திரா முயலுகிறார். இதுதான் வித்தியாசம்.

உண்மையில் இருதரப்பிலும் இதை தத்துவவாதப் பூசலாகச் சித்தரிப்பது, மக்களை ஏமாற்றும் வித்தையே. இரு வகையினரும் இரு சார்பிலும் இருக்கிறாரகள்!

பிளவு பூர்த்தியானவுடன் "நான்தான் சோஷலிஸ்டு; அவர் அல்ல'' என்று இருதரப்பினரும் சொல்வார்கள். அதோடு நிற்காது. பதவியில் இருப்பவர்கள் தமது "சோஷலிஸ பக்தியை'' வெளிப்படுத்துவதற்காக, இந்த தேசத்தின் இப்போதையத் தேவைக்கு சம்பந்தமில்லாத சர்க்கஸ் வித்தை மாதிரி ஏதாவது செய்வார்கள்.
 சர்க்காரில் மந்திரிகளாக இருப்பவர்கள், சர்க்கார் வேலையை கவனித்து பல மாதங்களாகிவிட்டன. தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டிய காரியங்கள் மட்டுமல்ல, பொருளாதாரம் செயல்படுவதற்கு வேண்டிய நிர்வாக வேலைகளே கவனிப்பாரற்று தேங்கிக் கிடக்கின்றன. தமது கோஷ்டிக்கு பலம் சேர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்ற கவலையே இல்லை. அனைத்திந்திய மட்டத்தில் இப்படியொரு நிலைமை உருவாவது தேசத்தின் துர்பாக்கியமேயாகும்.

இவர்களுக்கு "பெரியவர்கள்'' யாருமில்லை

அனைத்திந்திய மட்டத்தில் உருவாகும் நிலைமை உண்மையிலேயே பரிதாபமானதாகும். தம்மைவிடப் பெரியவர் என்று இருதரப்பினரும் கருதக்கூடியவராக உயரிய ராஜதந்திர பிரமுகர் இந்நாட்டில் உருவாகாததால் சமரஸம் செய்து வைக்கவே ஆள் இல்லை! உதாரணமாக இந்திரா தம்மைவிட பெரியவராக யாரையேனும் கருதுகிறாரா! காரியக் கமிட்டியினர் தம்ûûவிடப் பெரியவராக யாரையேனும் மதிக்கிறார்களா! இரு தரப்பினரும் வறட்டு ஜம்பம் பிடித்து வீம்பு செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு நஷ்டம் இல்லை. நாட்டின் நலன்தான் பாழாகிறது!!!

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி..

"காங்கிரஸ் பிளவுபடுகிறதே'', "காங்கிரஸ் அழிந்து போகிறதே!'' என்பதல்ல தினமணியின் கவலை. இருக்கிற கட்சிகள் போதாவென்று, அரசியல் அரங்கத்தில் கட்சிகளின் தொகை பெருகிறதே என்பதுதான் பரிதாபப்பட வேண்டிய விஷயம். இந்திரா நிலைதான் நியாயமானது அல்லது காரியக் கமிட்டித் தலைமையின் நிலைதான் நியாயமானது என்று நாம் சொல்லவில்லை. (1) மொரார்ஜியை நீக்குவதில் சாதாரண மரியாதைகளைப் புறக்கணித்தது, (2) சஞ்சீவி ரெட்டியின் நியமனப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு காலைவாரிவிட்டது - ஆகிய கண்ணியமற்ற இந்த இரண்டு நிகழ்ச்சிகளை மறந்துவிட்டால் இருதரப்பினரும் ஒரே மாதிரிதான் என்பது தினமணியின் கருத்து. "எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி'' என்ற ஆராய்ச்சி இப்போது பொருளற்றதாகிவிட்டது.

நினைவுபடுத்தக் கூடிய ஒரு கதை

ஒரு வள்ளலிடம் இரண்டு புலவர்கள் பரிசு பெறச் சென்றார்கள். அந்த வள்ளல் இரு புலவர்களையும் ஒவ்வொருவராக தனியே அழைத்து மற்றவரைப் பற்றி விசாரித்தார். முதல் புலவர், இரண்டாவது புலவரைப் பற்றி "அவனென்ன புலவன்! அவன் ஒரு கழுதை!'' என்றாராம். இரண்டாவது புலவரிடம் கேட்டபோது, "அவன் புலவனா அவன்; அவன் ஒரு எருமை'' என்றாராம். பிறகு வள்ளல் இருவரையும் அழைத்து, "நீங்கள் இருவரும் மிகவும் மதிப்புக்குரியவர்கள். இருவர் சொல்லையும் நான் உண்மையென்று நம்புகிறேன். இங்கு மனிதர்களுக்கு மட்டுந்தான் பரிசு கொடுக்கிறோம்'' என்றாராம். இது நதமல் என்ற ஒரு ஜைன முனிவர் தொகுத்துப் பிரசுரித்துள்ள ஒரு கதைக் கோவையிலிருந்து எடுத்தது.

இப்போது காங்கிரஸில் இருதரப்பினரும் ஒருவரைப் பற்றி மற்றவர் சொல்லுவதைக் கேட்டால், அநேகமாக பொதுஜனங்கள் இந்தக் கதையிலுள்ள வள்ளல் வந்த முடிவுக்கே வர வேண்டியிருக்கும்.

இந்தக் கட்டத்தில் நாம் வாசகர்களுக்குச்சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். பதவியில் ஆசையில்லாதவர்கள், விஷயம் தெரிந்தவர்கள், பெரிய இடத்தில் நடக்கும் சின்னத்தனங்கள் பற்றிய சர்ச்சையில் தமது சிந்தனையைப் பறிகொடுக்காமல், நாட்டின் ஸ்திரத்தன்மை, நாட்டின் முன்னேற்றம் இரண்டையும் மட்டும் கருத்தில் கொண்டு சிந்தனை செய்ய வேண்டிய காலம் இது. ஆதிக்கப் பூசல்களுக்கு அப்பால் நின்று "இஸம்''களுக்கு ரஜா கொடுத்து, சிந்தனை செய்ய வேண்டும்.

இந்த இரண்டு கோஷ்டிகளில் எந்த கோஷ்டி மக்களின் ஆதரவுக்கு உரியது, இரண்டுமே மக்கள் புறக்கணிக்க வேண்டியவையா, என்பது பற்றி மக்கள் அவசரப்பட்டு முடிவுக்கு வர முடியாது. பொதுத் தேர்தலுக்கு நிற்கும்போது அவை என்ன நிலையில் நிற்கின்றன என்பதைக் கொண்டுதான் அதை முடிவு செய்ய வேண்டும்.

காங்கிரஸ் பிளவுப்பட்டதை விமர்சனம் செய்து எழுதப்பட்டது இந்த தலையங்கம். (13.11.1969)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com