சமர்ப்பணம் - தலையங்கம்

தினமணி இன்று தனது 54-ம் ஆண்டுப் பணியினைத் துவங்குகிறது. அமைப்பிலும் பொருளடக்கத்திலும் செய்யப்பட்டுள்ள சிற்சில மாறுதல்களை வாசகர்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்.

சமர்ப்பணம்

தினமணி இன்று தனது 54-ம் ஆண்டுப் பணியினைத் துவங்குகிறது. அமைப்பிலும் பொருளடக்கத்திலும் செய்யப்பட்டுள்ள சிற்சில மாறுதல்களை வாசகர்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்.
 

மற்ற எல்லாத் தொழில்துறைகளிலும் போலவே பத்திரிகைத் துறையிலும் அறிவியல் தாக்கத்தால் பற்பல மாறுதல்களும் முன்னேற்றங்களும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. கையால் ஒவ்வொரு எழுத்தாக அச்சுக் கோப்பது போய் மோனோ டைப், லைனோ டைப் ஆகிய அச்சுக் கோக்கும் இயந்திரங்கள் வந்தன. இப்பொழுது ஈயத்தாலான அச்சுக்கள் அறவே நீக்கப்பட்டு கம்ப்யூட்டரின் உதவியால் இயங்கும் போட்டோ-கம்போசிங் கருவிகள் புழக்கத்தில் வந்துவிட்டன. இனியும் பத்திரிகைத் துறையில் செய்திகளைச் சேகரித்து அனுப்புவதிலும் அச்சிடுவதிலும் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் இவையெல்லாம் வெளித்தோற்றத்தில் ஏற்படும் மாறுதல்களேயாகும். தினமணி தோன்றிய நாள் முதல் இன்று வரை கடைப்பிடித்து வந்திருக்கும் அடிப்படைக் கொள்கைகளில் யாதொரு மாறுதலும் ஏற்பட்டதில்லை. இனிமேலும் ஏற்படாது என்றே கூறலாம். அவ்வப்பொழுது இக்கொள்கைகளை நினைவுபடுத்திக் கொள்வது நமக்கென வகுத்துக்கொண்ட லட்சியப் பாதையிலிருந்து நாம் விலகாமலிருக்கத் துணை புரியும்.

தினமணியின் முகப்பில் இன்றும் நிலைத்து நிற்கும் மணிக்கொடி. அதன் தேசீய பாரம்பரியத்திற்கு அடையாளமாகத் திகழ்கிறது. விடுதலைப்போரில் உதயமான தினமணிக்கு நாட்டுப்பற்றும் தேசீய மனப்பான்மையும் கூடப்பிறந்த குணங்களாகும். அன்னியராட்சியில் நடந்த அடக்குமுறைகளை அச்சமின்றி எதிர்த்தும் மக்களிடையே தேசபக்தியைப் பரப்பியும் எழுதி வந்த தினமணியின் தொண்டு தேசீய இயக்கத்தின் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது.

பல்வேறு மதங்களைப் பின்பற்றினாலும், பல்வேறு மொழிகளைப் பேசினாலும், பல்வேறு பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டிருந்தாலும், இந்திய மக்கள் அனைவரும் ஓரினத்தைச் சேர்ந்தவரே; குடிமக்கள் அனைவருக்கும் தத்தம் மரபுகளின்படி வாழ சம உரிமைகளை அளிப்பதால்தான் இந்திய ஜனநாயகம் பூரணத்துவம் பெறும்; இக்கொள்கைகளின் அடிப்படையிலேயே தினமணியின் எழுத்துக்கள் அமைந்துள்ளன.

வேற்றுமைகளில் ஒற்றுமை கண்ட இந்திய சமுதாயத்திற்கு ஏற்ற அரசியல் முறை ஜனநாயகம் ஒன்றேதான். நாட்டில் ஜனநாயக மரபுகள் வேரூன்றித் தழைக்க பத்திரிகைகள், மையத்திலும் மாநிலங்களிலும் செயல்படும் அரசுகளையும் ஆளுங் கட்சிகளையும் விழிப்புடன் கண்காணித்து வரவேண்டும். ஊழல்களையும் ஜனநாயக முறைகளுக்குப் புறம்பான அடக்குமுறை நடவடிக்கைகளையும் முழுமூச்சுடன் எதிர்த்து நிற்க வேண்டும். ஆகையால்தான் Eternal Vigilance is the price of liberty என்ற மூதுரைக்கேற்ப தினமணி செயலாற்றி வருகிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள நெருக்கடி நிலை என்ற சாக்கில் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பத்திரிகைகளின் சுதந்திரத்தையும் பறிக்க முயன்றபொழுது தினமணியும் மற்ற எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளும் ஜனநாயக மரபுகளை மீட்கப் போராடி அதில் வெற்றி பெற்றது நாடறியும். அண்மையில் மேலிடத்து ஊழல்களை வெளிப்படுத்தி எழுதி வரும் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் மறுமுறையும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கிறது. இம்முறையும் ஜனநாயகமே வெற்றி பெறும் என்பதும் பத்திரிகைச் சுதந்திரங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் உறுதி. மக்களின் விழிப்புணர்வும் பத்திரிகைகள் அச்சமின்றி சுதந்திரமாகச் செயல்படுவதுமே ஜனநாயக நெறிகளைக் காக்கும் வழிகளாகம்.

ஆங்கில மோகம் ஓங்கியிருந்த நாட்களில் தமிழில் தேசீயத்தை வளர்க்கத் தோன்றியது தினமணி. தாய்மொழியாகிய தமிழில் எழுதினால்தான் மக்களின் உள்ளத்தைத் தொடமுடியும் என்றுணர்ந்து இப்பத்திரிகை எளிய தமிழ் நடையில் தலையங்கங்களையும் சிறப்புக் கட்டுரைகளையும் எழுதி பட்டி தொட்டிகளிலும்கூட அரசியல் விழிப்பை ஏற்படுத்தியது. தமிழால் தேசீயமும், தேசீயத்தால் தமிழும் வளர்ந்த இக்காலகட்டத்தில் தினமணி செய்த சீரிய தொண்டை நாடறியும். தமிழிலேயே எழுத வேண்டும். தமிழில் எழுத முடியாதது ஒன்றுமேயில்லை என்ற அடிப்படையில் தமிழ்ப்பற்றை வளர்த்த அதே நேரத்தில் மற்ற மொழிகளின் மீது வெறுப்புணர்ச்சியைத் தூண்டக்கூடாது என்பதிலும் தினமணி மிகவும் கவனமாக இருந்து வந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் தமிழில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சியில் அறிவியலின் தாக்கம் மிகவும் முக்கியமானது. தமிழ் பாடமொழியாக திறனுடன் செயல்பட வேண்டுமெனில் பல்வேறு அறிவியல் துறைகளிலும் உள்ளகலை நுணுக்கச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல் வேண்டும். இயற்பியல், வேதியியல், கணிதம், வானவியல், உயிரியல், மருத்துவம், விவசாயம் போன்ற பற்பல அறிவியல் துறைகளிலும் நிகழும் புதிய கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் விளக்கி எளிய தமிழில் ஏராளமான கட்டுரைகளையும் மொழி பெயர்ப்புக்களையும் வெளியிட்டு வரும் தினமணி தமிழில் அறிவியல் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றி வந்திருப்பதை வாசகர்கள் நன்கறிவார்கள். 21ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அறிவியலின் முக்கியத்தை முழுதும் உணர்ந்து இத்துறையில் செய்திகளையும் கட்டுரைகளையும் மேலும் விரிவாக்கித் தரவும் தமிழில் அறிவியல் சொல்லாக்கத்திற்கு ஊக்கம் அளிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.
நாட்டுப்பற்று, சமுதாயத்தின் ஒருமைப்பாடு, ஜனநாயக மரபுகள், தமிழ்த்தொண்டு, அறிவியல் வளர்ச்சி என்ற இவ்வைந்தும் தினமணியின் பஞ்சசீலக் கொள்கைகளாகும். இப்பணிகளுக்காக இந்நன்னாளில் எம்மை மறுமுறையும் அர்ப்பணித்துக் கொள்கிறோம்.

தினமணியின் 54-ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் இத்தலையங்கம் எதிர்கால திட்டங்களையும் உரைக்கிறது. (11.9.1987)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com